Skip to main content

துணையில்லா பெண்களை டார்கெட் செய்யும் டாக்டர்; பதற வைக்கும் கொலைச் சம்பவங்கள் - திலகவதி ஐபிஎஸ் பகிரும் தடயம் :76

Published on 18/09/2024 | Edited on 18/09/2024
thilagavathi ips rtd thadayam 76

இந்தியாவையே உலுக்கிய டாக்டர் டெத் என்று சொல்லக்கூடிய சீரியல் கில்லர் செய்த கொலை சம்பவங்களை பற்றி தமிழ்நாடு காவல்துறையின் முதல் பெண் இயக்குநர், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி விளக்குகிறார்.

மகளை காணச் சென்ற போது மங்களா காணாமல் போன வழக்கில், டாக்டர் என்று சொல்லப்படும் சந்தோஷிடம் போலீசார் நடத்திய விசாரணையில், மங்களாவை சந்தோஷும், நர்ஸ் ஜோதியும் தங்களுடைய இடத்திற்கு அழைத்துச் செல்கிறார்கள். இதோடு முந்தைய தொடரில் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாகப் பின்வருமாறு... 

அங்கு சென்ற சந்தோஷுக்கும், மங்களாவுக்கு கடுமையான வாக்குவாதம் வருகிறது. இதில் ஆத்திரமடைந்த சந்தோஷ், மங்களாவுக்கு ஒரு ஊசியை எடுத்துக்கொண்டு போட்டுவிடுகிறார். இதனால், சுயநினைவை இழந்த மங்களாவின் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு மங்களா போட்டிருந்த நகைகளை எல்லாம் எடுத்துக்கொள்கிறார். அதன் பின், அங்கு தரையை தோண்டி மங்களாவை புதைத்துவிடுகிறார் என்று போலீசாருக்கு தெரியவருகிறது. அதன் பேரில், போலீசாரும் அந்த இடத்திற்கு சென்று தோண்டி அந்த உடலை எடுத்து அந்த இடத்திலேயே பரிசோதனை செய்கிறார்கள். டிஎன்ஏ வைத்து அந்த உடலை பரிசோதனை செய்ததில், புதைக்கப்பட்ட உடல் மங்களாவின் உடல் தான் போலீசார் கண்டுபிடித்தனர். இந்த விசாரணையின் போது, சந்தோஷ் கடந்த 2003ஆம் ஆண்டில் இருந்தே 6 கொலைகளை செய்துள்ளார் போலீசாருக்கு தெரியவந்தது.

மேற்படி அவரிடம் நடத்திய விசாரணையில், மூன்று குழந்தைகளுக்கு தாயான 23 வயதான சுரேகா என்ற பெண் சந்தோஷுடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார். வீட்டில் ஏற்பாடு செய்த வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய விருப்பப்பட்ட சந்தோஷ், சுரேகாவை தள்ளி வைக்க வேண்டும் என்று எண்ணியுள்ளார். இதற்கு பிடிவாதமாக சுரேகா மறுத்து, தன்னை தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று கண்டிசன் போட்டுள்ளார். இதனால், சந்தோஷ் சுரேகாவிடம் இனிமையாக பேசியதன் பேரில் வீட்டில் உள்ள நகைகளை எல்லாம் எடுத்துக்கொண்டு மணமகள் கோலத்தில் வந்துள்ளார். அங்கு சுரேகாவுக்கு ஒரு ஊசி போட்ட பிறகு அவள் சுயநினைவை இழந்ததற்கு பின்னால், சுரேகாவின் கழுத்து நெரித்து கொலை செய்து நகைகளை எடுத்துக்கொண்டு புதைத்துவிடுகிறார். 2003ல் நடந்த இந்த சம்பவம் அப்போது பெரிதாக பார்க்கப்படாததால், காவல்துறையும் இதை கண்டுகொள்ளவில்லை.

இதில் தான் பிடிபடவில்லை என்பதால் சந்தோஷுக்கு அதிகம் தைரியம் கொடுக்கிறது. டைவர்ஸ் வாங்கியும், கணவனை இழந்தும் துணை இல்லாத பெண்களை மட்டுமே சந்தோஷ் டார்கெட் செய்கிறார். அதையடுத்து, வனிதா என்ற பெண்ணிடம் பழகி அவரையும் கொலை செய்கிறார். நில பிரச்சனையை தீர்த்து வைக்க சந்தோஷிடம் வந்த அவரின் உறவினரான ஜகாபாய் போல் என்ற பெண்ணுக்கு ஊசி போட்டு அவர் போட்டிருந்த நகைகளை எல்லாம் எடுத்துக்கொண்டு கொலை செய்து புதைத்துவிடுகிறார். இந்த சம்பவங்களுக்கெல்லாம், சந்தோஷோடு  நர்ஸ் ஜோதி துணையாக இருக்கிறார். இதையடுத்து, நகைக்கடைக்காரரன நஸ்மல் பண்டாரி என்பவரிடம் பேசியதன் காரணமாக சுமார் 20 பவுன் தங்க நகைகளை எடுத்துக்கொண்டு சந்தோஷை பார்க்கச் சென்றிருக்கிறார். இவருக்கு ஊசி போட்டு நகைகளை எடுத்து கொலை செய்து புதைத்துவிடுகிறார். 

அடுத்ததாக 15,16 வயதான அநாதை பெண் சல்மா ஷேக்கை, தன்னுடைய பாலியல் இச்சைக்காக சந்தோஷ் பயன்படுத்திருக்கிறார். அந்த பெண்ணையும், ஏதோ ஒரு காரணத்தை சொல்லி அவரையும் கொலை செய்து புதைத்துவிடுகிறார். இப்படியாக சம்பவங்கள் நடந்த போது மங்களாவின் விஷயத்தில் தான் சந்தோஷ் சிக்கிக்கொண்டுள்ளார். கொலை செய்யப்பட்ட இடங்களை எல்லாம் போலீசார் தோண்டி பார்த்ததில், எலும்பு கூடுகளாக இருந்தன. அங்கு இருந்த எலும்பு கூடுகளை வைத்து கொல்லப்பட்டவர்கள் அவர்கள் தான் என்பதை உறுதி செய்கிறார்கள். தடயங்கள்,சாட்சியங்கள் போலீசார் சேகரிக்கிறார்கள். மேற்படி, சந்தோஷிடம் விசாரணை நடத்தியதில், வனிதா நரகரி என்ற எயிட்ஸ் பாதிக்கப்பட்டுள்ள பெண் போட்டிருந்த நகைகளை எடுத்துக்கொண்டு, சந்தோஷ் கொலை செய்து புதைத்துவிடுகிறார். சந்தோஷ் சொன்ன தகவலின் பேரில், அந்த பெண்ணின் உடலை கிருஷ்ணா நதியின் ஓரத்தில் போலீசார் தேடுகிறார்கள். கிட்டத்தட்ட ஒரு வாரமாக தேடியும் வனிதாவின் உடலை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் சோர்ந்து போகும் நேரத்தில், சுரேகா உடல் பக்கத்தில் தான் வனிதாவின் உடலை புதைத்துள்ளதாக என்ற உண்மையை சந்தோஷ் சொல்கிறார். சந்தோஷின் மனைவியிடம் விசாரித்தால், இந்த விஷயங்கள் எதுவுமே தெரியாமல் இருக்கிறார். 

தனியாள் ஒருவர், இத்தனை கொலைகளை செய்து கொடூரமாக நடந்திருக்கிறார் என்பதற்காக, சந்தோஷுக்காக எந்த வழக்கறிஞரும் அப்பியர் ஆக கூடாது என்று பூனே அசோசியேஷன் பாரில் ஒரு தீர்மானம் போடுகிறார்கள். கோர்ட்டில், சந்தோஷுக்காக யாரும் ஆஜராகாததால், இலவச சட்ட உதவி மூலமாக வழக்கறிஞர் போடுகிறோம் என்று நீதிபதி சொன்னாலும், யாரும் அப்பியர் ஆக தேவையில்லை நானே பார்த்துக்கொள்கிறேன் என்று சந்தோஷ் சொல்கிறார். இப்படியாக வழக்கு தொடர்ந்தது. இதற்கிடையில், சந்தோஷுக்கு உடந்தையாக இருந்த நர்ஸ் ஜோதி அப்ரூவராக மாறுவதாக ஒப்புக்கொண்டார். இந்த 6 கொலை சம்பவங்களும் வெவ்வேறு காரணத்துக்காக நடத்தப்பட்டதால், 6 கொலை வழக்குகளையும் ஒன்றாக நடத்த முடியாது என்று நீதிபதி கூறிவிட்டார். இதனால், ஒவ்வொரு வழக்கையும், தனியாக விசாரித்து ஆதாரங்களையும், சாட்சியங்களையும் போலீசார் தொடர்ந்து சேகரித்து வருகின்றனர். இதனால், இந்த வழக்கு இன்னமும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இதுவரை, சந்தோஷுக்கு முடிவான தண்டனை என எதுவும் தரப்பட்டதாக தெரியவில்லை. இன்னமும், சந்தோஷ் சிறையில் தான் இருக்கிறார்.