அயலி வெப்சீரிஸ் மூலமாக கவனத்தை ஈர்த்தவர் காயத்ரி கிருஷ்ணன். நாடகங்கள், சீரியல்கள் என பல்வேறு தளங்களில் இயங்கி வருபவரை நக்கீரன் சார்பாக சந்தித்தோம். அப்போது அவருடைய அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.
காயத்ரி கிருஷ்ணன் பேசியதாவது: “நான் 11ஆம் வகுப்பு படித்தபோது முதல் முதலில் நாடகத்துக்காக பள்ளியில் மேடை ஏறினேன். அதன் பிறகு ராமர் வேடம் ஏற்று சமஸ்கிருதத்தில் மேடையில் பேசினேன். கல்லூரியிலும் அனைத்து போட்டிகளிலும் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வேன். ஒருகட்டத்தில் நாடகங்களின் மீது ஆர்வம் பிறந்தது. நடிக்கும்போது ஒரு மிகப்பெரிய சந்தோஷம் கிடைத்தது. 2008 ஆம் ஆண்டில் ஆரம்பித்த என்னுடைய நடிப்பு பயணம் இன்று வரை தொடர்கிறது. மேடை நாடகத்தில் ஆரம்பித்தது இன்று சீரியல், வெப் சீரிஸ் என்று வேறு வேறு வடிவங்களில் தொடர்கிறது.
யாருக்காகவும் வித்தியாசமாக டிரஸ் செய்துகொள்ள வேண்டும் என்கிற எண்ணம் எனக்கு இல்லை. எனக்குப் பிடித்த மாதிரி நான் இருக்கிறேன். அதுவே என்னுடைய தனித்தன்மையாகவும் தெரியலாம். நாடகங்களில் நான் போட்ட வேடங்களில் திரௌபதி வேடம் தான் எனக்கு மிகவும் பிடித்தது. மேடை நாடகங்களில் நடிப்பவர்கள் சிறிது மிகை நடிப்பை வெளிப்படுத்தினால் தான் கடைசி வரிசையில் அமர்ந்திருப்பவருக்கும் அந்த நடிப்பு சென்று சேரும். இரண்டாவது டேக் என்பது அதில் இல்லை.
இதுவரை நான் நடித்த சீரியல்களில் எதிர்நீச்சல் தான் எனக்கு சிறந்த ரோலை வழங்கிய ஒன்று. ஒரு கேரக்டராகவே அது அழகாக அமைந்தது. அயலிக்கு பிறகு எனக்கு மிகப்பெரிய மனநிறைவு அளித்தது எதிர்நீச்சல் சீரியல் தான். மேடை நாடகங்களில் இருந்து வந்து சீரியலில் முதலில் நடிக்கும்போது எனக்கு கஷ்டமாக இருந்தது. ப்ராம்ப்டிங் முறையில் நடிப்பதும் சவாலாக இருந்தது. சுதந்திரம் குறைவாக இருப்பது போல் உணர்ந்தேன். முகம் முழுவதும் மேக்கப் போட்டு நடிப்பதும் எனக்கு சரியாக வரவில்லை. சீரியல்களில் மேக்கப் என்பது வீட்டில் இருப்பது போல் இயல்பாக இருக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து. அதிக மேக்கப் அணிந்து நடிக்கும்போது ரசிகர்களுக்கு நம்முடைய நடிப்பின் மீது கவனம் இருக்காது. நான் ஆசைப்பட்டது போன்று எனக்கு அமைந்தது எதிர்நீச்சல் சீரியலில் தான்.”