நடிகை அம்பிகா திரைத்துறையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட உள்ளிட்ட மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இப்போது குணச்சித்திர கதாபாத்திரம், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தி வருகிறார். இதனிடையே சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். மேலும் சமூகத்தில் நடக்கும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து தனது கருத்துகளை தெரிவித்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது பாலியல் குறித்து செய்தி வெளியானதை தொடர்ந்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். சென்னை காவல் துறை ட்விட்டர் பக்கத்தில், புனித தோமையர்மலை காவல் நிலையத்தில், 17 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்ட நபரை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த சம்பவம் குறித்து அம்பிகா, "பாலியல் குற்றங்களில் உடல் ரீதியாகவோ மன ரீதியாகவே யார் தொந்தரவு கொடுத்தாலும் உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் சிறார் அல்லது 100 வயது முதியவர்களாக இருந்தாலும் வயது வரம்பின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றம் குற்றமே" என தனது ட்விட்டர் பக்கத்தில் காட்டமாக குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவிற்கு காவல் துறையும் நன்றி தெரிவித்து பதில் பதிவிட்டிருந்தது.