'காதல் சொல்ல வந்தேன்' படத்தில் நாயகியாக நடித்தவர் மேக்னா ராஜ். இவர் தென்னிந்திய சினிமாவில் அனைத்து மொழிகளிலும் நடித்திருக்கிறார். கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் மிகவும் பிரபலமானவர் மேக்னா ராஜ்.
நடிகை மேக்னா ராஜ், கன்னட நடிகரான சிரஞ்சீவி சர்ஜாவைக் காதலித்து கடந்த 2018 ஆம் ஆண்டு மே 2ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகும் பிஸியாக சினிமாக்களில் நடித்து வந்தார் மேக்னா.
கடந்த ஜூன் 6ஆம் தேதி மேக்னாவின் கணவரான சிரஞ்சீவிக்கு திடீரென நெஞ்சுவலியும் மூச்சுத் திணறலும் ஏற்பட்டது. உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், மருத்துவர்கள் எவ்வளவு போராடியும் சர்ஜாவைக் காப்பாற்ற முடியவில்லை. சிரஞ்சீவி சர்ஜாவுக்கு வயது 38தான் ஆகிறது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான அர்ஜுனின் மருமகன் தான் சிரஞ்சீவி சர்ஜா என்பது நினைவுக்கூரத்தக்கது. இவர் நாயகனாக 22 படங்களில் நடித்துள்ளார். இவருடைய மறைவிற்கு தென்னிந்திய திரையுலகை சார்ந்த பல பிரபலங்களும் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்தனர்.
இந்நிலையில் மேக்னா ராஜ் மறைந்த தனது கணவருக்கு உருக்கமான ஒரு பதிவை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதில், “சிரு, நான் உங்களிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்ததை வார்த்தைகளாக்கிச் சொல்ல மீண்டும், மீண்டும் முயல்கிறேன். ஆனால் என்னால் முடியவில்லை. நீங்கள் எனக்கு எவ்வளவு முக்கியம் என்பதை இந்த உலகத்திலிருக்கும் அத்தனை வார்த்தைகளைச் சேர்த்தாலும் விவரிக்க முடியாது. என் நண்பர், என் காதலர், என் கூட்டாளி, என் குழந்தை, என் நம்பிக்கைக்குரியவர், என் கணவர் - இதெல்லாவற்றையும் விட மேலானவர் நீங்கள். என் ஆன்மாவின் ஒரு பகுதி நீங்கள்.
ஒவ்வொரு முறையும் நான் வாசல் கதவைப் பார்த்து, நீங்கள் உள்ளே நுழைந்து நான் வீட்டிற்கு வந்துவிட்டேன் என்று சொல்வதைப் பார்க்க முடியாதபோது இனம் கண்டுகொள்ள முடியாத ஒரு வலி என் ஆன்மாவைத் தாக்குகிறது. ஒரு நாளின் ஒவ்வொரு நிமிடமும் உங்களைத் தொட முடியாததை உணரும்போது, என் இதயத்தில் எல்லாம் மூழ்கும் ஒரு உணர்வு. ஆனால், உடனடியாக நீங்கள் என்னருகில் இருப்பதுபோல ஒரு மாய மந்திரத்தை உணர்கிறேன். நான் சோர்வடையும் போதெல்லாம் நீங்கள் என்னைக் காக்கும் தேவதையாக என்னை சுற்றி இருக்கிறீர்கள்.
நீங்கள் என்னை அவ்வளவு காதலித்திருப்பதால்தான் உங்களால் என்னைத் தனியாக விட்டுப் போக முடியவில்லை இல்லையா? நம் காதலின் சின்னமாக, நீங்கள் எனக்குத் தந்த விலை மதிக்க முடியாத பரிசுதான் நம் குழந்தை. அந்த இனிய அற்புதத்துக்கு நான் என்றென்றும் உங்களுக்கு நன்றிக்கடன்பட்டிருப்பேன்.
உங்களை நம் குழந்தை வடிவில் மீண்டும் இந்த பூமிக்குக் கொண்டு வரும் நாளை ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளேன். மீண்டும் உங்களை தாங்கும் நாளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். உங்கள் புன்னகையை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன். அறையையே ஒளிரச் செய்யும் உங்களின் சிரிப்பைக் கேட்க ஆவலுடன் காத்திருக்கிறேன். நான் உங்களுக்காகக் காத்திருக்கிறேன். நீங்களும் அந்தப்பக்கம் எனக்காகக் காத்திருங்கள். என் சுவாசம் இருக்கும்வரை நீங்கள் வாழ்வீர்கள். நீங்கள் என்னுள் இருக்கிறீர்கள். ஐ லவ் யூ" என்று தெரிவித்துள்ளார்.