Skip to main content

கிரைம்ஷோ தொகுப்பாளர் மனைவி மரணம்; அஞ்சு இல்யாசி வழக்கு - திலகவதி ஐபிஎஸ் பகிரும் தடயம்:92

Published on 02/01/2025 | Edited on 02/01/2025
thilagavathi ips rtd thadayam 92

தமிழ்நாடு காவல்துறையின் முதல் பெண் இயக்குநர், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி தடயம் என்ற தொடரின் வழியே பல்வேறு வழக்குகளை விளக்கி வருகிறார். அந்த வகையில் பிரபலமான வழக்கு ஒன்றை விளக்குகிறார்.

21 வயது பெண் ஒருவர் கடந்த 2018ஆம் ஆண்டு அக்டோபர் 5ஆம் தேதி உச்சநீதிமன்றத்திற்கு எதிரில் பத்திரிக்கையாளர்கள் சூழ மகிழ்ச்சியாக நின்றுகொண்டிருந்தார். அப்போது பத்திரிக்கையாளர்களிடம் 18 ஆண்டு கால போராட்டம் முடிந்து என் அப்பாவுக்கு நிம்மதி கிடைத்துள்ளது. இனிமேல் வாழ்க்கையை நிம்மதியாக வாழுவோம் என்று கூறினார். அந்த 18 ஆண்டு கால போராட்டம் என்னவென்று கேட்டால், சுஹைப் இல்யாசி என்ற இளைஞர் காட்சி ஊடகத்தில் சிறந்து விளங்கி திரைப்படத்துறையில் ஜொலிக்க வேண்டும் என்ற கனவுகளுடன் லண்டனில் டி.வி. ஏசியா நிறுவனத்தில் கேமரா மேனாக சேர்ந்து சில காலங்கள் பணியாற்றுகிறார். இதையடுத்து மாஸ் மீடியா படிப்பில் முதுகலை பட்டம் பெற டெல்லியில் உள்ள ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தில் சேர்கிறார். சுஹைப் இல்யாசியாவின் அப்பா இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய இமாம் அமைப்புக்கு தலைவராக இருந்ததால் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்க சுஹைப் இல்யாசி இலகுவாக இருந்தது.

சுஹைப் இல்யாசி அந்த கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது, அதே கல்லூரியில் பேராசியராக இருக்கும் ஒருவரின் மகளான அஞ்சு என்பவரை காதலிக்க தொடங்கினார். அஞ்சுவுக்கும் சுஹைப் இல்யாசி மீது காதல் வர இருவரும் தங்களது விருப்பத்தை வீட்டில் சொல்லியிருக்கின்றனர். ஆனால், திருமணத்திற்கு சாதி, மதத்தை காரணம் காட்டி இருவரின் வீட்டாரும் சம்மதம் தெரிவிக்கவில்லை. இதையடுத்து இருவரும் லண்டனுக்கு சென்று திருமணம் செய்துகொண்டு அங்கு சில மாதங்கள் வாழ்ந்து வந்தனர். அதன் பிறகு இருவரும் அங்கிருந்து கிளம்பி மீண்டும் டெல்லிக்கு வந்து சுஹைப் இல்யாசி வீட்டில் தங்கினர். இதற்கிடையில் இருவருக்கும் சின்ன சின்ன சண்டைகள் வர ஆரம்பித்திருக்கிறது. தொடர்ந்து இதுபோன்ற சண்டைகள் வர, அஞ்சு இல்யாசி கோபித்துக்கொண்டு லண்டனுக்குச் சென்று தனது அண்ணன் பிரகாஷ் வீட்டில் இருந்துள்ளார். பின்பு சுஹைப் இல்யாசி, தனது மனைவியை சமாதானப்படுத்த லண்டன் செல்கிறார். தனக்கு கணவருடன் சேர்ந்து வாழ விருப்பமில்லை என அஞ்சு இல்யாசி தனது அண்ணனிடம் கூறுகிறார். இதையடுத்து தன் தங்கைக்கு கோபம் அதிகமாக வரும் என்று சுஹைப் இல்யாசியிடம் கூறிய பிரகாஷ், இருவரையும் சமாதானப்படுத்தி டெல்லிக்கு அனுப்பி வைக்கிறார்.

சுஹைப் இல்யாசி மற்றும் அன்சு இல்யாசி இருவரும் லண்டனில் படித்ததால் அங்கு தொலைக்காட்சியில் நடக்கும் க்ரைம் ஸ்டாப்பர்ஸ் நிகழ்ச்சி பற்றி நன்கு அறிந்திருந்தனர். க்ரைம் ஸ்டாப்பர்ஸ் என்பது குற்றவாளிகளிடம் நேரடியாக பேட்டி எடுக்கும் நிகழ்ச்சி. லண்டனில் இந்த நிகழ்ச்சி அப்போது நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த நிகழ்ச்சியை ‘இந்தியாவின் மோஸ்ட் வாண்டட்’ என்ற பெயரில் தொடங்க சுஹைப் இல்யாசி நினைத்துள்ளார். அதன் முயற்சியாக அஞ்சு இல்யாசியை தொகுப்பாளாராக வைத்து குற்றவாளிகளுடன் பேட்டி எடுத்த வீடியோவை நிறைய தனியார் தொலைக்காட்சிகளுக்கு அனுப்புகிறார். அந்த வீடியோக்களைப் பார்த்த பிரபலமான தனியார் தொலைக்காட்சி நிறுவனம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஒப்புக்கொள்கிறது. இதனிடையே அஞ்சு இல்யாசி கர்ப்பமானதால் தொகுப்பாளராக சுஹைப் இல்யாசி வேலையில் ஈடுபட்டு வந்தார். 52 வாரங்கள் ஒளிபரப்பான அந்த நிகழ்ச்சிக்கு சொல்ல முடியாத அளவுக்கு பெரும் அளவில் வரவேற்பு இருந்தது. அந்தளவிற்கு பெருவாரியான மக்கள் அந்த நிகழ்ச்சியை விரும்பி பார்க்க ஆரம்பித்தனர்.

அந்த நிகழ்ச்சியால் சுஹைப் இல்யாசிக்கு திரை நட்சத்திரங்களை காட்டிலும் அதிக ரசிகர்கள் கூட்டம் உருவானது. அதில் சிலர் அவர் மீது வெறித்தனமான ரசிகர்களாகவும் இருந்துள்ளனர். அந்த ரசிகர்களில் சிலரை சுட்டிக்காட்டி இப்படிப்பட்ட ரசிகர்களுடன் பழகுவது பாதுகாப்பு இல்லை என அஞ்சு இல்யாசி சுஹைப் இல்யாசியிடம் கூறுகிறார். இதனிடையே ஒரு குறிப்பிட்ட ரசிகர் டாலர், இரத்தத்தால் எழுதப்பட்ட கடிதம் உள்ளிட்டவைகளை சுஹைப் இல்யாசிக்கு அனுப்பியுள்ளார். இதைப்பார்த்த அஞ்சு இல்யாசி, இப்படிப்பட்ட ரசிகர்களை ஊக்குவிக்கக் கூடாது என அதை திரும்ப அனுப்ப கோரி சுஹைப் இல்யாசியிடம் சொல்கிறார். பின்பு சுஹைப் இல்யாசி இதுபோல இரத்தத்தில் கடிதம் எழுவதை நிறுத்திக்கொள்ளுங்கள் என பதில் கடிதம் எழுதி அவர் கொடுத்த பொருட்களை திருப்பி அனுப்பியுள்ளார். ஒரு பக்கம் குற்ற பின்னணியில் இருப்பவர்களை வைத்து ஒளிபரப்பாகும் அந்த ஷோ நல்ல வரவேற்புடன் இருந்து வந்த நிலையில், அந்நிகழ்ச்சியால் தனக்கு ஏற்பட்ட பப்ளிசிட்டியை பயன்படுத்த நினைத்த சுஹைப் இல்யாசி சினிமா படம் தயாரிக்க முடிவெடுக்கிறார். அதன் முயற்சியாக ‘தில்ஹை ஹிந்துஸ்தானி’ என்ற படத்தையும் தயாரிக்க ஆரம்பித்திருகிறார். இதனிடையே சுஹைப் இல்யாசி மற்றும் அஞ்சு இல்யாசிக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. குழந்தைக்கு ஆலியா என்று பெயரிட்டு தங்களது தயாரிப்பு நிறுவனத்திற்கு குழந்தையின் பெயரை சூட்டுகின்றனர். கொஞ்ச நாளில் அந்த நிறுவனத்திற்கு கிடைத்த பாப்புலாரிட்டியைப் பார்த்த சுஹைப் இல்யாசி அதை பிரைவேட் லிமிடேட் கம்பெனியாக மாற்றியிருக்கிறார். நிறுவனத்தின் 25% ஷேரை மனைவியின் பெயரில் போட்டுள்ளார். அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து டெல்லியில் ஒன்றரை கோடிக்கு காம்ப்ளக்ஸ் வீடு ஒன்றை வாங்கியுள்ளார்.

வீட்டின் அலங்காரத்துக்கு மட்டும் 10 மாத காலம் ஆகியிருக்கிறது. அந்தளவிற்கு அஞ்சு இல்யாசி வீட்டிற்கு செலவு செய்துள்ளார். மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்ட அந்த வீட்டில் சுஹைப் இல்யாசி, அன்சு இல்யாசி, ஆலியா ஆகியோர் குடும்பமாக வசித்து வந்துள்ளனர். ஒருபுறம் சுஹைப் இல்யாசி நடத்திய அந்த நிகழ்ச்சியில் கிடைக்கும் தகவல்களால் 134 குற்றவாளிகளை போலீசார் பிடித்து அதில் சிலரை எண்கவுண்டர் செய்துள்ளனர். அதில் தன்னுடைய பங்கும் இருப்பதாக சுஹைப் இல்யாசி சொல்லி வந்திருக்கிறார். இதற்கு காவல்துறை மறுப்பு தெரிவித்து அந்த நிகழ்ச்சி இல்லாமல் இருந்தாலும் கண்டிப்பாக குற்றவாளிகளை பிடித்திருப்போம் என்று பதில் கொடுத்துள்ளனர். இதற்கிடையில் தங்களைப் பற்றிய தகவல்கள் காவல்துறைக்கு எப்படி செல்கின்றது என்று பல குற்றவாளிகள் சுஹைப் இல்யாசிடம் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் தனக்கு பாதுகாப்பு வேண்டும் என்று சுஹைப் இல்யாசி காவல் துறையினரிடம் கூற அவரது வீட்டின் முன் இரண்டு துப்பாக்கி ஏந்திய காவலர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த காவல்துறை ஏற்பாடு செய்து கொடுக்கிறது. மிரட்டல்கள் அதிகம் வந்ததால் ஏற்கனவே சுஹைப் இல்யாசி துப்பாக்கியை வாங்கியிருக்கிறார். அதோடு தனது வீட்டில் மனைவியுடன் சண்டை வந்து துப்பாக்கியால் எதாவது விபரீதம் ஆகிவிடக்கூடாது என்பதற்காக அந்த துப்பாக்கியை அலுவலகத்தில் வைத்திருக்கிறார்.

இந்த சூழலில் சுஹைப் இல்யாசியின் வெறித்தனமான அந்த ரசிகர் மீண்டும் ஒரு பார்சல் அனுப்பியுள்ளார். சுஹைப் இல்யாசி அவசரமாக அலுவலகம் சென்று கொண்டிருந்ததால், அது என்ன பார்சல் என்று அஞ்சு இல்யாசிவைப் பார்க்கக் சொல்லியிருக்கிறார். சுஹைப் இல்யாசி அலுவலகம் சென்றதும் அஞ்சு இல்யாசி அவருக்கு கால் செய்து, துப்பாக்கிய எடுத்துட்டு போய்டீங்களா? குழந்தையை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கவா? என்று கேட்டுள்ளார். அதற்கு சுஹைப் இல்யாசி, இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்துவிடுவேன் என பதிலளித்து எதற்காக துப்பாக்கி குறித்து கேட்கிறாய்? என்ன பிரச்சனை? என்று கேட்டுள்ளார். அதற்கு அவரின் மனைவி, அந்த ரசிகன் சகவாசம் வேண்டாம் என்று முன்பே சொன்னேன். இப்போது மீண்டும் இரத்தத்தால் படிந்த பொருளை பார்சலில் அனுப்பி இருக்கிறார். என்று சொல்லி சண்டையிட்டுள்ளார். அதன் பின்பு வீட்டிற்கு வந்த சுஹைப் இல்யாசி இரவு 11 மணி வரை குழந்தையிடம் விளையாடிக்கொண்டிருந்தார். தீடீரென சமையல் அறைக்குள் அலறல் சத்தம் கேட்க சுஹைப் இல்யாசி உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டில் இருந்த ஷார்ப்பான வெளிநாட்டு கத்தியால் அஞ்சு இல்யாசி தன்னைத்தானே இரண்டு முறை குத்திக்கொண்டு இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். அதிர்ச்சியான சுஹைப் இல்யாசி, பாதுகாப்பில் இருந்த இரண்டு காவலர்களை அழைத்து ஆம்புலன்ஸ்க்கு ஏற்பாடு செய்ய சொல்கிறார். பின்பு மருத்துவமனைக்கு செல்லும்போது அதிக ரத்தம் உடலைவிட்டு வெளியேறியதால் அஞ்சு இல்யாசி இறந்துவிடுகிறார்.

உடல் பரிசோதனையில் அஞ்சு இல்யாசி கத்தியை பிடித்திருந்த திசை, குத்திய தடம், காயங்கள் என அனைத்தையும் வைத்து தற்கொலை என மருத்துவர்கள் சர்டிபிகேட் கொடுத்துள்ளனர். அஞ்சு இல்யாசி உயிரிழந்த வழக்கில், காவல்துறையினர் அஞ்சு இல்யாசியின் வீட்டாரிடம் சந்தேகம் இருக்கிறதா? என்று விசாரித்துள்ளனர். அப்போது அஞ்சு இல்யாசி அப்பா, தம்பி. தங்கை என அனைவரும், அஞ்சு இல்யாசி கோபத்தை கட்டுபடுத்த முடியாமல் தற்கொலை செய்திருக்கலாம். மாப்பிள்ளை மீது எந்தவித சந்தேகமும் இல்லை என சொல்லியிருக்கின்றனர். அஞ்சு இல்யாசி அம்மா கனடாவில் இருந்ததால் அவரிடம் காவல்துறையினர் விசாரிக்காமல் இந்த வழக்கு தற்கொலை வழக்கு என்று காவல்துறையினர் முடிவெடுத்துவிடுகின்றனர். இவ்வழக்கு குறித்த மேலும் விவரங்களை அடுத்த தொடரில் காணலாம்...