’ராட்சசன்’ படத்தில் 'அம்மு' என்ற பாத்திரத்தின் மூலம் அறியப்பட்ட அபிராமி, 'அசுரன்' படத்திலும் தன் பாத்திரத்தில் சிறப்பாக நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். அம்மு அபிராமி நடிக்கும் பாத்திரங்கள் மரணமடைவது போல வருவதால் மனவருத்தப்பட்ட ரசிகர்கள் அதை சொல்லி மீம்ஸ் எல்லாம் தயார் செய்து பகிர்கின்றனர். 'அசுரன்' அனுபவம் குறித்து நம்முடன் பேசினார் அபிராமி.
ஷூட்டிங்குக்கு முன்பு 'அசுரன்' படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறீர்கள் என்று தெரிந்தபோது எப்படி இருந்தது?
படத்தோட கதை எனக்கு தெரியாது. தாணு சார் சொல்லி லுக் டெஸ்ட் பண்ணிட்டு வந்தேன். 6 மாசம் கழிச்சு என்னை கூப்பிட்டு இன்னிக்கு சாயங்காலம் ஷூட்டிங் வந்துருங்கன்னு சொன்னாங்க. அங்க போயிட்டுதான் தெரிஞ்சிது நான் தனுஷ் சாரோட சேர்ந்து நடிக்கிறேன்னு. அவர் கூட நடிக்கும் போது ரொம்ப பதட்டமாக இருந்தது.
கென் கருணாஸ் உங்கள 'அக்கா அக்கா' என்று சொல்கிறார். அந்த அக்கா தம்பி பாசம்?
எனக்கும் கென்னுக்கும் சேர்ந்து நடிக்கிற வாய்ப்பு அமையல. கென் ஒரு நாள் என்னோட சீன் எடுக்கும் சமயத்துல வந்தார். அப்போ நாங்க ரெண்டு பேரும் ஒரே மாதிரிதான்னு தெரிஞ்சிக்கிட்டோம். அப்படியே அக்கா தம்பி பாசம் வந்துடுச்சு. படத்தோட ப்ரோமோஷன்ஸ் வேலைகளில் எல்லாம் கென்னோட செம்ம ஜாலியா இருக்கும்.
திருநெல்வேலி மொழி எப்படி பேசுனீங்க?
ரொம்ப கஷ்டப்பட்டேன். சுகா சார்க்குதான் நன்றி சொல்லணும். பொறுமையா எங்களுக்கு சொல்லிக் கொடுத்தாரு. எனக்கு மட்டும் இல்ல, எல்லாருக்கும் அவர்தான் பாத்துக்கிட்டார். ரொம்ப கஷ்டப்பட்டுதான் டப்பிங் முடிச்சோம்.
வெற்றிமாறன்கிட்ட ஷூட்டிங்ல திட்டு வாங்குனீங்களா?
அவர் எதுவும் சொல்ல மாட்டார். அவருக்கு வேண்டியதை நம்மகிட்ட இருந்து எடுத்துக்குவார். எதுவாக இருந்தாலும் தனியாகத்தான் சொல்வார். இந்த விஷயத்தை கம்மி பண்ணலாம் இந்த விஷயத்தை ஏத்திக்கலாம் சொல்லிடுவார். ரொம்ப ஸ்வீட் ஆன பெர்சன்.
தனுஷின் நடிப்பை அருகில் இருந்து பார்த்தது எப்படி இருந்தது?
அவர் நடிக்கறதே தெரியாது. ரொமான்ஸ் காட்சி பண்ணும்போது நெஜமாவே என்னை லவ் பன்றாரோன்னு தோணும். ஷாட் தொடங்கும் வரை 'சரிம்மா, வாம்மா'ன்னு பேசுறவர் தொடங்கியதும் நடிப்பதை பாக்கும்போது 'என்னடா நாம அவ்வளவு அழகா, இப்படி லவ் பண்ணுறாரு'ன்னு ஒரு மாதிரி பயமாகிடும். அப்படி நடிப்பாரு... சார் பெர்ஃபார்மனஸ் வேற லெவல்ல இருக்கும்.