இந்தி திரையுலகில் மூத்த நடிகராக இருந்துவந்த யூசுப் ஹுசைன் (73) கரோனாவால் காலமானார். 'தபாங் 3', 'ஓ மை காட்', 'தூம் 2' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்துவந்த நிலையில், இன்று (30.10.2021) காலை சிகிச்சை பலனின்றி யூசுப் ஹுசைன் உயிரிழந்துள்ளார். இதனை இயக்குநரும், யூசுப் ஹுசைனின் மருமகனுமான ஹன்சல் மேத்தா தனது சமூகவலைதள பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்," 'ஷாஹித்' படம் இறுதிக்கட்ட பணியில் இருந்தபோது நிதி பிரச்சனையால் அப்படம் வெளியாவதில் சிக்கல் எழுந்தது. இந்நிலையில், எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை, கிட்டத்தட்ட என் வாழ்க்கை முடிந்துவிட்டதாக நினைத்தேன். அப்போது என்னை அழைத்து, 'ஃபிக்ஸட் டெபாசிட்டில் பணம் வைத்திருக்கிறேன். அதை எடுத்து உன் பிரச்சனையை தீர்த்துக் கொள்' என்றார். அதன் பின்புதான் 'ஷாஹித்' படம் வெளியாகியது. யூசுப் ஹுசைன் எனக்கு மாமனார் இல்லை தந்தை. இப்போது அவர் இல்லாமல் நான் அனாதை ஆகிவிட்டேன். காலம் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்காது. நான் உங்களை மிஸ் செய்கிறேன் " எனக் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் யூசுப் ஹுசைன் மறைவுக்குத் திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.