இந்தியாவையே நடுங்க வைத்த கொடூர மனிதன் சோப்ராஜ் ஜெயிலிலிருந்து தப்பியது பற்றிய பல்வேறு தகவல்களை நம்மோடு தமிழ்நாடு காவல்துறையின் முதல் பெண் இயக்குநர், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி பகிர்ந்துகொள்கிறார்.
சோப்ராஜ் தப்பிக்காத சிறைச்சாலைகளே இல்லை என்று சொல்லலாம். மற்ற இடங்களில் பாதுகாப்பு குறைவு என்று கருதியதால் நேபாளத்திற்கு சென்றான். பிற நாட்டினருக்கும் மயக்க மருந்து கொடுத்து தன்வயப்படுத்துவது அவனுக்குக் கைவந்த கலை. அதுபோன்று நேபாளத்திலும் இருவரை கொலை செய்கிறான். அவனுக்கு பல்வேறு மொழிகளில் பேசத் தெரியும். இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதால் தாய்லாந்து தப்பிச் செல்கிறான். அங்கும் இவனுடைய கொலைகள் தொடர்ந்தன.
தாய்லாந்து போலீசார் விசாரணையைத் தொடங்கினர். அவனையும் அவனுடைய கூட்டாளிகளையும் கண்டுபிடித்து கைது செய்தனர். அதன் பிறகு மர்மமான முறையில், போதுமான ஆதாரம் இல்லை என்று கூறி அவர்கள் விடுவிக்கப்பட்டனர். தாய்லாந்து போலீசார் லஞ்சம் வாங்கிக் கொண்டு அவர்களை விடுவித்தனர் என்கிற குற்றச்சாட்டு எழுந்தது. மீண்டும் அவன் டெல்லிக்கு வந்தான். மீண்டும் சிலரைத் தன்னோடு சேர்த்துக்கொண்டு குற்றச்செயல்களைத் தொடர்கிறான். அதன் பிறகு இந்திய போலீசாரால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டான்.
திகார் சிறையில் அனைத்து வசதிகளுடனும் ஒரு ராஜா போல் வாழ்ந்து வந்தான். சிறைக்குள் 7 குற்றவாளிகளைத் தன்னோடு சேர்த்துக்கொண்டு, தனக்கெனத் தனி அணி ஒன்றை அமைத்துக்கொண்டு தப்பிக்கத் திட்டமிட்டான். அதிகாரிகளுக்கு உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்தான். அவர்கள் மயக்கமடைந்த பிறகு அவர்களுடைய கைகளையும் கால்களையும் கட்டி தனித்தனி அறையில் அடைத்தான். மயக்கத்தில் இருந்த சிறை அதிகாரி ஒருவரையும் காரில் ஏற்றிக்கொண்டு தன் கூட்டாளிகளுடன் தப்பித்தான்.
இது ஒரு தேசிய அவமானம் என்று பத்திரிகைகள் எழுதின. சிறை அதிகாரிகளுக்கு பணம் கொடுத்தே அவன் தப்பித்துச் சென்றான் என்று அனைவரும் பேசினர். அனைத்து இடங்களிலும் அவனைத் தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. அதற்கு முன்பு ஒருமுறை அவனைக் கைது செய்த அனுபவமிக்க ஷிண்டே என்கிற அதிகாரி கோவாவில் அவனைப் பிடித்தார். பலத்த பாதுகாப்போடு அங்கிருந்து அவனை மும்பைக்கு அழைத்து வந்தார். மீண்டும் அவன் சிறையில் அடைக்கப்பட்டான்.
ஆனால், இப்படி அவன் தப்பித்தது மீண்டும் கோவாவில் சிக்கியது என்று அனைத்தும் சோப்ராஜ் நடத்திய நாடகம்தான் என்பது தெரிந்தது. தாய்லாந்து போலீசாரிடம் சிக்கினால் தூக்கில் போட்டு விடுவார்கள் என்பதால் இந்திய சிறையில் இருப்பதையே அவன் பாதுகாப்பாகக் கருதினான். 1997 ஆம் ஆண்டு சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டவுடன் நேபாளத்திற்கு சென்றான். அங்கு சூதாட்டத்தில் ஈடுபடும்போது ஒரு பத்திரிக்கையாளர் இவனைப் பார்த்தார். அவருக்கு இவனுடைய குற்ற வரலாறு தெரியும். காவல்துறைக்கு அவர் தகவல் கொடுத்து இவன் கைது செய்யப்பட்டான்.