பாலிவுட் நடிகர் அமீர்கானின் மகனான ஜுனைத் கான் ‘மகாராஜ்’ படத்தை தொடர்ந்து இரண்டாவதாக நடித்துள்ள இந்தி படம் ‘லவ்யப்பா’. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் இரண்டாவது மகள் குஷி கபூர் நடித்துள்ளார். அத்வைத் சந்தன் இயக்கியுள்ள இப்படத்தை பாண்டம் ஸ்டுடியோஸ் மற்றும் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் தயாரித்துள்ளன. காதல் காமெடி ஜானரில் உருவாகியுள்ள இப்படம் பிப்ரவரி 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தின் ட்ரைலர் நாளை 10ஆம் தேதி அமீர் கான் வெளியிடவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படம் குறித்து ஒரு பேட்டியில் பேசிய அமீர்கான், “படம் எனக்கு பிடித்திருக்கிறது. சுவாரஸ்யமாக இருந்தது. மொபைல் போன்களால் நம் வாழ்க்கை எப்படி மாறிவிட்டது, அதோடு தொழில்நுட்பத்தால் நம் வாழ்வில் நடக்கும் சுவாரஸ்யமான விஷயங்கள் குறித்து படத்தில் பேசியுள்ளார்கள். அனைத்து நடிகர்களுமே சிறப்பாக நடித்துள்ளார்கள். குறிப்பாக குஷி கபூரின் நடிப்பை பார்க்கும் போது ஸ்ரீ தேவியை பார்ப்பது போல் உள்ளது. ஸ்ரீ தேவியின் எனர்ஜி அப்படியே இருக்கிறது. நான் ஸ்ரீ தேவியின் மிகப்பெரிய ரசிகன்” என்றார்.
இதையடுத்து அமீர் கான் தற்போது, இந்தப் படம் வசூல் ரீதியாக வரவேற்பை பெற்றால் சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை நிறுத்திவிடுகிறேன் என சொல்லியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் அவர் தரப்பில் இருந்து இன்னும் அதிகாரப்பூர்வமாக எதுவும் சொல்லவில்லை.