![Actor Chekwume Malvin](http://image.nakkheeran.in/cdn/farfuture/UNgeux3GPrAvlM_IGX5uNfs-hj8aVzWMYzsF-OxMY5Y/1632983682/sites/default/files/inline-images/138_8.jpg)
நைஜீரியாவைச் சேர்ந்த செக்வூம் மால்வின், தமிழ், கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகளில் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் சூர்யா நடிப்பில் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான ‘சிங்கம் 2’ படத்தில் ஒரு காட்சியில் நடித்திருந்தார். இவர், தற்போது பெங்களூரு மாநில போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூரு கிழக்கு மண்டலத்தில் உள்ள கே.ஜி.ஹள்ளி பகுதியில் போதைப் பொருட்கள் அதிக அளவில் புழங்குவதாக பெங்களூரு காவல்துறைக்கு அடுத்தடுத்து புகார்கள் வந்த வண்ணம் இருந்துள்ளன. வெளிநாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் கே.ஜி.ஹள்ளி பகுதியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவதாக நேற்று (29.09.2021) கிடைத்த ரகசிய தகவலையடுத்து, அந்தப் பகுதியில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் நடிகர் செக்வூம் மால்வின் கைதுசெய்யப்பட்டார். அவரிடமிருந்து 8 லட்சம் மதிப்பிலான 15 கிராம் எம்.டி.எம்.ஏ. போதை மாத்திரைகள், 250 மில்லி ஆசிஸ் ஆயில், விலை உயர்ந்த ஒரு செல்ஃபோன் மற்றும் ரூ. 2,500 ரொக்கம் ஆகியவை கைப்பற்றப்பட்டன. இதனைத் தொடர்ந்து, போதைப்பொருட்கள் தடுப்புப் பிரிவின்கீழ் செக்வூம் மால்வின் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது.