நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சென்னை தேனாம்பேட்டையில் செயின்ட் மேரிஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் வசித்து வருகிறார். தனது வீட்டிலுள்ள லாக்கரில் இருந்த 60 சவரன் தங்க நகைகள், வைரம் மற்றும் ரத்தினக் கற்கள் உள்ளிட்ட பொருட்கள் திருடுபோனதாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார் ஐஸ்வர்யா வீட்டின் பணிப்பெண் ஈஸ்வரி மற்றும் ஓட்டுநர் வெங்கடேசன் இருவரும் கொஞ்சம் கொஞ்சமாக நகைகளைத் திருடி விற்பனை செய்துள்ளது விசாரணையில் தெரியவந்தது.
மேலும் ஈஸ்வரியிடம் இருந்து 100 சவரன் தங்க நகைகள், 30 கிராம் வைர நகைகள், 4 கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூ. 1 கோடி மதிப்பிலான வீட்டுப் பத்திரம் ஆகியவை மீட்கப்பட்டது. மேலும் ஓட்டுநர் வெங்கடேசனிடம் ஈஸ்வரி ரூ. 9 லட்சம் கொடுத்துள்ளதும் விசாரணையில் தெரியவந்தது. அதோடு தனது கணவர் அங்கமுத்து பெயரில் 350 கிராம் தங்க நகைகளை வங்கிக் கணக்கில் அடகு வைத்ததும் வெளிச்சத்துக்கு வந்தது.
இதையடுத்து பணிப்பெண் ஈஸ்வரி கைது செய்யப்பட்டார். மேலும் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஈஸ்வரி, அவரது மகள்களான பொறியாளர் பிருந்தா, மளிகைக் கடை உரிமையாளர் மஞ்சுளா ஆகியோரின் வங்கிக் கணக்குகளை முடக்க தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கியின் மந்தைவெளி கிளை மேலாளர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி மூவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
அந்த மனுக்களில், தங்கள் கடின உழைப்பில் சம்பாதித்த பணத்தை சேமித்து வைத்துள்ள வங்கிக் கணக்குகளை முடக்கியதால், வாழ்வாதாரம் கடுமையாகப் பாதித்துள்ளதாகவும், எந்தவித வாய்ப்பும் வழங்காமல் வங்கிக் கணக்கை முடக்கியது இயற்கை நீதிக்கு முரணானது எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த மனு நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனு தொடர்பாக ஒரு வாரத்தில் பதிலளிக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்துள்ளார்.