கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் என்பவர் அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள் உள்ளிட்ட பலரை ஏமாற்றி பண மோசடி செய்துள்ளார். அதில் ஒன்றாக தொழிலதிபரை மிரட்டி 200 கோடி ரூபாய் மோசடி செய்துள்ள வழக்கில் கடந்த 2019-ஆம் ஆண்டு அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக சுகேஷ் சந்திரசேகர், அவரது மனைவி லீனா மரியா பால் உள்ளிட்ட 6 பேர் மீது அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.
இந்த வழக்கு தொடர்பாக நடிகை ஜாக்குலின் ஃபெர்னான்டஸ் மற்றும் நோரா ஃபதேஹியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்திவந்தது. சமீபத்தில் கூட டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை கூடுதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. அதில் நடிகை ஜாக்குலின் ஃபெர்னான்டஸையும் குற்றவாளியாக அமலாக்கத்துறை சேர்த்தது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக மீண்டும் நடிகை நோரா ஃபதேஹியிடம் டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த விசாரணை சுமார் 7 மணி நேரம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. விசாரணையில் ஜாக்குலின் ஃபெர்னான்டஸுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் சுகேஷ் சந்திரசேகரின் மனைவி தான் பல நிகழ்ச்சிகளில் தன்னுடன் வந்து பேசியுள்ளதாகவும் நோரா ஃபதேஹி கூறியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சுகேஷ் சந்திரசேகரிடம் தனது மேலாளர் தான் பேசியுள்ளதாகவும் தான் அதிகம் பேசினது இல்லை என அதிகாரிகளிடம் நோரா தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.