Skip to main content

ஒரே வீட்டில் 6 பேரைக் கொன்ற பெண் சீரியல் கில்லர் - திலகவதி ஐபிஎஸ் பகிரும் தடயம்: 03

Published on 25/03/2023 | Edited on 25/03/2023

 

 Thilagavathi IPS (Rtd) Thadayam : 03

 

சீரியல் கில்லர் என்கிற பதத்தை நாம் ஆண்களோடு தான் இதுவரை தொடர்புபடுத்தியிருப்போம். ஆனால் கேரளாவில் ஒரு பெண் சீரியல் கில்லராக இருந்து பல கொலைகளைச் செய்துள்ளார். அந்த வழக்கு குறித்து நம்மிடம் தமிழ்நாடு காவல்துறையின் முதல் பெண் இயக்குநர் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி விவரிக்கிறார்.

 

ஜாலி ஜோசப் என்கிற கேரளப் பெண் தன்னுடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்களையே கொலை செய்தது பற்றிய கதை இது. கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் பிறந்தவர். சின்ன வயதில் சிறுசிறு தவறுகள் செய்து ஒழுக்கவாதியான தன் தந்தையிடம் பலமுறை அடி வாங்கியிருக்கிறார். பள்ளியில் திருட்டுகளிலும் ஈடுபட்டு வந்திருக்கிறார். அனைவரிடமும் இயல்பாகப் பழகுபவர் போல் தெரிந்தாலும் மனதுக்குள் கொடூரமான எண்ணங்களையும் திட்டங்களையும் வைத்திருப்பவர்களை சோசியோபாத்  என்பார்கள். அப்படிப்பட்ட ஒருவராக இந்தப் பெண் இருந்திருக்கிறார். கோழிக்கோடு பகுதிக்கு ஒரு திருமணத்திற்காகச் சென்றிருந்தபோது ராய் தாமஸ் என்கிற நபரோடு காதல் ஏற்பட்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணத்தில் முடிந்தது. கூடத்தாய் என்கிற பகுதிக்கு திருமணத்திற்குப் பிறகு வாழ வந்தாள் அந்தப் பெண். முதலில் இப்படி ஒரு மருமகள் நமக்கு வாய்த்தாளே என்று பெருமைப்படும் வகையில் இவளுடைய நடவடிக்கைகள் இருந்தன. குடும்பத்தின் நிர்வாகம் அனைத்தும் மாமியாரின் வசம் இருந்தது. மாமியார் இல்லாமல் போனால் அனைத்தும் நம் வசம் வந்துவிடும் என்று இவள் எண்ணினாள். 

 

மருத்துவமனைக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த மாமியாருக்கு ஜாலி மட்டன் சூப் கொடுத்தாள். அதைக் குடித்தவுடன் மயங்கி விழுந்த மாமியார் மருத்துவமனைக்கு செல்வதற்குள் உயிரிழந்தார். மாரடைப்பு காரணமாக இருக்கும் என்று அனைவரும் நினைத்தனர். அதன்பிறகு மாமனாரோடு நெருக்கமானாள் ஜாலி. நெல் வயலை விற்று 15 லட்ச ரூபாயை ஜாலியிடம் கொடுத்தார் மாமனார். இதன்பிறகு வீட்டை உரிமை கொண்டாடக்கூடாது என்றும் கூறினார். இன்சூரன்ஸ் பாலிசியிலும் ஜாலியை நாமினியாகச் சேர்த்தார். இதனால் தாமசுக்குத் தன் தந்தை மேல் கோபம் ஏற்பட்டது. ஆறு வருடம் கழித்து ஒருநாள் இரவு கப்பைக் கிழங்கு செய்து மாமனாருக்கு சாப்பிடக் கொடுத்தாள் ஜாலி. அதை உண்ட பிறகு அவர் மயங்கி விழுந்தார். பக்கத்து வீட்டுக்குத் தகவல் தெரிவித்தாள் ஜாலி. அவர்கள் வந்து பார்ப்பதற்குள் மாமனாரின் உயிர் பிரிந்தது. வயதானதால் மரணம் ஏற்பட்டது என்று அனைவரும் நம்பினர். சில வருடங்கள் கழித்து ராய் தாமஸ் புட்டும் கடலைக் கறியும் சாப்பிட்ட பிறகு வாந்தி எடுத்தார். 

 

இவர்களுடைய வீட்டுக்கு அருகில் மாமியாரின் தம்பி வசித்து வந்தார். அவருக்கு சந்தேகம் வந்தது. தாமஸ் என்ன சாப்பிட்டார் என்று கேட்கும்போது ஒன்றுமே சாப்பிடவில்லை என்று கூறினாள் ஜாலி. அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அமெரிக்காவில் இருந்த தன்னுடைய சகோதரரை அழைத்து இங்கு வரச் சொன்னார். போஸ்ட்மார்ட்டம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். போஸ்ட்மார்ட்டம் செய்தபோது தான் தெரிந்தது சைனைட் சாப்பிட்டு தான் அவர் இறந்தார் என்று. அப்போதும் தானாக சைனைட் சாப்பிட்டு அவர் தற்கொலை செய்து கொண்டிருப்பார் என்று தான் ஜாலி வாதிட்டாள். ராய் இறந்த சில வருடங்களுக்குப் பிறகு மாமியாரின் தம்பியும் இறந்து போனார். ஜாலி போட்டுக் கொடுத்த காபியைக் குடித்து அவர் இறந்தார்.

 

இந்த மரணத்திற்குப் பிறகு அருகில் வசித்து வந்த மாமியாருடைய கொழுந்தனார் மகன் குடும்பத்தில் ஞானஸ்தானம் வழங்கும் நிகழ்ச்சிக்கு ஜாலி செல்கிறாள். அங்கு ஞானஸ்தானம் வழங்கும் பையனின் ஒன்றரை வயது சகோதரி இறந்து போகிறாள். அந்தக் குழந்தைக்கு ஜாலி தான் பிரட் சாப்பிடக் கொடுத்திருக்கிறாள் என்பது அதன்பின் தெரிந்தது.