சக மாணவர்களின் கேலி கிண்டலால் பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோருக்கு கொடுத்த கவுன்சிலிங் பற்றி குழந்தை வளர்ப்பு ஆலோசகர் ஆஷா பாக்யராஜ் நம்மிடம் விவரிக்கிறார்.
ஒரு பெற்றோர் தங்களின் மகன் படிப்பில் சரிவர கவனம் செலுத்தாமல் தன்னம்பிக்கை இழந்து மிகவும் கஷ்டப்படுகிறான் என்று சொல்லி தங்களின் மகனுக்கு கவுன்சிலிங் கொடுக்கச் சொன்னார்கள். அதன் பிறகு அந்த சிறுவனிடம் பேசும்போது, அவன் ரொம்ப நல்லனவாக இருந்தான். பள்ளியில் யாராவது தன்னிடம் சண்டையிட்டுக்கொண்டால் அதை ஆசிரியர்களிடமும் வீட்டிலும் சொல்லக்கூடாது. அப்படி பள்ளியில் புகார் கொடுத்தால் தன்னுடன் சண்டை போட்ட சக மாணவனுக்கு பிரச்சனை வரும் என்ற எண்ணம் அவனிடம் இருந்தது. மேலும் அவனுக்கு நல்ல நண்பர்கள் வேண்டும் என்ற எண்ணமும் தன் நண்பர்கள் தன்னை எந்தளவு காயப்படுத்தி பேசினாலும் அதன் பிறகு அவர்கள் மன்னிப்பு கேட்டால் மீண்டும் பேசிவிடக்கூடிய மனப் பக்குவமும் இருந்தது. இந்த மனநிலை ஒருபக்கம் அந்த சிறுவனுக்கு பிரச்சனையாகவும் இருந்திருக்கிறது.
அந்த சிறுவன் படிக்கும் வகுப்பிலுள்ள அனைத்து மாணவர்களும் ஒரு வாட்ஸ் அப் குரூப் ஓபன் செய்து. அதில் இந்த சிறுவனை மட்டும் டார்கெட் செய்து பயங்கரமாக கேலி கிண்டல் செய்தும் கடுமையான சொற்களைப் பயன்படுத்தி மன உளைச்சலுக்கு ஆளாக்கியிருக்கின்றனர். அந்த சிறுவன் அதை எதிர்கொள்ள முடியாமலும் வெளியில் சொல்ல முடியாமலும் அந்த வாட்ஸ் அப் குரூப் விட்டு அவனால் வெளிவரமுடியாமலும் தவித்திருக்கிறான். இந்த பிரச்சனை அவனுக்கு நீண்ட காலமாக இருந்துள்ளது தெரியவந்தது. சிறுவனின் பெற்றோரும் அதைக் கண்டுகொள்ளாமல் இருந்திருக்கின்றனர்.
அந்த சிறுவன் இதுவரை என்னிடம் 10க்கும் மேற்பட்ட செசனில் பேசியிருக்கிறான். நானும் தொடர்ந்து அவனுக்கு கவுன்சிலிங் கொடுத்து வருகிறேன். பிரச்சனைகளை எதிர்கொள்வது பற்றியும் தேவையில்லா பிரச்சனைகளில் இருந்து விலகி அதை எவ்வாறு கையாளுவது என்றும் தொடர்ந்து பேசி வருகிறேன். இப்போது அந்த சிறுவன் ஓரளவிற்கு அந்த பிரச்சனைகளில் இருந்து மீண்டு வருகிறான். தொடர்ந்து அந்த சிறுவன் கவுன்சிலிங் பெற்று வருவதன் மூலம் இலகுவாகத் தனது பிரச்சனைகளை கையாளும் தன்னம்பிக்கை அவனுக்கு கிடைத்து விடும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைத் தொடர்ந்து கவனிக்க வேண்டும். இல்லையென்றால் இதுபோல மன ரீதியான பிரச்சனைகள் குழந்தைகளுக்கு வர நிறைய வாய்ப்பிருக்கிறது.