சென்னை அசோக் நகர் மற்றும் சைதாப்பேட்டை அரசு பள்ளியில் ஆசிரியர் தினத்தன்று ‘தன்னை உணர்ந்த தருணங்கள்’ என்ற தலைப்பில் மகாவிஷ்ணு என்பவர் மாணவர்களிடையே சொற்பொழிவாற்றியிருந்தார். அதில் ஆன்மிகம், மறுபிறவி, பாவம் என மூடநம்பிக்கை கருத்துகளை பேசியிருந்தார். அப்போது அங்கிருந்த மாற்றுத் திறனாளி தமிழ் ஆசிரியர் சங்கர், கோபப்பட்டு பள்ளிக்கூடத்தில் அறிவியலுக்கு எதிராக மூடநம்பிக்கைகளைப் பற்றி பேசக்கூடாதென மகாவிஷ்ணுவை கண்டித்துள்ளார். பின்பு இருவருக்கும் வாக்குவாதம் நடந்தது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி பேசுபொருளானது.
இந்த விவகாரத்தில் அசோக் நகர் பள்ளியின் தலைமை ஆசிரியை தமிழரசி பணியிடை மாற்றம் செய்யப்பட்டார். இதை தொடர்ந்து மகாவிஷ்ணு மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நிலையில் கல்வி நிலையங்களில் திரைப்படங்களின் இசை வெளியீட்டு விழாக்கள் நடத்த கூடாது என அமீர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “பிற்போக்கு தனமான, மூட நம்பிக்கையான பேச்சுகளை கண்டுகொள்ளாத ஆசிரியர்கள் மத்தியில் தனது ஞானக்கண்களால் தட்டிக்கேட்ட தமிழ் ஆசிரியர் சங்கரை பாராட்டுவதோடு மட்டுமின்றி அதே பள்ளியில் தலைமை ஆசிரியர் பொறுப்பு வழங்க வேண்டுமென்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாட்டு கல்வி நிறுவனங்களில் இன்ஸ்டாகிரால் ரீல்ஸ் மற்றும் யூட்டியூப் மூலம் பிரபலமானவர்களை அழைத்து மாணவர்களியே உரையாற்ற அனுமதிப்பது தொடர்ந்து நடந்து வருகிறது. இது மிகவும் வேதனைக்குரிய விஷயமாகும்.
அதே போல, பள்ளியில் நடத்தப்படும் கலைநிகழ்ச்சிகளுக்கு தலைமை ஏற்க அல்லது சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள திரைக் கலைஞர்கள் பங்கு பெறுவது ஏற்புடையதாகவே இருந்தாலும். வணிக நோக்கத்திற்காக தயாரிக்கப்படும் பிரபலமானவர்களின் திரைப்பட இசை வெளியீட்டு விழாக்களையும் திரைப்பட அறிமுக விழாக்களையும் கல்வி நிறுவன வளாகங்களில் நடத்துவது மாணவர்களுக்கு கேடு விளைக்கும். மாணவர்களின் எதிர்காலத்திற்கும் பொது சமூகத்திற்கும் எந்தவித பயனும் அளிக்காத திரைப்பட இசை வெளியீட்டு விழா மற்றும் அறிமுக விழாக்களை கல்வி நிறுவன வளாகங்களில் நடத்த அரசு தடை விதிக்க வேண்டும் என்பதோடு கல்வி நிறுவனங்களில் திரைக்கலைஞர்கள் மற்றும் சமூக ஊடக பிரபலங்கள் பங்கேற்று கருத்துரை வழங்க ஒரு வரைமுறையை ஏற்படுத்த வேண்டும் என்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நான் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளது.