Skip to main content

'படம் மட்டும் மொக்கையா இருக்கட்டும்...' - தமிழ்ப்படம் 2க்காக வெயிட்டிங்கில் இருக்கும் தல-தளபதி ரசிகர்கள்

siva


தமிழ்ப்படம் இரண்டாம் பாகம், சினிமா ரசிகர்களாக அல்லாத சாதாரண பொதுமக்களையும் ஆவலுடன் காத்திருக்கச் செய்தது. ஒரு வழியாக நாளை வெளிவருகிறது. அதற்கு காரணம் அந்த பட போஸ்டர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். விஜயகாந்த்தின் சின்ன கவுண்டர், நடிகையர் திலகம் கீர்த்தி சுரேஷின், டிக் டிக் டிக், காலா, விவேகம், சர்க்கார், நேற்று வெளிவந்த சிம்புவின் மாநாடு பட ஃபர்ஸ்ட் லுக் வரை எதையும் விடவில்லை. எல்லா போஸ்டர்களையும் கலாய்த்துள்ளனர். இந்த போஸ்டர் கலாய்கள்தான் அந்தப் படத்திற்கு எக்கச்சக்கமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் டீசர், வீடியோ சாங் என்றும் எதிர்பார்ப்புகளை கூட்டியவர்கள் பின்னர் ப்ரோமோ காட்சிகளைக் கொண்ட ஒரு தொகுப்பு வீடியோவை யூ ட்யூபில் பதிவிட்டனர். இதில் யாரையெல்லாம் எப்படி எவ்வாறு கலாய்த்துள்ளனர் என்பதை பார்ப்போம். 
 

prakash raj


இதுவரை வெளிவந்த ப்ரோமோக்களில் முதல் ப்ரோமோவில், சூர்யா நடித்த 24 திரைப்படத்தின் 'ஐ யம் அ வாட்ச் மெக்கானிக்' காட்சியை அப்படியே காட்டி ஒருவர் வார்த்தைக்கு வார்த்தை அந்த வசனத்தையே சொல்ல, கடைசியில் சிவா 'ஏன்பா இதெல்லாம் பார்த்தா பைக் மெக்கானிக் மாதிரியா இருக்கு?' என்று கூறுவதுடன் முடிகிறது. இரண்டாவது ப்ரோமோ, திரிஷா இல்லைன்னா நயன்தாரா படத்தில் வருவதைப் போன்று 'வெர்ஜின் பசங்க சாபம் உங்கள சும்மாவிடாதுடா' என்று ஒருவர் சொல்ல, அவரை பின்னே இரண்டு போலீஸுகள் பிடித்திருக்க சிவா 'சாமி' பட விக்ரம் போல மப்டியில் வந்து 'நீ என்ன விர்ஜினாடா?' என்கிறார். அடுத்த கட்டில் சிவா போலீஸ் காரில் உட்கார்ந்திருக்க கையில் தட்டு... இட்லியைப் பிணைந்து அதில் பீர் ஊற்றி இந்த சீனில் சாமி படத்தைத்தான் கலாய்க்கப் போறோம் என்று நம்மை குஷிப்படுத்தியவுடனேயே 'அப்பு' பட வில்லன் பிராகாஷ் ராஜ் போன்று காமெடி ஆக்டர் சதீஷ் போன் பேசிகொண்டிருக்கிறார். 'ரெமொ' பட ப்ரபோஸ் ஸீனைத் தொடர்ந்து மீண்டும் சதீஷ் வேறொரு கெட்டப்பில் பின்லேடன் போன்று காட்சியளிப்பதோடு இந்த ப்ரோமோவை முடித்திருக்கின்றனர்.
 

tmail padam


இன்னொரு ப்ரோமோவில் சிவா, ஸ்டைலாக நீண்ட முடிகளை வைத்திருக்கும் சந்தான பாரதியிடம் தனக்கு எப்படிப்பட்ட பெண் வேண்டும் என்பதை சொன்னதின் மூலம் இதுவரை தமிழ் சினிமாவில் ஹீரோக்களின் எதிர்பார்ப்பு எப்படி இருக்கிறது என்பதை  கலாய்க்கின்றனர். கடைசி ப்ரோமோவிலும், தன் இளம் நண்பர்களான மனோபாலா, சந்தானபாரதி, ஆர்.சுந்தர்ராஜன் ஆகியோருடன்  டீ கடையில் உட்கார்ந்து சிவா பேச, அப்போது ஹீரோக்கள் தமிழ் சினிமாவில் எப்படியெல்லாம் காதலிக்கின்றனர், அதாவது காதல் என்று அவர்கள் செய்யும் டார்ச்சர்கள் என்ன என்பதை கலகலவென காட்டுகின்றனர். அப்போது பின்னே பெரிய காபி ஷாப்புகளில் விற்கும் தின்பண்டமான croiisant, peking போன்றவை டீக்கடை மெனுவில் எழுதப்பட்டுள்ளது. 
 

remo


இப்படி போஸ்டருக்குப் போஸ்டர் எந்தப் படத்தை கிண்டல் செய்திருக்கின்றனர் என்று சிந்திக்க வைத்த இவர்கள் நாளை படத்தில் காட்சிக்குக் காட்சி எந்தப் படத்தை வைத்து செய்திருக்கிறார்கள் என்று யோசிக்க வைக்கும். வெவ்வேறு படங்களை கலாய்த்தே முழு படமாக வந்தால் எப்படியிருக்கும் என்ற சந்தேகத்தை ஏற்கனவே தமிழ்ப்படம் தீர்த்தது. அந்தப் படம் பலருக்குப் பிடித்தது, பலருக்குப் பிடிக்கவில்லை. என்றாலும், அது வெற்றிப் படமானது. அதே பாணியில் வரும் 'தமிழ்ப்படம் 2' முழு படமாக சுவாரஸ்யமாக இருக்குமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. சமூக வலைதளங்களிலும் கூட ஒரு சிலர், 'படம் மட்டும்  சரியா இல்லாம மொக்கை போடட்டும், இவங்க ஓட்டினத விட அதிகமா இந்தப் படத்த ஓட்டிருவோம்' என்று அஜித், விஜய் தொடங்கி விஷால் ரசிகர்கள் வரை வெயிட்டிங்கில் இருக்கிறார்கள். படக்குழுவினரும் அதற்கு ஏற்றார் போல ஓவர் எதிர்பார்ப்பை கூட்டிவிட்டனர். அகில உலக சூப்பர்ஸ்டார் சிவா நடித்து வெளிவரும் தமிழ்ப்படம்2 மற்ற படங்களை கலாய்க்கப் போகிறதா,அல்லது மற்ற எல்லோரிடமும் அது கலாய் வாங்கப் போகிறதா என்னும் மிகப்பெரிய கேள்விக்கு நாளை விடை கிடைக்கும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்