Skip to main content

"என் அம்மாவை கேவலமாகப் பேசுவது போல் இருக்கிறது" - கலாஷேத்ரா குறித்து அபிராமி பேட்டி

Published on 06/04/2023 | Edited on 06/04/2023

 

abhirami.venkatachalam press meet about kalakshetra

 

சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு பேராசிரியர்கள் நான்கு பேர் பாலியல் தொல்லை கொடுத்ததாகப் புகார் எழுந்த நிலையில், இது தொடர்பாக கல்லூரி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இந்த விவகாரம் பரவலாகப் பேசப்பட, இந்தப் புகார் தொடர்பாக அந்தக் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் ஹரிபத்மன் மீது மகளிர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் டிஜிபி லத்திகா சரண் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

 

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அபிராமி, "அந்த கல்லூரியின் முன்னாள் மாணவி நான். 89 வருஷமா இந்த கல்லூரியில் இதுபோன்று ஒரு பிழை சொல்வதற்கு எதுவுமே நடக்கவில்லை. கலாஷேத்ரா கல்லூரி குறித்து அவதூறு பரப்பக்கூடிய வேலை தான் தற்போது நடைபெற்று வருகிறது. ஒரு பக்கம் மட்டும் பார்க்கக் கூடாது. ஆசிரியருக்கும் குடும்பம் இருக்கு" என கல்லூரிக்கு ஆதரவாக பேசியிருந்தார்.

 

இவர் பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலாக, பலரும் பெண்களின் உரிமை பற்றி பேசிய அஜித்தின் 'நேர்கொண்ட பார்வை' படத்தில் நடித்துவிட்டு இப்படி பேசலாமா என்று ட்ரோல் செய்து வந்தனர். இந்த ட்ரோலுக்கு அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் விளக்கம் அளித்திருந்தார். அப்போது சாதி (caste) என்பதற்கு நடிகர்கள் (cast) எனக் குறிப்பிட்டிருந்தார். இதனால் மீண்டும் பலரும் அபிராமிக்கு எதிராக பதிவிட்டு வந்தனர். 

 

இந்த நிலையில் ஹரிபத்மனை வீழ்த்த இது போல் பொய் புகார் கூறுவதாகக் குறிப்பிட்டு சென்னை கமிஷனர் ஆணையத்தில் ஒரு புகாரை அளித்துள்ளார் அபிராமி. பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அபிராமி,  "உண்மையான பாதிக்கப்பட்ட மாணவி யார் என்றே தெரியவில்லை. முதலில் பாலியல் துன்புறுத்தல் என்ற வார்த்தையை பயன்படுத்துவதை நிறுத்துங்கள். அக்கல்லூரியில் வெறும் மாணவியாக மட்டும் நான் படிக்கவில்லை. அக்கல்லூரியைப் பற்றி மற்றவர்கள் தவறாக பேசும்போதெல்லாம் என் அம்மாவை கேவலமாக பேசுவது போல் இருக்கிறது. எதுவுமே தெரியாதவர்கள் இது போன்று எழுதுகிறார்கள். 

 

நிர்மலா என்ற ஆசிரியர் எனது தோழி மூலமாக எனக்கு ஃபோனில் ட்ரை பண்ணி ஹரி சாருக்கு எதிராக பேசச் சொல்ல முயற்சித்தார். ஆனால், எனக்கு இந்த பிரச்சனை பற்றி பேச விருப்பமில்லை என்று சொன்னேன். பின்பு அவரே நேரடியாக என்னை போனில் அழைத்தார். நான் இந்த பிரச்சனை பற்றி பேச மறுத்துவிட்டேன். 10 வருஷமாக இது நடக்குது என்று சொல்கிறார்கள். நான் 2010 -2015 காலகட்டத்தில் படித்தவள். அந்த மாணவியாகத்தான் நான் இப்பொது பேசுகிறேன். அப்போது இருந்த இயக்குநர் லீலா சாம்சன் ஏமாற்றிவிட்டதாகக் கூறி அவர் மீது பொய் புகார் கொடுத்திருந்தார்கள். 

 

அவருக்கு எதிராக ஒரு கடிதம் எழுதி எங்களை கையெழுத்திடச் சொன்னார்கள். அதை வைத்து பார்க்கையில் இப்போது இருக்கும் மாணவர்களுக்கு அதை செய்கிறார்களா... அப்படி செய்தால் அதையும் நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என்பது எனது கோரிக்கை. ஹரிபத்மன் சார் எங்களுக்கு சொல்லிக் கொடுத்த வரைக்கும் எந்த பிரச்சனையும் இருந்ததில்லை. இந்த பிரச்சனையில் நிர்மலா, நந்தினி ஆகிய 2 ஆசிரியர்கள் மாணவிகளைத் தூண்டிவிட்டு போராட்டம் நடத்துமாறு கூறுகின்றனர். மேலும், மாணவிகளை பலியாடு ஆக்குகின்றனர். அப்படி ஆகக்கூடாது. இதற்கு குரல் கொடுத்ததால் என்னை சங்கி என்று அழைக்கின்றனர். நான் லீலா சாம்சனுக்கு எதிரான நபர் அல்ல" எனப் பேசினார்.  

 


 

சார்ந்த செய்திகள்