கர்நாடக போலீஸார், கடந்த 20ஆம் தேதி பெங்களூரு புறநகர் பகுதியில் மது விருந்து நடந்த பண்ணை வீட்டில் அதிரடி சோதனை செய்தனர். ஐதராபாத்தைச் சேர்ந்த தொழில் அதிபரான வாசு, தனது பிறந்தநாளையொட்டி இந்த விருந்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளார். அப்போது அங்கு மது விருந்து என்ற பெயரில் போதைப்பொருளும் பயன்படுத்தப்பட்டது கண்டறியப்பட்டது. இதில் தெலுங்கு திரையுலகினர், ஐ.டி.ஊழியர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் விருந்தில் பங்கேற்றுள்ளனர்.
மேலும் தெலுங்கு நடிகை ஹேமா கலந்துகொண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்து சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்டிருந்தார் ஹேமா. பின்பு பெங்களூரு நகர காவல்துறையினர் ஹேமா விருந்தில் கலந்துகொண்டதை உறுதி செய்தது. ரத்த மாதிரிகள் பெறப்பட்டு சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதில் அவர் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதிசெய்யப்பட்டது.
அத்தோடு அந்தப் போதை விருந்தில் 73 ஆண்கள் மற்றும் 30 பெண்கள் என 103 பேர் கலந்துகொண்டதும், இதில் 59 ஆண்கள் மற்றும் 27 பெண்கள் என மொத்தம் 86 பேர் போதைப்பொருள் பயன்படுத்தியது அவர்களுடைய ரத்த மாதிரிகள் சோதனையில் தெரியவந்துள்ளது. அனைவருக்கும் மத்திய குற்றப்பிரிவு சம்மன் அனுப்பியுள்ளது. இதில் நடிகை ஹேமா மட்டுமல்லாது நடிகை ஆஷா ராயும் கலந்து கொண்டு போதைப் பொருள் பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. இது தெலுங்கு திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக ஏற்கெனவே ஐந்து பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பாக தெலுங்கு தயாரிப்பாளர் நட்டி குமார், “திரைத்துறை விஷயங்களில் திரைத்துறையினர் ஈடுபட்டால், அவர்களின் படங்களை மக்கள் பார்க்க தயங்குவார்கள். இதுபோன்ற குற்றங்களைச் செய்பவர்கள் யாராக இருந்தாலும், என்ன செய்தாலும் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும்” என்றார்.