குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி பின்னர் ரேணிகுண்டா படத்தில் நடிகையாக நடித்து பிரபலமானவர் சனுஷா. இதை தொடர்ந்து ஒருசில படங்களில் நடிகையாகவும் பின்னர் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் மன அழுத்தத்தில் தான் பாதிக்கப்பட்டு பின்னர் எப்படி அதிலிருந்து மீண்டார் என்பதை வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளார் சனுஷா. அதில், “கடந்த சில மாதங்களாக என் முகத்தில் சிரிப்பு இல்லாத குறையை நான் அதிகம் உணர்ந்தேன். ஊரடங்கு ஆரம்பத்தில் தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி, தொழிலிலும் சரி கடினமான விஷயங்களை எதிர்கொண்டிருந்தேன். எல்லா வகையிலும் கடினமான காலமாக இருந்தது. நான் தாண்டி வந்ததை நினைத்துப் பார்க்கும்போது புல்லரிக்கிறது. இப்போது இந்த முழு அனுபவத்தையும் தாண்டி வந்திருப்பதில் நான் வலிமையாக உணர்கிறேன்.
ஆரம்பத்தில் அச்சம் அதிகமாக இருந்தது. எனக்குள் இருந்த மன அழுத்தம் குறித்து நண்பர்களிடமோ, குடும்பத்தினரிடமோ எப்படிப் பகிர்வது என்பது தெரியவில்லை. அதீதமான பதற்றத்துக்கு ஆளானேன். எதிலும் ஆர்வமில்லை. எனது குடும்பத்தினரிடமும் பேச விருப்பமில்லை.
தற்கொலை எண்ணங்கள் ஆரம்பித்தபோதுதான் இதை சரி செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தேன். எனக்கு என்ன பிரச்சினை என என் சகோதரரிடம் மட்டும் பகிர்ந்தேன். நான் ஏதாவது தவறான முடிவெடுத்தால் என் சகோதரருக்கு யாரும் கிடையாது என்பதை உணர்ந்தேன். அப்போதுதான் சிகிச்சை பற்றி முடிவு செய்தேன். ஒரு கட்டத்தில் இந்த சூழலிலிருந்து நான் மீண்டு வர வேண்டும் என்று நினைத்து என் நண்பருடன் வயநாட்டுக்கு காரில் பயணப்பட்டு அங்கு சில நாட்கள் தங்கினேன். இயற்கையுடன் நேரம் செலவிட்டது எனக்கு உதவியது. தொடர்ந்து மன அழுத்தத்துக்குச் சிகிச்சை எடுத்துக் கொண்டேன். உடற்பயிற்சி, யோகா, நடனப்பயிற்சி என செய்ய ஆரம்பித்தேன். மருந்துகளும் எடுத்துக்கொண்டேன்.
பலருக்கும் மனநலப் பிரச்சனைகள் இருக்கும். ஆனால், குடும்பத்தினரிடமும், நண்பர்களிடமும் அது பற்றி வெளிப்படையாகப் பேசுவது சிரமமாக இருக்கும். ஏனென்றால் ஒரு மனநல மருத்துவரிடம் பைத்தியம் பிடித்தவர்கள் தான் செல்வார்கள் என்று தவறாக கட்டமைக்கப்பட்டுள்ளது. பலர் இவ்வாறு நினைக்கின்றனர். நாம் அங்கு சென்றால் இந்த சமூகம் என்ன நினைக்கும் என்று யோசிப்பார்கள்.
சில நேரங்கள் அது வெறும் ஆலோசனைக்காக இருக்கலாம். சில நேரங்களில் மருத்துவ சிகிச்சையாக இருக்கலாம். ஆனால் அது தவறு என்று நினைப்பவர்கள் இன்னும் இருக்கின்றனர். இது பற்றி என் பெற்றோரிடம் சொல்ல முடிவெடுத்தேன். முதலில் அவர்களிடம் லேசான பதற்றம் தெரிந்தது. நான் நன்றாகத்தான் இருக்கிறேன், எதற்காக மருத்துவர் என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால் எனக்கு முழு ஆதரவு கொடுக்க உடன் இருப்பதாக உறுதி கொடுத்தார்கள்.
இதுதான் என் அனுபவம். கடந்த 2-3 மாதங்கள் எனக்கு மோசமான காலகட்டம். ஆனால், இப்போது அதைப் பற்றி நினைக்கும்போது நான் மெதுவாக என் வாழ்க்கையை மீண்டும் நேசிக்க ஆரம்பித்திருக்கிறேன். இந்தச் சூழலில் மனம் தளர்ந்துவிடாமல் இருந்ததை நினைத்துப் பெருமைப்படுகிறேன். நீங்களும் தளர்ந்துவிடாதீர்கள். உதவி கேட்பதை நிறுத்தாதீர்கள். உங்களை நீங்களே தடுத்துக் கொள்ளாதீர்கள்.
எல்லோரும் உங்களுடன் இருக்கின்றனர். பலர் இப்படிக் கடினமான சூழலிலிருந்து வருகின்றனர், போராடுகின்றனர். ஆனால், உங்களுக்கு உதவி வேண்டுமென்றால் உதவி கிடைக்கும்” என்று தெரிவித்துள்ளார்.