உலகத் திரைத்துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதானது சிறந்த படம், சிறந்த நடிகர், நடிகை, தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஆண்டுதோறும் வழங்கப்படுவது வழக்கம். இதில் சிறந்த சர்வதேச திரைப்படம் (Best International Feature Film) என்ற பிரிவிற்கு பல்வேறு நாட்டிலிருந்து பல்வேறு திரைப்படங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருது போட்டிக்கு மலையாள படமான '2018' படம் இந்தியா சார்பில் அனுப்பப்பட்டுள்ளது.
ஜூட் அந்தனி ஜோசப் இயக்கத்தில் டோவினோ தாமஸ், அபர்ணா பாலமுரளி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இப்படம், உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டதாகப் படக்குழு குறிப்பிட்டிருந்தது. கேரளாவில் வெள்ளம் வந்தபோது ஏற்பட்ட சம்பவங்கள் குறித்து விரிவாகப் படத்தில் பேசப்பட்டிருக்கிறது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று அதிக வசூல் செய்த மலையாளப் படம் என்ற பெருமையும் பெற்றது.
இந்த நிலையில் சிறந்த சர்வதேசத் திரைப்பட பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 15 படங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் இந்தியா சார்பில் அனுப்பப்பட்ட 2018 இடம் பெறவில்லை. மேலும் அந்த 15 படங்களின் பட்டியலை 2018 பட இயக்குநர் ஜூட் அந்தனி ஜோசப், அவரது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்து, அவரின் படத்திற்காக ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். 2024 ஆம் ஆண்டிற்கான 96வது ஆஸ்கர் விருது அடுத்த ஆண்டு மார்ச் 10 அன்று லாஸ் ஏஞ்சல்ஸின் ஓவேஷன் ஹாலிவுட்டில் உள்ள டால்பி தியேட்டரில் நடைபெறுகிறது.