Skip to main content

லதா சரவணன் எழுதும் விறுவிறு டெக்னோ தொடர்... இரவல் எதிரி #09

 

 

iraval edhiri part 9

 

இரவல் எதிரி - முந்தைய பகுதிகள்

 

“என்ன ஸார் செய்யப்போறோம்?” சிவா படித்துவிட்டு போயிருந்த காகிதத்தைக் கையில் வைத்துக் கொண்டு தன் அறையில் அடைபட்ட புலியாய் உட்கார்ந்திருந்தான் மாறன். வேந்தனின் குரல் கேட்டு நிமிர்ந்தான். அந்த நகத்தில் எழுதப்பட்டு இருந்த செய்தியில் அவனுக்குமே அதிர்ச்சி. 

‘இன்னும் சில நாட்களுக்கு நமக்குள் நடக்கப்போகும் கண்ணாமூச்சியின் விடை நீ என்னை சந்திக்கும் தருணத்தில் உனக்கு கிடைக்கும். ஆனால், அந்த சந்திப்பை வெகு எளிதாக என்னால் தந்துவிட முடியாது மாறன். குறித்து வைத்துக் கொள் மிக மோசமான விளைவுகளை சந்திக்கப் போகிறாய். நான் விரித்திருக்கும் வலையில் விட்டிலென விழப்போகும் பட்டாம்பூச்சிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப் போகிறது. ஏன் இவர்களை பட்டாம்பூச்சிகள் என்று அழைக்கிறேன் என்று பார்த்தாயா? அதன் ஆயுளும் குறைவுதான். விஷம் தோய்க்கப்பட்ட கத்தியின் பளபளப்பிற்கு தன் உயிரைத் தரக் காத்திருக்கும் அவர்களின் சார்பாக நீ வெற்றிபெற வாழ்த்துக்கள். இத்தனை நெருங்கிவிட்டோம் உனக்கு என் பெயர் தெரிய வேண்டாமா? ஸ்பைடர்’ என்று எழுதி முடித்திருந்தது அந்த செய்தி. 

“இது ஏதோ சைக்கோ விவகாரமா? யாரிவன் மாறன் எனக்கென்னவோ இன்னும் பிள்ளைகளின் கடத்தலும் அவர்களின் இறப்பும் தொடரும் என்பதற்கு இது ஒரு க்ளூ என்றே தோன்றுகிறது? விரைவில் ஏதாவது செய்ய வேண்டும். சீக்கிரம் மாறன், உங்களுக்கு முழு அதிகாரம் தருகிறேன். எந்த போர்ஸை வேண்டுமானாலும் உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள், எனக்கு சீக்கிரம் இந்த பிரச்சனையைத் தீர்க்க வேண்டும்.” கமிஷனர் பொறுப்பை அவன் தலையில் இறக்கிவிட்டார். மாறன் அப்போதிலிருந்தே படு டென்ஷனில் இருந்தான். 

“என்ன செய்யப்போகிறோம்?” என்ற வேந்தனின் கேள்வியில் நிமிர்ந்தவன்.  

“வேந்தன் இந்த கேஸ் பற்றிய தரவுகள் உள்ள பைலை எடுங்க விசாரணையை வேறொரு கோணத்தில் தொடங்கலாம். ரவி தவிர்த்து மற்ற பிள்ளைகள் காணாமல் போன இடம் பற்றியும், நம் ஆட்கள் அங்கே யார் யாரை விசாரித்தார்கள் என்ற தகவல்களும் எனக்கு வேணும். அவங்களோட வாக்குமூலங்களை வைத்து மீண்டும் ஆராயலாம்.” 

“ஸார் மற்ற எந்த இடத்திலும் கடத்தலுக்கு உண்டான எதுவும் பதிவாகலை, ஆனா கடைசியா ரவியைக் கடத்தினப்ப மட்டும் அவனோட ஸ்கூலுக்கு அருகாமையில் நீதியரசர் வீட்டுக்குப் பக்கத்திலே ஒரு கருப்பு காண்டஸா ரொம்ப நேரமா நின்றுகிட்டு இருந்ததா ஒரு தகவல் இருக்கு. ஒருவேளை அது பிள்ளை ஏற்றிப்போக பேரண்ட்ஸ் ஹையர் பண்ண வண்டியாக் கூட இருக்கலாம்.” 

“அதை யார் பார்த்தாங்களாம்?” 

“ஸ்கூல் வாட்ச்மேன் சொன்னார். நான் அவரை மீண்டும் விசாரிக்கறேன் ஸார்.” வேந்தன் ஒரு சல்யூட்டை விநியோகித்து விட்டு வெளியேற, இரண்டு பையன்களும் ஒரு பெண்ணும் அமர்ந்திருந்தார்கள். கான்ஸ்டபிளிடம், “என்ன கேஸ்?” என்றான் வேந்தன். 

“ஸார் மயிலாப்பூர்ல இருக்கிற ஸ்கூல் வாசல்ல இவங்க இரண்டுபேரையும் பிடிச்சோம் இந்த பசங்க அடிக்கடி பள்ளிக்கூடம் விடற நேரமா பொம்பளைப் பிள்ளைகளைத் தொந்தரவு தர்றதா ஸ்கூல் நிர்வாகத்திடம் இருந்து கம்ப்ளைண்ட் வந்திருக்கு. இன்னைக்கும் இதே மாதிரி போயிருக்காங்க ஸ்கூல் வாட்ச்மேன் அங்கியிருக்க வேன் டிரைவர்கள் எல்லாம் பிடிச்சிட்டு வந்து விட்டுப் போயிருக்காங்க.” அந்த பையன்களின் முகத்தை கூர்ந்து கவனித்தான் வேந்தன். பிறகு அருகிலிருந்த பெண்ணைப் பார்த்து “இவங்க?” என்றான். 

“அவங்க அக்காவாம் பிடிச்சிட்டோம்னு தெரிந்ததும் வந்திருக்காங்க.” 

“மயிலாப்பூரில் எந்த ஸ்கூல்?” 

“பள்ளியின் பெயரைச் சொல்லவும் சரக்கென்று நிமிர்ந்தான் வேந்தன். வாட்ச்மேன் எங்கே?” 

“ஸ்கூல் பிரின்சிபல் வர்றாங்களாம் அழைத்து வரப்போயிருக்கார்.” வேந்தன் அந்த பசங்களை கவனித்தான். அழுக்கேறிய பேண்ட், கோடுபோட்ட சட்டை, அது பாதி இன் செய்யப்பட்டு இருந்தது. அவர்களின் பேண்டின் இறக்கத்தின் வழியே ஜாக்கி லேபிள் தெரிந்தது. தலையில் இரண்டு பிரிவாக முடியை விரித்து கலரிங் செய்திருந்தார்கள். காதுகளில் வளையம், கண்கள் ஒருவித கிறக்கத்துடன் போலீஸ் ஸ்டேஷனில் இருக்கிறோம் என்ற பிரக்ஞையே இல்லாமல் தெனாவட்டாக நின்றிருந்தார்கள். 

 

அந்தப் பெண்மணி வேந்தனைப் பார்த்ததும், “அய்யா தெரியாம பண்ணிட்டாங்க கொஞ்சம் மன்னிச்சி உட்டுடுங்கய்யா” என்று கெஞ்ச துவங்கிய அந்த வேளை வாட்ச்மேன் உள்ளே நுழைந்தார். 

“ஸார் தெரியாம எல்லாம் பண்ணலை ஸார். கிட்டத்தட்ட ஒரு மாசமா பிள்ளைங்க வெளியே வர்ற நேரமா வர்றது, ஒரு வண்டியொன்னு வைச்சிகிட்டு சத்தமா ஹார்ன் அடிக்கிறதும், கிராஸ் பண்ணும் போது உரசுறாமாதிரி போறதும், அசிங்கமா சைகைகள் காட்டுறதும்ன்னு இவனுங்க அக்கப்போரு தாங்கலை. எப்படியாவது பிடிக்கணுன்னு நம்ம ஏட்டய்யா கூட இரண்டு நாள் ரோந்து வந்தாங்க. கரெக்டா அன்னைக்குப் பார்த்து இரண்டு பேரும் எஸ்கேப், இன்னைக்கு கையும் களவுமா பிடிபட்டுடாங்க. விடாதீங்க ஸார், திமிரு புடிச்சவங்க.” அவர் காட்டமாய் பேசினார். 

 

வேந்தன் பிரின்சியிடம் திரும்பி, “மேடம் நீங்க ஒரு ஸ்டேட்மெண்ட் எழுதிக் கொடுத்திடுங்க என்றான். இவனுங்களை லாக்கப்பில் தள்ளுங்க.” 

 

அவர்கள் திமிற பளீரென்று கன்னத்தில் ஒன்று வைத்தான். இனி இங்கே நிற்பது அத்தனை உசிதமல்ல என்று அந்தப்பெண் வாசலை நோக்கி நகர, வாட்ச்மேன் அந்த பெண்ணைப் பார்த்து சொன்னான். “ஸார் இந்தம்மாவையும் விடாதீங்க. அடிக்கடி ஒரு ஆளோட நம்ம ஸ்கூல் பக்கம் வண்டியிலே போகும், சில நேரத்திலே பிள்ளைங்க வரும்போது வீடியோவும் போட்டோவும் எடுத்து என்கிட்டே திட்டு கூட வாங்கிச்சி, அதைக் காரணமா வைச்சி அன்னைக்கு... அதான் அந்த ரவி காணாம போனானே அப்போ வேணுன்னே என்னை வெறுப்பேத்துவதற்காகவே பத்து தடவை போச்சு. அப்பப்போ கேமிராவைத் தூக்கிப் பிடிச்சா மாதிரியே, வண்டியிலே போனாங்க.” என்று வாட்ச்மேன் சொல்லவும் அவள் வாசற்பக்கம் ஓடப் பார்த்தாள். வேந்தன் ஒரே எட்டில் அவளைப் பிடித்தான். மாறன் இருக்கும் அறை நோக்கி மூவரும் சென்றார்கள். 

“சார் ரவி காணாமல் போன ஸ்கூல் வாட்ச்மேன்,” என்று ஆரம்பித்து விவரங்களை ரத்தினசுருக்கமாக சொன்னான் வேந்தன். மாறன் அந்த பெண்ணின் மொபைல் போனை வாங்கச் சொன்னான். பேட்டன் லாக்கை விடுவிக்க சொல்லியதும் அவள் மறுக்க மாறனின் கண்ணசைவில் ஒரு பெண் போலீஸ் உள்ளே நுழைந்தாள். முதற்கட்ட விசாரணையிலேயே அவளின் உதடு கிழிந்து ரத்தம் வழிந்து இறுக்க கட்டிய தலைமுடி கவிழ்ந்து தொங்கியது. 

“சொல்லிடறேன் சார். நாங்க ஸ்கூலுக்குப் பின்னாடி உள்ள ஏரியால இருக்கிறவங்க. நம்ம பசங்க அடிக்கடி அந்த ஸ்கூலு பொண்ணுங்களை சைட் அடிக்க போவாங்க. சில பிள்ளைங்க அவனுங்க கூட நம்ம குப்பத்துக்கும் வரும் அப்போ.....” 

 

மீண்டும் ஒரு அறை வாங்கினாள் அதற்குள் அவளின் போன் கையகப்படுத்தப்பட்டது. அதில் சில புரோக்கர்களின் எண்கள் வாட்ஸ்அப்புகளில் பள்ளி பெண் குழந்தைகளின் புகைப்படங்கள் இருந்தது. 

“இவளை அரெஸ்ட் பண்ணுங்க.” என்று மீண்டும் மொபைலை ஆராய்ந்தான் அதில் கேலரியில் அந்தப்பள்ளியின் புகைப்படமும் கருப்புநிற காண்டஸாவின் காரின் புகைப்படமும் வெவ்வேறு கோணங்களில் பதிவாகியிருந்தது. 

 

மாறன் ஷார்ப்பானான். அந்த புகைப்படங்கள் அனைத்தையும் தன் மொபைலுக்கு அனுப்பி சிஸ்டத்தில் ஏற்றினான். நான்கைந்து புகைப்படங்களில் அந்த கார் தெளிவாகவே தெரிந்தது. பக்கவாட்டுத் தோற்றம் பாதி வண்டியின் எண் கூட லேசாக தெரிந்தது. முன்பக்கம் யாரோ கருப்புக் கண்ணாடிப் போட்டு அமர்ந்திருந்தார்கள் .

 

இவன்தானா நாம தேடுவது என்று ஸ்கீரினைப் பெரியதாக்கினான். அரைகுறையாக தெரிந்த வண்டியின் எண்ணைக் குறித்துக் கொண்டான். 

“வேந்தன் இவளை லாக்கப்பில் போடுங்க அப்பறம் விசாரிக்கலாம் இந்த போனை நம்ம சைபர் கிரைமில் கொடுத்து தரவா செக் பண்ண சொல்லுங்க, நிறைய தகவல்கள் இருக்கு ஜாக்கிரதை,” வாட்ச்மேனிடம் திரும்பினான். 

“நீங்க ஸ்கூல் எதிரில் பார்த்த கருப்பு காண்டஸா இதுதானா சொல்லுங்க.” 

 

அவர் கொஞ்சம் நெற்றி சுருக்கி, “ஸார் ஸ்கூல் வாசல்ல அதுவும் ஸ்கூல் விடற நேரம் வெளி வாகனங்கள் அநேகமாக நிக்காது வர்றதும் பிள்ளைகளை பிக்கப் பண்ணிக்கிறதுமா மூவிங்லேயேதான் இருக்கும். அதனால இந்த வண்டி ஸ்கூல் கேட்கிட்டே இல்லை, இது .... ஹா நியாபகம் வந்திடுச்சி ஸார். நம்ம ஜஸ்டிஸ் வீட்டுக்கு பக்கத்தில இந்த கார் நின்னது. அது பார்க்கிங் ஏரியா இல்லை. அதனால நானும் என்ன ஏதுன்னு கேட்டுக்கலை ஸார். அந்த பையனைப் பத்தின தகவல் ஏதாவது கிடைச்சதா ஸார்?” 

“விசாரிக்கிறோம் நாங்க கூப்பிடும் போது நீங்க விசாரணைக்கு வரணும்.” என்று சொல்லி அவரை அனுப்பிவிட்டு அந்த வண்டி தொடக்க மற்றும் முடிவு இலக்கங்களை வைத்து ஆர்டிஓவில் விசாரித்தார்கள். 

 

ஐந்தாவது பத்து நிமிடங்களின் முடிவில் அந்த கார் எண் பற்றிய விவரங்கள் வேந்தனின் கரங்களில் கிடைத்தது. ஸார் அது ஆரல்வாய் ஏஸி அவர்களோட வண்டி. மாறனின் முகத்தில் குழப்ப முடிச்சுகள், “இப்போ அவர் ரிட்டையர் ஆகிட்டாரு ஸார். நேர்மையான அதிகாரி. டிப்பார்ட்மெண்ட்ல நல்ல மரியாதை. என்ன சார் செய்யறது?” 

“என்னோட கெஸ்ஸிங் சரின்னா இந்த வண்டி ஒண்ணு அவர்கிட்டே இருந்து திருடப்பட்டு இருக்கணும். இல்லைன்னா போலி நம்பர் பிளேட்டுக்கள் போட்டு இருக்கணும். ரவி காணாம போன அன்னைக்கு இங்கே இருந்ததா சந்தேகப்பட்ட அந்த வாகனம் ஆரல்வாய் ஏஸியோடதுன்னா அந்த கார் அங்கிருந்து எங்கே பயணமாயிருக்குன்னு எனக்குத் தெரியணும். சிசிடிவி காட்சிகளை கவனிக்க சொல்லுங்க ஏதாவது ஒரு இடத்தில கார் சிக்கியிருக்கும் வாய்ப்பிருக்கு, டெக்னிக்கல் டீமை அலர்ட் பண்ணுங்க வேந்தன். நான் ஏஸி அவர் வீடு வரையில் போயிட்டு வந்திடறேன். அதுக்குள்ளே ஏதாவது தகவல் கிடைக்குதான்னு பார்க்கலாம்.” 

“அவர் வீடு இப்போ அண்ணாநகர்லே இருக்கு ஸார்.” என்ற வேந்தனின் பேச்சை கேட்டபடியே கார் சாவியைப் பொறுக்கிக் கொண்டான் மாறன். 

“அம்மா, பசங்க யாரையும் இன்னைக்கு விளையாட வெளியே அனுப்பவேண்டாம்.” என்று அண்ணன் சத்தம் போட்டு சொல்லிக் கொண்டு இருந்தது மேகாவின் காதில் விழுந்தது. அவள் அப்போதுதான் உள்ளே நுழைந்தாள். 

“ஏன்னா? என்னாச்சு?” 

“நம்ம பரிதியோட கூடப்படிச்ச பையன்தான் சூசைட் பண்ணிகிட்டானாம். ஒரு மணி நேரத்துக்கு முன்னாலே தான் பாடி வீட்டுக்கு வந்திருக்கு. எனக்கு இப்பத்தான் தகவல் வந்தது. நானும் அண்ணியும் ஒரு நடை போய் பார்த்திட்டு வர்றோம் மேகா.” 

“நானும் வர்றேன் அண்ணா?!” 

“எதுக்குடி நீ இப்பத்தானே ஆபிஸ்லே இருந்து வந்திருக்கே உடனே போகணுமா என்ன ?” 

“அம்மா சின்ன பையன் அவனுக்கும் விஷ்வா வயசுதானே இருக்கும்.” என்று அண்ணனுடன் கிளம்பினாள். 

 

பி-பிளாக் தன் வளையத்தில் என்றுமில்லாமல் இன்று அநேக ஆட்களைக் கொண்டு இருந்தது. “என்னாச்சு? கடவுளே இப்படியும் நடக்குமா?” என்று ஆளாளுக்கு கவலைப்பட்டார்கள். அதையெல்லாம் கேட்டபடியே மேகாவும், அண்ணன் அண்ணி சகிதம் அந்த பிளாட்டை அடைந்தாள். அநேக செருப்புக் குவியல்களுக்குள் காணாமல் போனதை தேடிக்கொண்டிருந்த ஒரு பாட்டி இவர்களைப் பார்த்ததும் “இந்த வீடுதான் போங்கோ” என்று வராத கண்ணீரைத் துடைத்தது. 

 

பெற்றோரின் வேதனை மிகுந்த குரலில் அரற்றலை உணராமல் மல்லாந்து ஐஸ்பெட்டிக்குள் கிடந்தான் அந்த சிறுவன். மூக்கில் பஞ்சு வைக்கப்பட்டு கால் விரல்கள் கட்டப்பட்டு இருந்தது. தலைமாட்டில் அரிசியைக் ஆழாக்கில் நிரப்பி அதில் ஊதுபத்தி எரிந்து அணைந்து கொண்டு இருந்தது. சுற்றிலும் சிறு திரளாய் கூட்டம் அழுதபடியே, அவனின் கண்ணாடித்தடுப்பிற்கு வெளியே கரங்களை வைத்து முகம் தடவ, எத்தனித்தபடி இருந்த பெண்ணின் கதறல் மனதை உருக்குவதாய் இருந்தது. பதறியடிக்கச் செய்தது. 

 

அண்ணனும் அண்ணியும் சற்று நேரம் அவர்களிடம் அமர்ந்திருந்தார்கள். மேகா அந்த பெட்டியில் படுத்திருக்கும் சிறுவனின் முகத்தைவிட்டு இந்தப்பக்கமும் அந்தப்பக்கமும் கண்களைத் திருப்பாமல் வைத்திருந்தாள். 

 

அழுகை அவளிடம் தற்போது உற்பத்தியாகப் போராடியது. ‘இருந்திருந்ததால் விஷ்வாவின் வயதுதான் இருக்கும். எதனால் இந்த நிலையடா தம்பி உனக்கு. என்ன ஆண்டு அனுபவித்துவிட்டாய் என்று தற்கொலை என்ற கத்தியை உனக்கெதிராகப் பிரயோகித்து இருக்கிறாய். உலகப்பற்றின் நம்பிக்கையற்றுப் போய்விட்டாய்.’ 

 

அந்த இடத்தில் ஒரு நொடியில் விஷ்வாவின் உருவம் அதற்கு மேல் மேகாவால் அங்கே நிற்க முடியவில்லை அவளின் படபடப்பு கண்டதும் அண்ணி எழுந்து அவளிடம் வந்தாள் “என்னாச்சு மேகா.” 

“ஒண்ணுமில்லை அண்ணி மேகாவின் விரல்களிலும் உடலிலும் ஒரு வித நடுக்கம். போகலாம் அண்ணி எனக்கு இங்கே நிற்க ஒருமாதிரி இருக்கு. விஷ்வா நியாபகம் வருது.” 

“ச்சு ! முட்டாள் மாதிரி பேசாதே ! இது நம்ம விஷ்வா இல்லை,” அவள் தன் கணவன் புறம் பார்வையை திருப்பினாள்.  

“என்னாச்சு”  

“மேகாவுக்கு என்னமோ மாதிரியிருக்கு நான் அழைச்சிட்டுப் போகட்டுமா.” 

“வேண்டாம். இப்படி இவ நடுங்கிறதை பிள்ளைகளோ அம்மாவோ பார்த்திட்டா பயந்துடுவாங்க. வெளியே கார்டனலே கூட்டிட்டுப் போய் உட்கார வை. படபடப்பு அடங்கவும் வீட்டுக்கு கூட்டிப்போகலாம்.” கணவன் சொல்னபடி அதே போல் பிளாட்டை விட்டு வெளியே பி பிளாக்கிற்கென ஒதுக்கப்பட்டு இருந்த கார்டனில் அமர வைத்தாள் மேகாவை! இங்கயே இரு சூடா ஏதாவது வாங்கிட்டு வர்றேன். அண்ணி கிளம்ப மேகாவிற்கு அந்த வெளிக்காற்று சற்றே ஆசுவாசப்படுத்தியது. ஆனாலும் மனம் ஆறவில்லை. அதேநேரம் வாசலில் முழுவதையும் அடைத்தாற்போன்று மீடியாவின் வெளிச்சம். 

“9 வது படிக்கும் சிறுவனின் தற்கொலை அண்ணாநகரில் பெறும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுவனின் தற்கொலைக்கு என்ன காரணம் அவனின் பள்ளியில் சிக்கலா? பெற்றோர்களின் மனவருத்தமா? விரைவில் தீர்வுடன் உங்கள்...” என்று ஒரு பிரபல தொலைக்காட்சியின் பேரைச் சொல்லி அவளையும் தன் காமிராமேனையும் அறிமுகப்படுத்திக் கொண்டாள். 

“தயவுசெய்து தொந்தரவு பண்ணாதீங்கம்மா” என்ற முதிர்ந்த மனிதர் ஒருவரை சுற்றிலும் மீடியாக்கள் நின்று கொண்டார்கள். “சார் நடந்தது என்னன்னு தெரிந்தால் தானே நாளைக்கு இந்த மாதிரி பிரச்சனைகளை எதிர்க்கொள்ளும் நிலையை பெற்றோர்கள் உணர முடியும். நாங்க அவங்க அப்பா அம்மாகிட்டே பேச முடியுமா?” 

“உங்களை கெஞ்சிக் கேட்டுக்கிறேன் பெத்தவங்க பிள்ளையைப் பறிகொடுத்திட்டு அவஸ்தைப் பட்டுட்டு இருக்காங்க. இப்போ உங்களோட டிஆர்பி ரேட்டிங்கை ஏற்றும் நேரம் இல்லை. உங்களுக்கு என்ன தோணுதோ அதையே எழுதிக்கோங்க.” என்று அவர் நகர, ஸார் இந்த ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லிட்டுப் போங்க. 

“இந்த பையன் ஏதோ ஆன்லைன் கேமில் விளையாடி அவங்க அப்பாவோட பேங்க் பேலன்ஸை எல்லாம் குறைச்சிட்டதாகவும் அதனால அவங்க அப்பா அடிச்சதாகவும் கொஞ்சநாளைக்கு முன்னாடி ஊடகங்களில் செய்தி பரவிச்சி அதோட தொடர்ச்சிதான் இந்த தற்கொலையா? இல்லை, பிள்ளை மேல உள்ள கோபத்திலே பெத்தவங்களே...” என்று கேட்ட நிருபரை கோபப்பார்வை ஒன்றைப் பார்த்துவிட்டு, அந்த மனிதர் ஏதும் பேசாமல் நடந்துவிட்டார். 

“என்னம்மா இங்கன வந்து தனியா உட்கார்ந்திட்டே?” என்று பக்கத்தில் வந்தமர்ந்த பாட்டி அந்த பி பிளாக்கினுள் செல்லும் போது எதிர்ப்பட்டவர். மேகா ஏதும் பேசாமல் இருந்தாள்.

“ஒத்தப்பிள்ளையைப் பெத்துட்டு எமங்கிட்டே கொடுத்திட்டாங்க. இப்போ செத்துப் போனவனோட அம்மா எனக்கு ஒருவகையிலே சொந்தந்தேன். பெரியவங்களை மதிக்கத் தெரியாதவ. எங்கே புருஷன் வீட்டு சொந்தபந்தம் கூட இருந்தா அவளோட காரியத்துக்கு ஆவாதுன்னு எங்களையெல்லாம் அண்டவிடாமயே பண்ணிட்டா, கட்டின புருஷனைத் தன் கண்ட்ரோல்ல வைச்சவளுக்கு பிள்ளையைக் கண்ட்ரோலா வைக்கத் தெரியலைப் பாரு. உண்ணத் தின்னத்தான் செல்லம். அவன் கேக்கிறதை எல்லாம் காசு இருக்குன்னு வாரி இறைச்சா இப்போ அனுபவிக்கிறா.” 

“அத்தை விடுங்க அவங்களே பிள்ளையைப் பறிகொடுத்திட்டு தவிக்கிறாங்க இப்போ போய் அவங்களைக் குத்திக் காட்டணுமா. அதுவும் முன்னபின்ன தெரியாதவங்ககிட்டே” பக்கத்தில் இருந்த பெண் ஒருத்தி இடித்துக் காட்டினாள். 

“இப்போ என்னத்தைடியம்மா நான் சொல்லி காட்டினேன். அப்படி இல்லாததையும் பொல்லாததையும், அதான் ஊரு பூரா டிவியில பேப்பர்ல வந்து நாறியாச்சே, நீயே நியாயத்தை சொல்லும்மா. பையன் கேட்டான்னு கத்துக்கிறதுக்கு முன்னாடியே லட்ச ரூவா கொடுத்து வண்டியை வாங்கிக் கொடுத்துடறது, லைசன்ஸ் கூட இல்லை கருமம். அவன் மட்டும் போறானா? இவனுங்களால ரோட்ல போற வர்றவனுக்கும் நித்தியகண்டம் பூரண ஆயிசா போயிடறது. இதோ இவனுக்கு விலையுயர்ந்த செல்போன் வாங்கினாங்க, வேண்டான்னு போன பொங்கலுக்கு வரும்போது அடிச்சிகிட்டேன் கேட்கலை, படிப்புக்கு கூட இதுதான் உதவுதுன்னு வாதம் பண்ணினா, அவன் பார்த்தான் இதுங்க நம்மை எதுவும் சொல்லாதுன்னு நினைச்சு என்னென்னத்தையோ பார்த்து.....” மீண்டும் அந்தப் பெண்மணி குறுக்கிட்டாள்.

“அது ஒண்ணுமில்லைம்மா அந்தப் பையன் ஆன்லைன் விளையாட்டுலே அதிக நேரம் செலவழிச்சி இருக்கான். முதல்ல ஃப்ரீயா விளையாடியவன் அப்பறம் காசு வைச்சு கேம் மோகத்தில விளையாடி இருக்கான். ஒரு கட்டத்திலே அவங்க அப்பாவோட கார்டுகளை தேச்சி இன்டெர்நெட் பேங்கிங் மூலமா ஆறுலட்ச ரூபாயைத் தொலைச்சிருக்கான். விவரம் அவங்க அப்பாவுக்கு தெரிய வந்ததும் வீட்டுலே ஒரே ரகளை. தப்பைத் தட்டிக் கேட்கலை, செய்யவிடாமத் தடுக்கலை. நடந்த பிறகு நீ பார்க்க வேண்டியதுதானேன்னு ஆளாளுக்கு குறை பேசினாங்க, அவனை நல்லா அடிச்சாங்க. விவகாரம் வேற டீவியிலே பேப்பரிலே எல்லாம் வந்தது அசிங்கமாப் போச்சு. ஒருவாரத்திலே அந்த பிள்ளை இப்படி?” அதற்குள் போலீஸ் வண்டி வரவும்... இவனுங்க வேற தொந்தரவு செய்துகிட்டு என்று சொல்லி அந்த பெண்மணி தன் அத்தையைக் கூட்டிக் கொண்டு நகர்ந்தாள். 

 

பிள்ளையின் தாயாரை மயங்கிய நிலையில் ஆம்புலன்சில் ஏற்றினார்கள். மேகாவிற்கு தன்னையும் அறியாமல் ஒரு குற்ற உணர்ச்சி தோன்றியது. “நான் மட்டும் இல்லைம்மா என்னை மாதிரி எத்தனையோ ஸ்டூடண்ட்ஸ் உன்னோட கேமை டவுன்லோட் செய்து நேரம் பார்க்காம விளையாடறாங்க. நான் மட்டும் விளையாடினா பாதிப்புங்கிறீயே என்ன ஒரு செல்பிஷ் அம்மா நீ...” என்ற விஷ்வாவின் குரல் கேட்டது. “அது, அது யார்?” போலீஸ் ஜீப்பின் வாசலில் அந்த பரந்த முதுகு அது மாறனா என்ற கேள்வி கண்களில் தொக்கி நிற்க, மெல்ல எழுந்து பக்கவாட்டில் நடந்தாள் மேகா. 

 

சந்தேகமேயில்லை யாரைப் பார்க்கக் கூடாது என்று இத்தனை நாள் மறைந்து பெங்களூரிலேயே இருந்தாளோ அவனேதான். மாறன்... இத்தனை பலவீனமான மனதுடன் அவனைச் சந்தித்தாக வேண்டுமோ? கூடாது அவளின் கால்கள் அவ்விடத்தை விட்டு நகர தவித்தது. ஆனால் உடலுக்கு அத்தனை பலமிருப்பதாக தெரியவில்லை. மாறன் அந்த பிளாட்டுக்குள் தன்னை நுழைந்து கொண்டான். “என்ன மேகா உன்னை அங்கேதானே உட்கார சொன்னேன்.” என்று அண்ணியின் குரல் கேட்டபோதுதான் அவள் சரிந்து கொண்டு இருப்பது தெரிந்தது. சூடான காபியை அவளின் அதரங்களில் வைத்து உறிஞ்சவைத்து தன் மேல் சாய்த்தபடியே தங்கள் பிளாட்டுக்கு அழைத்துச் சென்றாள் அண்ணி. 

 

அவளை விட்டு இம்மியும் நகராமல் ஒரு குழந்தையைப் போல ஒட்டிக்கொண்டாள் மேகா.