குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்குக் கொடுத்த கவுன்சிலிங் பற்றி நக்கீரன் 360 சேனலில் தொடர்ச்சியாக பேசி வருகிறார் குழந்தை வளர்ப்பு ஆலோசகர் ஆஷா பாக்யராஜ். அந்த வகையில் தான் சந்தித்த வழக்கு பற்றி இன்று நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.
11வது படிக்கும் மாணவர் ஒருவர் தன்னுடைய படிப்பில் சில நாட்கள் சரிவரக் கவனம் இல்லாமல் பெற்றோர்கள் சொல்வதைக் கேட்காமல் இருந்துள்ளார். அந்த மாணவரின் பெற்றோர் தங்களது மகனிடம் நல்ல நண்பரைப்போல் பழகி இருந்திருக்கின்றர். இப்படி பழகி வருவதை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட மகன் வீட்டில் உள்ள தனது அறையில் மொபைலை வைத்து தன்னுடன் படிக்கும் மாணவியுடன் கணவர், மனைவி பேசிக்கொள்வதைப்போல் பேசி இருக்கிறார். மகனின் மொபைலை எடுத்துப் பார்த்த அப்பாவுக்கு இந்த விஷயம் தெரியவர மகனை என்னிடம் கவுன்சிலிங் அழைத்து வந்தனர்.
அந்த பையனிடம் பேசும்போது, தன்னுடன் பேசும் அந்த மாணவியை நட்புக்கு ஒருபடி மேல் வைத்துப் பார்ப்பதாகத் தெரிவித்தார். அதோடு தன்னுடைய பெற்றோர் நண்பர்களைப் போலப் பழகி பிரைவசி கொடுப்பதில்லை என்று கூறினார். அந்த பையனிடம் பேசிய பிறகு, பெற்றோரின் கருத்தைக் கேட்டேன். அவர்கள் எப்போதும் போல நன்றாக வளர்த்தோம் அப்படி இருந்தும் இது போன்ற செயல்களை மகன் செய்கிறார் என்று மனம் உடைந்து அதற்காக மகனை கண்டித்தால் தவறான முடிவை எடுத்துவிடுவாரோ என நினைத்து பயந்தனர்.
அதன் பின்பு பெற்றோர்களிடம், உங்களின் குழந்தையின் பிரைவசிக்கு எல்லைகளை உருவாக்குங்கள், மொபையில் ஸ்கிரீன் டைம் குறைப்பது, படிக்க நேரம் ஒதுக்குவது போன்ற சில கட்டுபாடுடன் கூடிய எல்லைகளை ஏற்படுத்துங்கள். ஹார்மோன் மாற்றத்தால் ஏற்படும் சில மாற்றங்கள்தான் இதற்குக் காரணம் என்று பெற்றோர்களிடம் சொல்லிவிட்டு, அந்த பையனை அழைத்து, பருவமடைதல் பற்றிய சில விவரங்களைக் கூறி அதனால் ஏற்படும் மாற்றத்தையும் கூறியதோடு, படிப்பில் இப்போது கவனம் செலுத்தச் சொல்லி ஆலோசனை வழங்கி இருக்கிறேன்.
குழந்தைகளிடையே இதுபோன்ற விஷயங்களை இப்போது தவிர்க்க முடியாது, ஏனென்றால் இப்போது வரும் படங்கள், தொடர்கள் என அனைத்திலும் குடும்ப மற்றும் காதல் உறவுகள் பற்றி வருகிறது. எனவே இதன் தாக்கம் குழந்தைகளிடம் வருவது இயல்புதான். அதனால் எப்போதுமே குழந்தைகளிடம் பெற்றோர்கள் வெளிப்படையாக சில விஷயங்களைப் பேச வேண்டும். பெற்றோர்கள் சொல்லவில்லை என்றால் அது வேறு வழியில் தவறாக குழந்தைக்கு தெரிய வந்து மோசமான சூழலை ஏற்படுத்தும். அப்படி குழந்தைகளிடம் வெளிப்படையாகப் பேசி பெற்றோர்களால் புரியவைக்க முடியவில்லை என்றால் அதற்கான ஸ்பெஷல் கவுன்சிலிங் கொடுப்பவர்களிடம் குழந்தைகளை அழைத்து வர வேண்டும் என்றார்.