கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பாலிவுட் நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்துகொண்ட பிறகு பாலிவுட் திரையுலகில் நடக்கும் நிழலுகம், அரசியல் குறித்து பல பிரபலங்கள் பதிவிட்டு வருகின்றனர். பிரபலங்களுடன் நடைபெற்ற கசப்பான சம்பவங்களையும் பகிர்கின்றனர்.
இந்நிலையில், 'ஹீரோ' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான பாலிவுட் நடிகர் அபய் தியோல், இன்ஸ்டாகிராமில் ஃபிலிம்ஃபேர் விருது விழாவைக் கடுமையாக விமர்சித்து ஒரு நீண்ட பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.
அதில், “'ஜிந்தகி நா மிலேகி தோபாரா' 2011-ஆம் ஆண்டு வெளியானது. இன்று இந்தத் தலைப்பை எனக்கு நானே ஒவ்வொரு நாளும் சொல்லிக் கொள்கிறேன் (வாழ்க்கை இரண்டாம் முறை வாய்க்காது என்பது அந்த ஹிந்தி தலைப்பின் பொருள்) மேலும் மன அழுத்தத்தில், ஏக்கத்தில் இருக்கும்போது பார்க்கச் சிறந்த படம்.
அப்போது அனைத்து விருது வழங்கும் விழாக்களும் என்னையும், ஃபர்ஹானையும் ஒரு படி கீழே இறக்கி துணை நடிகர்கள் பிரிவில்தான் பரிந்துரை செய்தன. ஹ்ரித்திக் மற்றும் கேத்ரீனா கைஃப் இருவரும் தான் நாயகன் - நாயகி பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டனர்.
அதாவது, துறையின் சொந்த விதியின் படி, இந்தப் படம், ஒரு ஆண், தனது நண்பர்களின் உதவியுடன், ஒரு பெண்ணைக் காதலிக்கும் கதை இது. நமக்கு எதிராக ரகசியமாகவும், வெளிப்படையாகவும் பல வழிகளில் இந்தத் துறையில் வேலை செய்வார்கள். இந்தப் படத்தைப் பொறுத்தவரை அது வெட்கமற்று வெளிப்படையாகவே நடந்தது.
நான் எந்த விருது வழங்கும் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கவில்லை. ஆனால் ஃபர்ஹான் கலந்து கொண்டார். அவர் அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை" என்று தெரிவித்துள்ளார்.