தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிய, 'மாஸ்டர்' திரைப்படம் வெளியீட்டிற்காகத் தயாராகவுள்ளது. இது நடிகர் விஜய்யின் 64-ஆவது திரைப்படம் ஆகும். இந்தப் படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய் அடுத்து நடிக்கவுள்ள படம் எது என்பது குறித்து பெரிய கேள்வி எழுந்துள்ளது.
பொதுவாக விஜய்யின் அடுத்த படம் குறித்தான அறிவிப்பு, அவர் நடிக்கும் படம் இறுதிக்கட்டத்தை நெருங்கும் போது வெளியாவது வழக்கம். நடிகர் விஜய்யிடம் கதை சொல்லி, அவரது அழைப்பிற்காகக் காத்திருக்கும் இயக்குனர்களின் நீண்ட பட்டியல், இம்முறை இது குறித்தான பெரிய கேள்வியையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
முதலில் விஜய்யின் 65 -ஆவது படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க இருப்பதாகச் செய்திகள் வந்தன. அதனைத் தொடர்ந்து வெளியான தகவல்கள் இந்தச் செய்தியை ஏறக்குறைய உறுதிசெய்தன. பின், ஏ.ஆர்.முருகதாஸ் கூறிய கதையில், தயாரிப்பு தரப்பிற்கு மாறுபட்ட கருத்து நிலவியதால் இந்தப்படம் கைவிடப்பட்டது என்று ஒரு தகவலும், ஏ.ஆர்.முருகதாஸின் சம்பளம் தொடர்பான விவகாரத்தில் ஏற்பட்ட முரணால் இந்தப் படம் கைவிடப்பட்டது என்று மற்றொரு தகவலும் வெளிவந்தது.
ஏ.ஆர்.முருகதாஸ் இந்தப் பட்டியலில் இருந்து வெளியேற, அருண்ராஜா காமராஜ், மகிழ்த்திருமேனி, சுதா கொங்கரா, வெற்றிமாறன் ஆகியோர் தொடர்ந்து நீடித்து வந்தனர். இப்பட்டியலில் இருந்து விஜய் ஒருவரைத் தேர்ந்தெடுப்பார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், விஜய்யின் அடுத்த படத்தை 'கோலமாவு கோகிலா' புகழ் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்க உள்ளார் என்ற தகவல் வெளியானது.
இந்த நிலையில், இது குறித்து நமது நெருங்கிய வட்டத்தில் விசாரிக்கையில் இது உறுதியான தகவல்தான் என்றும் இதற்கான ஆரம்பக்கட்ட பணிகளை நெல்சன் திலீப்குமார் தொடங்கிவிட்டார் என்றும் கூறுகின்றனர். எனவே இப்படத்தின் பணிகள் ஜனவரி இறுதியில் அல்லது பிப்ரவரின் தொடக்கத்தில் முழுவீச்சில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.