தமிழ் சினிமாவின் மூத்த காமெடி நடிகரான விவேக், திடீர் மாரடைப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நடிகர் விவேக் நேற்று காலை சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி செலுத்தினார். அதன்பிறகு பத்திரிகையாளர்களைச் சந்தித்த விவேக், பொதுமக்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளும்படி அறிவுறுத்தினார்.
இந்த நிலையில், இன்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் வெளியானவுடன், கரோனா தடுப்பூசி செலுத்தியதன் பக்கவிளைவு காரணமாகவே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது என்ற வதந்தி சமூக வலைதளங்களில் பரவத் தொடங்கியது.
இதனையடுத்து, நடிகை குஷ்பு இது தொடர்பாக விளக்கமளித்து ஒரு காட்டமான பதிவினை பதிவிட்டுள்ளார். அப்பதிவில், "நேற்று தடுப்பூசி செலுத்தியதையும் இன்று மாரடைப்பு ஏற்பட்டதையும் இணைத்து பேசாதீர்கள். இவை இரண்டிற்கும் தொடர்பில்லை. மருத்துவர்கள் அவர்கள் பணியைச் செய்யட்டும். தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு தகுதியுடையவராக நீங்கள் இருந்தால் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள். வதந்திகளாலும் சுய கற்பனைகளாலும் திசை திருப்பப்படாதீர்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் விவேக் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை நிர்வாகமும், தடுப்பூசி செலுத்தியதற்கும் மாரடைப்பிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என விளக்கமளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.