Skip to main content

பத்திரிகையாளர்கள் முன்னிலையில் நடந்த படுகொலை - திலகவதி ஐபிஎஸ் பகிரும் தடயம்: 27

Published on 17/10/2023 | Edited on 17/10/2023

 

thilagavathi-ips-rtd-thadayam-27

 

உத்தரப்பிரதேசத்தில் நடந்த ரவுடியின் படுகொலை குறித்து தமிழ்நாடு காவல்துறையின் முதல் பெண் இயக்குநர், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி விவரிக்கிறார்

 

அதிபயங்கரமான தாதாக்கள் இருவரை மூன்று இளைஞர்கள் பட்டப்பகலில், பத்திரிகையாளர்கள் முன்னிலையில் கொலை செய்த சம்பவம் இது. இருவரில் பெரியவர் பெயர் அடிக் அகமது. இன்னொருவர் அவருடைய சகோதரர் அஷ்ரப். இருவரும் உத்தரப்பிரதேசத்தில் உள்ள அலகாபாத் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு பத்திரிகையாளர்கள் போல் வேடமிட்டிருந்த மூன்று பேர் அவர்களை நெற்றிப் பொட்டில் சுட்டனர். அவர்கள் மூன்று பேரும் மிக இளம் வயதினர். 

 

இந்த மூன்று பேருமே வெவ்வேறு இடங்களில் வாழ்ந்தவர்கள். திவாரி என்பவர் மீது ஏற்கனவே குற்ற வழக்குகள் இருந்தன. மோகித் சிங் என்பவர் சொந்தமாக நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்கக் கூடியவர். துப்பாக்கி சுடுதலில் தேர்ச்சி பெற்றவர். அருண் மௌரியா என்பவர் மீதும் கொலை வழக்கு இருந்தது. இவர்கள் பயன்படுத்திய துப்பாக்கி துருக்கியில் தயாரிக்கப்பட்டது. இவர்கள் மூவருமே ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். பத்திரிகையாளர்களோடு இவர்கள் எப்படி கலந்தார்கள், எப்படி இதைச் செய்தார்கள் என்பது கேள்விக்குறியாக இருந்தது.

 

உத்தரப்பிரதேச அரசு இதுகுறித்து விசாரிக்க ஒரு குழுவை அமைத்தது. அடிக் அகமது மிகவும் மோசமான நபர். எளிமையான பின்புலத்திலிருந்து வந்த அவர், ஒரு குதிரை வண்டிக்காரரின் மகன். சிறுவயதிலேயே சின்னச் சின்ன திருட்டுகளில் அவர் ஈடுபட்டார். 17 வயதிலேயே கொலை செய்தார். அவரை அனைவரும் வியந்து பார்த்தனர். ஒருமுறை திருட்டு வழக்கு ஒன்றுக்காக அவனை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். இவன் குறித்த தகவல் உளவுத்துறை மூலம் முதல்வருக்கு சென்றது. அப்போது அங்கு காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றது.

 

அவனை வெளியே விட வேண்டாம் என முதல்வர் உத்தரவிட்டார். இதற்கிடையில் காங்கிரஸ் எம்.பி. ஒருவரோடு அடிக் அகமது நட்பானான். அவர் மூலமாக பெரிய இடங்களைத் தொடர்புகொண்டு, சிறையிலிருந்து வெளியே வந்தான். அரசியல்வாதியாக வேண்டும் என்கிற எண்ணம் அவனுக்கு அப்போது வந்தது. 1989 தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக அவன் போட்டியிட்டான். அவனுக்கு உதவுவதாகத் தெரிவித்த இன்னொரு ரவுடியான சாந்த் பாபா, தானே தேர்தலில் நிற்கலாம் என்று முடிவெடுத்ததால் இருவருக்கும் பிரச்சனை வெடித்தது. 

 

அடிக் அகமதை மக்கள் வெற்றி பெற வைத்தனர். அதன் பிறகு சாந்த் பாபா கொல்லப்பட்டார். அந்தப் பகுதியின் முடிசூடா மன்னனாக மாறினான் அடிக் அகமது. நில அபகரிப்பு, கொலை மிரட்டல் விடுத்தல், கட்டப்பஞ்சாயத்து என்று அவன் செய்யாத அட்டூழியங்களே இல்லை. அவனைக் கண்டு மக்கள் நடுங்கினர். மூன்று முறை தேர்தலில் வெற்றி பெற்று அவன் சுயேச்சை எம்.எல்.ஏ ஆனான். அவனை முலாயம் சிங் யாதவ் தன் கட்சியில் சேர்த்துக்கொண்டார். அங்கும் அவன் வெற்றி பெற்றான்.