Skip to main content

நிறம் மாறும் செங்கொடி தேசம்! பகுதி – 12

Published on 15/02/2024 | Edited on 15/02/2024
vietnam-travel-series-part-12

1930 அக்டோபர் 20 ஆம் தேதி வியட்நாம் பெண்கள் சங்கம் தொடங்கப்பட்டது. பின்னர் விடுதலைப் பெண்கள் சங்கம், ஏகாதிபத்திய எதிர்ப்பு பெண்கள் சங்கம், ஜனநாயகப் பெண்கள் சங்கம் என பெயர்களை மாற்றிக்கொண்டு களத்தில் இயங்கி வந்தன. 1931 முதல் சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்ட 1945 வரை வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சிக்காக மக்களிடம் ஆதரவை திரட்டுவதில் தீவிர பங்காற்றி வந்தது. பிரெஞ்ச் ஆதிக்கத்தை எதிர்த்து போராட்டங்கள் நடத்தின. அதோடு இந்தோசீனா போரில் இச்சங்க பெண்கள் கலந்துகொண்டனர். துப்பாக்கிப் பிடித்து களத்தில் சண்டையிட்டனர். அதில் முக்கியமானவர் நுகுய்ன் தை டிங் என்கிற பெண்மணி. ஹேசிமின் தலைமையிலான தேசிய விடுதலை முன்னணி அமைப்பின் முக்கிய பெண் தலைவராக இருந்தார். இந்த பெண் ஆளுமைகள் மட்டுமல்லாமல் அவர்களின் போராட்டம், வீரம் குறித்து அறிந்துகொள்ள இந்த சிறைச்சாலையில் மட்டுமல்ல இதன் அருகிலேயே வியட்நாம் பெண்கள் அருங்காட்சியகத்தில் அதன் குறிப்புகள் வைக்கப்பட்டுள்ளது.

1985 ஆம் ஆண்டு வியட்நாம் பெண்கள் சங்கம் தொடங்கப்பட்டது. இதன் தலைவரான நுகுய்ன் தை டிங் என்பவரால் அது தொடங்கப்பட்டது. இவர் இரண்டாம் இந்தோசீனா போரின்போது தேசிய விடுதலை முன்னணியில் முக்கிய பெண் தலைவராக இருந்தார். அவரின் வேண்டுகோளின்படியே பெண்கள் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது. ஹனாய் நகரத்தில் அமைக்கலாம் என முடிவு செய்யப்பட்டு 1987 ஜனவரி 10ஆம் தேதி வியட்நாம் சோசலிஸ்ட் குடியரசின் அரசாங்கத்தின் அறிவுறுத்தலின்படி அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டது. 1995 அக்டோபர் 20 ஆம் தேதி நான்கு மாடி கட்டிடமாக திறக்கப்பட்டது. இந்த கட்டிடத்திற்குள் குடும்பத்தில் பெண்கள், வரலாற்றில் பெண்கள், பெண்கள் ஃபேஷன் என மூன்று தலைப்பில் பிரித்து வைக்கப்பட்டு, நாட்டில் உள்ள 54 இனங்களின் பெண்களின் கலாச்சாரம், உணவு, உடை, கலாச்சாரம், விடுதலை போராட்டம், இந்தோசீனா போர், இரண்டாம் இந்தோசீனா போரில் பெண்களின் பங்கை பறைச்சாற்றும் ஆவணங்களாக 40 ஆயிரம் பொருட்கள் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. 

வியட்நாமில் உள்ள 64 மாகாணங்கள் மற்றும் நகரங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் பாலினம் மற்றும் பெண்களின் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வு பெண்களிடம் குறைவாக உள்ளது. கிராமப்புற பெண்களிடம் விழிப்புணர்வே இல்லை. தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் பெண்கள் பொதுவாக அரசியல் கூட்டங்களில் கலந்துகொள்வதில்லை. பெண்களுக்கு ஓய்வு மற்றும் சமூக நடவடிக்கைகளில் பங்கேற்பதற்கு குறைந்த நேரமே உள்ளது. அவர்களின் பெரும்பாலான நேரங்கள் வீட்டு வேலைகள் செய்யவும், வயல்களில் வேலை செய்யவும், கால்நடைகளை வளர்த்து பொருளீட்டவே நேரம் சரியாக இருக்கின்றன என்றுள்ளார்கள். இதனால் எல்லா மட்டத்திலும் பெண்களின் வளர்ச்சி, முன்னேற்றம் மற்றும் பாலின சமத்துவத்தை நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் அதிகளவு தடை செய்துள்ளன.

தற்போது நாடு முழுவதும் 10,472 உள்ளூர் பெண்கள் சங்கங்களைச் சேர்ந்த 13 மில்லியனுக்கும் அதிகமான உறுப்பினர்கள் வியட்நாம் பெண்கள் சங்கத்தில் உள்ளனர் என்கின்றனர். அருங்காட்சியக நிர்வாகிகள் நாடு முழுவதும் பெண்களிடம் நடத்திய ஆய்வில் நாடு விடுதலை பெற்றது, ஆனால் இன்னமும் ஆணாதிக்க சமுதாயத்திடம் இருந்து பெண்கள் விடுதலை பெறவில்லை என்கிறது.  

சுதந்திரத்துக்காக, உரிமைக்காக ஒருக்காலத்தில் பெரும் பேரரசுகளை எதிர்த்து, துப்பாக்கி குண்டுகளுக்கே பயப்படாத வியட்நாம் பெண்கள் இப்போது மக்களுக்காக குரல் கொடுத்துவிட்டு சிறையில் கொடுமைகளை அனுபவித்து வரும் சக பெண்களுக்கு குரல் கொடுக்ககூட தைரியமுற்று இருப்பதை காண முடிந்தது. 

பயணம் தொடரும்...

நிறம் மாறும் செங்கொடி தேசம்! பகுதி - 11