ராம் இயக்கத்தில் பி.எல்.தேனப்பன் தயாரித்துள்ள திரைப்படம் 'பேரன்பு'. மலையாள நடிகர் மம்மூட்டி பத்து ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு தமிழ் திரைப்படத்தில் நடித்துள்ளார். வரும் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 1) வெளியாகவிருக்கும் இந்தப் படத்தின் சிறப்புக் காட்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பத்திரிகையாளர்களிடம் மம்மூட்டி பேசியது...
![peranbu mammooty](http://image.nakkheeran.in/cdn/farfuture/UgiSS9Jb_hbUm6sVAzVABtYXMJqvtpuFW7eY2ZuPnEw/1548810510/sites/default/files/inline-images/mammukka%20-%20Copy.jpg)
"இந்தப் படத்தைப் பற்றி நான் ஒன்னும் பேசவேண்டியதில்லை, படம்தான் பேசும். ரொம்ப நாளா தயாரிப்பில் இருந்த படம், ரொம்ப கவனமா உருவாக்கப்பட்ட படம். பல திரைப்பட விழாக்களில் இந்தப் படம் திரையிடப்பட்டது. பல வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் பார்த்து பாராட்டியுள்ளனர்.
நான் தமிழில் பத்து வருஷங்கள் கழித்து படம் நடிக்கிறேன். பத்து வருஷமா ஏன் தமிழில் நடிக்கலைன்னு கேட்டா, பத்து வருஷமா நான் நடிச்சுக்கிட்டுதான் இருக்கேன், தமிழில்தான் நடிக்கல. ரொம்ப வித்தியாசமான கதை இது. இந்தப் படத்தில் நடிக்க நான் பெருசா கஷ்டப்படல. இந்த மாதிரி ஒரு குழந்தை எனக்கு இருந்தா எப்படி இருக்கும்னு நினைச்சுப் பார்த்தேன், நடிப்பது ஈஸியாகிடுச்சு. இந்த மாதிரி குழந்தைகள் உங்களுக்கு இருந்தாலும் இப்படித்தான் இருக்கும். நாமெல்லாம் ஒரு ஆசிர்வதிக்கப்பட்ட வாழ்க்கையை வாழுறோம்னுதான் சொல்லணும்.
மாற்றுத்திறனாளி குழந்தைகள், நடக்குறத பாக்கும்போது ரொம்ப கஷ்டப்படுறாங்கன்னு உங்களுக்கு தோணுதா? இல்லை, அவுங்க கஷ்டப்படல, அவுங்களுக்கு இயல்பே அதுதான், அவுங்களுக்கு அது பழக்கமாகிடுச்சு. பாக்குறவங்களுக்கு அப்படி தெரியும். அந்தக் குழந்தையை வளக்குறவங்க, அப்பா அம்மாதான் ரொம்ப கஷ்டப்படுறாங்க. இது யாரும் சொல்லாத கதைன்னு நான் சொல்ல மாட்டேன். ஆனா, பலரும் சொல்ல மறந்த கதை. நாங்க எல்லோரும் பெரிய அன்போட இந்தப் படத்தை எடுத்துருக்கோம். இனி இதை நீங்கதான் பாத்துக்கணும். இந்தப் படம் அப்படி, இப்படின்னு நான் பேசமாட்டேன். நீங்கதான் பார்த்துட்டு பேசணும். அப்போதான் இது பேசும் படம் ஆகும்."