Skip to main content

அமைச்சரும் என் நண்பருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு ஒரு வேண்டுகோள்... நடிகர் விஷால் ட்வீட்!

Published on 28/05/2021 | Edited on 28/05/2021

 

vishal

 

தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை பரவல் அதிகரித்து வருவதையடுத்து, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், சென்னை கே.கே.நகரில் உள்ள பத்மா சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் ஆன்லைன் வகுப்பில் அரை நிர்வாணமாகக் கலந்து கொண்டது மற்றும் மாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்தி  அனுப்பியது தொடர்பான புகார்கள் எழுந்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.

 

இந்தப் புகாரின் பேரில் கைதுசெய்யப்பட்ட ராஜகோபாலன், தற்போது 14 நாட்கள் நீதிமன்றக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், திரைத்துறை பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் இச்சம்பவத்தைக் கண்டித்து கருத்துத் தெரிவித்துவருகின்றனர்.

 

அந்த வகையில், இது குறித்து நடிகர் விஷால் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "பிஎஸ்பிபி பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் அளித்த பாலியல் தொல்லை விவகாரம் என்னை வெட்க வைத்தது. மேலும், அந்தப் பள்ளி இழுத்து மூடப்பட வேண்டும் என்பதையும் உணர வைத்தது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் / பெற்றோர்களிடம் ஒருவரும், ஒருமுறை கூட மன்னிப்பு கோரவில்லை. இதுபோன்ற குற்றங்கள் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்க, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று என் நண்பரும் கல்வி அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழியைக் கேட்டுக் கொள்கிறேன். 

 

இதை ஒரு சாதிப் பிரச்சினையாக மாற்றுவது இழிவானது. மாணவிகளுக்குத் தொல்லை கொடுத்த நபர் தூக்கிலிடப்பட வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற குற்றங்களுக்கு உடனடி தண்டனை கிடைக்கும் என்பது இனிவரும் காலங்களில் ஆசிரியர்களுக்கும், பள்ளி நிர்வாகத்திற்கும் தெரியும். குறைந்தது இப்போதாவது மாணவர்களிடம் / பெற்றோரிடம் மன்னிப்பு கோருங்கள். இதைச் சாதிப் பிரச்சினையாக மாற்றாதீர்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்