டெல்லியில் போதைப் பொருள் தடுப்பு காவல்துறை மற்றும் டெல்லி சிறப்பு காவல்துறை சார்பில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி சோதனை செய்ததில் 50 கிலோ ரசாயன வகை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்திருந்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், கடந்த 3 ஆண்டுகளில் 3 ஆயிரத்து 500 கிலோ போதைப் பொருட்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும் இதன் மொத்த மதிப்பு ரூ.2 ஆயிரம் கோடி எனவும் தெரிய வந்தது.
தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்தப் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டது திரைப்படத் தயாரிப்பாளரும் தி.மு.கவின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராக இருந்த ஜாஃபர் சாதிக்தான் என்பது தெரியவந்தது. மேலும் கடத்தல் கும்பலுக்கு தலைவனாக ஜாஃபர் சாதிக் செயல்பட்டதும் உறுதியாகி கைது செய்யப்பட்டிருந்தார். இந்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த ஜாஃபர் சாதிக்கை சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். தொடர்ந்து ஜாஃபர் சாதிக்கின் பினாமி என்று கூறப்பட்ட ஆவடியைச் சேர்ந்த ஒருவர் வீட்டில் எட்டு மணி நேரமாக சோதனை நடைபெற்று ஜாஃபர் சாதிக்கின் சகோதரரும், துணை நடிகருமான மைதீன் என்பவருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஏற்கனவே ஜாஃபர் சாதிக்கின் மனைவியிடம் விசாரணை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த வழக்கில் ஜாஃபர் சாதிக்கின் மனைவி ஆமினாவின் வங்கிக் கணக்கில் இருந்து ஒரு கோடி ரூபாய் இயக்குநர் அமீர் வங்கிக் கணக்கிற்கு பண பரிவர்த்தனை நடந்துள்ளதாக அமலாக்கத்துறை கூறியதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் இத்தகவலை மறுத்து, அமீர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில், “போதைப் பொருட்கள் தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் ஜாஃபர் சாதிக்கின் மனைவி ஆமினாவின் வங்கிக் கணக்கில் இருந்து ஒரு கோடி ரூபாய் எனது வங்கிக் கணக்கிற்கு பண பரிவர்த்தனை நடைபெற்றதாகவும், இந்த தகவல் அமலாக்கத்துறையினரிடம் இருந்து வந்ததாகக் கூறி நேற்றைய முன்தினம் (23.07.24) அன்று சில பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களில் செய்திகள் வெளியானதை என்னால் பார்க்க முடிந்தது. அந்தச் செய்தியில் துளியும் உண்மை இல்லை.
ஜனநாயகத்தின் நான்காவது தூணாக இருக்க வேண்டிய ஊடகங்கள் வெறும் பரபரப்பிற்காக என்னைப் போன்றவர்களைப் பற்றி தவறான தகவல்களை தலைப்புச் செய்தியாக வெளியிடுவதால் மக்களிடையே தங்களது நன் மதிப்பையும், நம்பகத்தன்மையையும் இழக்க நேரிடுமே தவிர, வெறொன்றும் கிடைக்கப் போவது இல்லை. இந்த வழக்கின் துவக்கத்திலிருந்தே என்.சி.பி. மற்றும் அமலாக்கத்துறையினரின் விசாரணைக்கு எனது முழு ஒத்துழைப்பை நான் வழங்கி வருகிறேன். அப்படி இருக்கையில் என்னைப் பற்றி சில தொலைக்காட்சி ஊடகங்களும், சில சமூக வலைத்தள ஊடகங்களும் தவறான தகவல்களையே தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் தினமும் பொய் சொல்வதையே தொழிலாகக் கொண்ட ஒரு யூட்யூபர் தனது சேனலில் என்னைப் பற்றி தவறான தகவல்களையே நேற்றைய தினமும் தந்திருக்கிறார்.
சமூகத்தின் அமைதிக்கு பங்கம் விளைவித்து பணம் சம்பாதிக்கும் நோக்கத்தைக் கொண்ட இது போன்ற நபர்கள், "இல்லாத ஒன்றை இருப்பது போல் சித்தரித்து.." எப்படியாவது இந்த வழக்கில் என்னைச் சேர்த்துக் கைது செய்து விட வேண்டும் என்று விரும்புவது ஏன்? மத்திய, மாநில அரசுகளோ, தனி நபரோ மானுடம் கொல்லும் செயல்பாட்டில் ஈடுபட்ட போதெல்லாம், ஒரு சக மனிதனாக, தோழனாக, சுயநல நோக்கின்றி எனது எதிர் கருத்துகளையும், போராட்ட செயல்பாடுகளையும் முன்னெடுத்து வந்துள்ளேன் என்பதைத் தவிர என்னிடம் வேறு குறைகள் ஏதும் இல்லை. என்னைப் போன்றோரை கருத்தியல், கொள்கை, கோட்பாடு, சிந்தாந்த ரீதியாக எதிர்கொள்வதே சனநாயக மாண்பு - அவதூறுகளின் மூலம் வீழ்த்துவது அல்ல.! என்பதையும், எந்த விதமான சட்டவிரோத செயல்களிலோ, சட்டவிரோத பண பரிவர்த்தனையிலோ நான் ஒரு போதும் ஈடுபட்டது இல்லை என்பதையும் மீண்டும் மீண்டும் உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.மேலும், சமூகத்தின் நலனில் அக்கறையுள்ள, பொறுப்புள்ள ஊடகங்கள் தங்களது ஊடக தர்மத்தை மறந்து நேர்மைக்கு மாறாக இது போன்ற செய்திகளை ஆதாரமில்லாமல் வெளியிட வேண்டாம் என்பதையும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.