நடிகை பாவனா, நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மலையாளத்தில் 'என்டிக்கக்கொரு பிரேமாண்டார்ன்னு' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகம் பாவனாவுக்கு கோல்டன் விசா வழங்கி கவுரவித்தது. அந்த விழாவில் பாவனா அணிந்துவந்த உடை குறித்து பலரும் சமூக வலைத்தளத்தில் அவருக்கு எதிராக விமர்சித்து வந்தனர். அது சற்று சர்ச்சையையும் ஏற்படுத்தியது.
இந்நிலையில் பாவனா இந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் தனது சமூக வலைதளபக்கத்தில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில்,"வெறும் டாப் மட்டும் அணிந்து வெளியே போகும் நபர் அல்ல நான். என் சருமத்தின் நிறத்தில் உள்ளே ஆடை அணிந்திருந்தேன். மற்றபடி இவர்கள் குறிப்பிடுவது போல நான் ஆடைக்கு உள்ளே (Skin dress) இல்லாமல் ஆடை அணியவில்லை. இந்த வகை உடைகளை பயன்படுத்தியோருக்கு இது தெரியும்" என பதிவிட்டுள்ளார்.
மேலும் "நான் கவலைப்பட வேண்டாம் என்று எண்ணி என் துக்கங்களை ஒதுக்கி வைக்க முயலும்போது, என்னைக் குறை சொல்லவும், புண்படுத்தவும் இங்கு பலர் இருக்கிறார்கள். மீண்டும் என்னை இருளில் தள்ள பார்க்கிறார்கள். இது போன்ற செயல்கள் மூலம் அவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள் என்றால் நான் அதற்கு தடையாக இருக்க மாட்டேன்" என வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.