தனிமனிதராக 931 கொலைகள், 1200 பேர் கொல்லப்பட்டதற்கு திட்டங்கள் வகுத்து கொடுத்து கின்னஸ் சாதனை படைத்த தக் பெஹராம் என்பவரைப் பற்றி தான் தமிழ்நாடு காவல்துறையின் முதல் பெண் இயக்குநர், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி விளக்குகிறார்.
தனிமனிதராக 931 கொலைகள் செய்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த தக் பெஹராம் என்பவரைப் பற்றி தான் இப்போது பார்க்க போகிறோம். 956 பேர் கொல்லப்படுவதை கண்ணால் பார்த்து சாட்சியாகவும் பங்களித்திருக்கிறார். இது தவிர 1200 பேர் மரணமடைவதற்கு திட்டங்களை வகுத்து கொடுத்தவராகவும் இருந்திருக்கிறார். ஜபல்பூர் அருகே உள்ள கிராமத்தில் தான் பெஹராம் பிறந்திருக்கிறார். அமைதியான, யாருடனும் பழகாத தனிமையை நாடுகிற குழந்தையாக தான் ஆரம்பத்தில் இருந்திருக்கிறார். 21 வயது வாலிபராக இருக்கும் போது அவருக்கு, சையத் அமீர் அலி (எ) சிரங்கி என்பருடன் பழக்கம் ஆகிறது.
சையத் அமீர் அலி, பெஹராமை கொண்டு போய் அந்த ஊரில் யாரை பார்த்தெல்லாம் மக்கள் மரியாதை செலுத்துகிறார்களோ, பயப்படுகிறார்களோ அந்த மாதிரி நபர்களிடம் அறிமுகம் செய்து வைக்கிறார். அவர்களோடு பெஹராம் நெருங்கி பழகுகிறார். அதன் பின்னர் தான் அவருக்கு தெரிகிறது, அவர்களெல்லாம் ஒரு கொள்ளைக் கூட்டத்தின் பகுதி என்பது. உடனேயே தானும் அவர்கள் மாதிரி ஆகவேண்டும் என்ற ஆசை பெஹராமுக்கு வருகிறது. அதற்குண்டான பயிற்சி எல்லாம் எடுத்துக்கொண்டு தன்னுடைய 25 வயதில் தக்ஸ் குழுவில் உள்ள நன்கு செயல்படக்கூடிய 40 பேரை தேர்ந்தெடுத்து தன்னுடைய குழுவாக பெஹராம் உண்டாக்குகிறார். தக்ஸ் என்பது காளியின் குழந்தை என்று சொல்வார்கள். அவர்களை எல்லாம் ஒரு காளி கோவிலுக்கு அழைத்து சென்று ஒரு சபதம் எடுத்துக் கொள்வார்கள். அந்க் குழுவில் உள்ளவர்கள் யார், எப்படி செயல்படுகிறார்கள் பரம ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என்பது அவர்களின் முக்கிய விதி. அதே போல், குழந்தைகள், பெண்களை கொல்லக்கூடாது எனப் பொதுவான விதி பட்டியல் இருக்கிறது. இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் தெரிந்துகொண்டு பெஹராம் செயல்படுகிறார். அந்தச் செயல்பாட்டில் அவரை மிஞ்சுவதற்கு ஆளே இல்லை என்று அந்தக் குழுவில் அவருக்கு புகழ் கிடைக்கிறது.
வரலாற்று ஆசிரியர் வில்செண்ட் ஸ்மித் என்பவர், பிரோஷா துக்ளக் டெல்லியினுடைய அதிபராக இருந்த ஆட்சி காலமான 1351ஆம் ஆண்டிலேயே தக்ஸ் என்பவர்கள் இருந்திருக்கிறார்கள் என்று ஆய்வு செய்து சொல்கிறார். அன்றைக்கு செயல்பட்டிருந்த 1000 தக்ஸை, பிரோஷா துக்ளக் கைது செய்து நடவடிக்கை எதுவும் எடுக்காமல் நதி வழியாக இந்தியாவில் உள்ள பல இடங்களில் இடம்மாற்றுகிறார். அவர்கள் நாடு முழுவதும் கொள்ளை அடிப்பதும், மக்களை கொல்வதுமாக தான் இருந்திருக்கிறார்கள். இதை வரலாற்று ஆசிரியர் வில்செண்ட் ஸ்மித் பதிவு செய்திருக்கிறார். தக்ஸை பற்றி நிறைய பேர் புத்தகங்கள் எழுதியிருக்கிறார்கள். இதில் இன்னொரு தியரியும் இருக்கிறது. இன்றைய ஈரானான பாரசீரகத்தில், ஆட்சியாளர்களை எல்லாம் அஞ்ச வைத்த ஹசன் எனும் கொள்ளையன் இருந்தான். அவன் ஒரு அமைப்பை உருவாக்கி தக்ஸ் செய்யும் வேலையான வழிப்பறி கொள்ள, கொலை ஆகியவற்றை செய்துகொண்டிருந்தான். முதுமை காரணமாக அவன் மறைந்த பின்பு, அவன்கிட்ட வேலை பார்த்துகொண்டிருந்தவர்கள் ஏழெட்டு பிரிவாக ஆப்கானிஸ்தான் வழியாக இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு சென்றார்கள் என்ற தியரியும் இருக்கிறது. இது மாதிரியான நிறைய தியரி இருக்கிறது.
அனைத்து தக்ஸ் நினைக்கிற மாதிரி, இதை புனிதகடமையாக பெஹராம் நினைக்கிறார். இது காளியின் வேலை, அவள் கோபத்தை தணிக்க ரத்த தானம் கொடுக்க வேண்டும் என்று எண்ணி மக்களிடம் வழிப்பறி செய்து கொலை செய்வதை ஒரு கடமையாக தக்ஸ் நினைக்கிறார்கள். இதை அந்த அமைப்பில் உள்ள வயதானவர்கள், சிறு வயதில் இருக்கக்கூடியவர்களிடம் கற்பிக்கிறார்கள். திருமணத்தை முன்னிட்டோ, புனித யாத்திரை முன்னிட்டோ வரும் பயணிகளை தாக்கி கொலை செய்வது அவர்களுடைய வேலை. இதற்கு, இவர்களிடம் இருக்கக்கூடிய நபர்களை மூன்று பிரிவாக பிரித்துக்கொள்வார்கள். அந்த பயணிகளிடம் நல்ல இணக்கமாக பழகி, அவர்கள் நம்பிக்கையை பெற்று ஒரு ஊமத்தங்காயை எடுத்து பயணிகள் சாப்பிடும் உணவில் கலந்து கொடுத்து அவர்களை மயக்க நிலையில் கொண்டு போய் அவர்களை கழுத்தை இறுக்கி கொலை செய்வது ஒரு பிரிவு. எந்த குழுவை தாக்கினால் அதிகப்படியான நகை, பணம் கிடைக்கும் என்ற தகவலை சேகரித்து கொலை செய்யும் பிரிவிடம் சொல்வது மற்றொரு பிரிவு. அந்த பயணிகள் இறந்த பிறகு, அவர்களின் உடல்களை புதைப்பதற்கு செளகரியான இடம் என்று தேர்ந்தெடுத்து புதைப்பது இன்னொரு பிரிவு. இந்த பணிகளை, புதிதாக சேர்பவர்கள், அவர்கள் குழுவில் உள்ள குழந்தைகள், மற்றும் பயணிகளின் குழந்தைகளிடம் தான் கொடுப்பார்கள்.
பயணிகள் குழுவில் தாக்கி, அதில் உள்ள ஆண்களை எல்லாம் தக்ஸ் குழுவினர் கொல்வார்கள். பெண்கள், குழந்தைகளை மட்டும் கொல்லவே மாட்டார்கள். அந்தப் பெண்களை எல்லாம் அழைத்து தங்களுடைய கிராமத்திற்கு கொண்டு போய் விடுவார்கள். அந்தப் பெண்கள், அவர்களின் குடும்பத்தில் இணைந்து இணக்கமாக வாழ்வார்கள். அந்தக் குழந்தைகளை இவர்களே தத்தெடுத்து கொள்வார்கள். ஆண் குழந்தைகளாக இருந்தால், அவர்களுடைய குழுவில் சேர்த்துக்கொள்வார்கள். பெண் குழந்தைகளாக இருந்தால் அவர்களை கெளரவமாக வளர்த்து அந்தக் குழுவில் இணைந்த புதியவர்களுக்கு திருமணம் செய்து கொடுப்பார்கள்.