Skip to main content

வீட்டை விட்டு வெளியேற்றிய அப்பா; அம்மாவுக்கு ஆதரவான மகன் - ஆஷா பாக்யராஜ் பகிரும் குழந்தை வளர்ப்பு ஆலோசனை :25

Published on 22/07/2024 | Edited on 22/07/2024
parenting counselor asha bhagyaraj advice 25

விவாகரத்து வாங்கிய சிங்கிள் பேரண்ட்டிற்கும் உடன் வளரும் குழந்தைக்கும் கொடுக்கப்பட்ட கவுன்சிலிங் பற்றி குழந்தை வளர்ப்பு ஆலோசகர் ஆஷா பாக்யராஜ் விவரிக்கிறார்.

சிங்கிள் பேரன்டும் அவரது குழந்தைக்கும் கொடுத்த கவுன்சிலிங்  இது. அவரது குழந்தை ஐந்தாவது படிக்கும்போது ஒருநாள் இரவு ஏற்பட்ட கணவன் மனைவி சண்டை எதிர்பாரா விதமாக அளவுக்கு மீறிப் போக, அடித்து மனைவியையும் குழந்தையையும் நடுராத்திரியில் அனுப்பி விடுகிறார். வெளியே வந்த அந்த பெண்மணி தன்னுடைய தாய் வீட்டிற்கு, தனது குழந்தையோடு சென்று விட்டார். அந்த பெண் சுயமாக தன் பொருளாதாரத்தை நிலை நிறுத்திக் கொண்டாலும், தன்னால் அந்த வலியிலிருந்து வெளியே  வர முடியவில்லை. 

அப்பா அந்த பையனை நன்றாக பார்த்து வளர்த்திருக்கிறார். ஆனால் இவர்கள் வெளியே வந்தபின்பு, இவர்களை அவர் பார்க்க வருவதில்லை. மகனோ தன்னை ஏன் அப்பா பார்க்க வருவதில்லை என்று மிகவும் கேட்டு வருந்துகிறது. நாங்கள் எவ்வளவு தான் சண்டை போட்டாலும், தான் நிறைய பொறுத்து போனதாகவும், அவர் என்னை இப்படி வெளியே அனுப்புவார் என்று நான் நினைக்கவில்லை என்றும் அந்த பெண்மணி  சொன்னார். முதலில் அவரை நான் நன்றாக பேச விட்டு அவரது மனதில் இருந்த அத்தனை கால வலிகளையும் பகிரவைத்து கேட்டுக்கொண்டேன். பின்பு அன்று செஷனில் வேறு எதுவும் பேசாமல், அவரை வீட்டிற்கு சென்று ஒரு நிதானமாக நீண்ட குளியலை எடுத்து விட்டு மறுநாள் வர சொன்னேன். பொதுவாக கவுன்சிலிங்கில் பழைய கடந்த கால கசப்பான நினைவுகளை பேசும்போது அவர்கள் மனதோடு மனமும் வலிப்பது போல உணர்வார்கள். எனவே அன்றைய செஷனில் நான் அவர்களுக்கு அடுத்து என்ன செய்யவேண்டும் என்ற தீர்வை கொடுக்கமாட்டேன்.

எனவே, அவரை அடுத்த செஷனில் சந்தித்தபோது, என்ன தப்பு செய்தோம் என்று இப்போது யோசிக்க வேண்டாம் அது நேற்றோடு முடிந்து விட்டது என எடுத்து சொன்னேன். நாம்  சேர்ந்து வாழ வேண்டும் என்றால் தவறுகளை திருத்தி கொள்ளலாம். இங்கு விவாகரத்து வரை பதிவு செய்து சட்டப்படி  பிரிந்துவிட்டார்கள் எனில், எதற்காகவும் நடந்த தவறை பற்றி யோசிக்க தேவையில்லை. மேலும், குழந்தையிடம் அப்பா வந்து விடுவார் என்றே பொய் சொல்லி வளர்த்திருக்கிறார். எனவே குழந்தையிடம் உண்மையை மட்டுமே சொல்லவேண்டும். அதனுடைய வயதிற்கேற்ப பக்குவமாக உண்மையை சொல்ல வேண்டுமே அன்றி பொய் சொல்லக்கூடாது. 

எனவே அந்த குழந்தையை அழைத்து எனக்கு நேராக நிலைமையை எடுத்து சொல்லுமாறும், நானும் கூட இருந்து அதை எடுத்து சொல்கிறேன் என்றேன். மேலும், பிரிந்த இருவரில் ஒருவரது தவறயே திருப்பி திருப்பி அந்த குழந்தையிடம் பேசக்கூடாது. அந்த அம்மாவும் மகனிடம் உண்மையை எடுத்து சொன்னார். இதுபோல அம்மாவும் அப்பாவும் சண்டை போட்டு கொண்டோம், இனிமேல் அப்பா வரமாட்டார், நீயும் நானும் தான் இருக்க போகிறோம் என்று சொன்னார். அந்த குழந்தையோ, என்னிடம் நன்றாக தான் அப்பா இருந்தார், என்னிடம் ஏன் பேசுவதில்லை. என்னிடம் என்ன தவறு இருக்கிறது?. அம்மாக்கும் அப்பாவுக்கும் தானே சண்டை என்ற மனநிலையில் இருந்தது. அப்பாவே ஒருநாள் உன்னிடம் வந்து பேசினால் அதை அப்போது பார்த்து கொள்ளலாம். அல்லது அப்பாவை பற்றி என்றோ ஒரு நாள் உனக்கு தெரிய வரலாம். அதுவரை நீயும் அம்மாவும் தான் என்று நான் குழந்தையிடம் எடுத்து சொன்னேன்.

புரிந்துகொள்ள அந்தக் குழந்தைக்கு சிறிது காலம் எடுத்துக்கொண்டது. ஏனென்றால், இது நடந்து எட்டு மாதங்கள் தான் ஆகி இருந்தது. பள்ளி, மற்றும் இடம் எல்லாமே மாற்றப்பட்டு இருந்தது. உனக்கு என்ன தேவையென்றால் என்னிடம் சொல் அல்லது அம்மாவிடம் சொல். உனக்கு ஆதரவாக இருப்பேன் என்று சொல்லி புரிய வைத்தேன். அவனது தாய்க்கு நான் ஒரு நாள் இடைவெளி விட்டு சந்தித்தேன் என்றால், மகனுக்கு ஒரு வாரம் கொடுத்து இருந்தேன். அந்த நாட்கள் இடைவெளியில் அம்மாவிடம் நிறைய சந்தேகங்கள் கேட்டிருக்கிறான். ஆனால், எப்பொழுதும் புரியும் பக்குவத்தில் உண்மையை மட்டுமே சொல்லுமாறு அம்மாவிற்கு சொன்னேன். அப்படி சில கேள்விகளுக்கு சொல்லமுடியவில்லை எனில், அம்மாவிற்கு இப்போது பதில் இல்லை. பின்னர் சொல்கிறேன் என்று அதையும் சொல்லிவிடுங்கள். ரெண்டு பேருக்கும் சேர்த்து எமோஷன்ஸ் கையாள சில விஷயங்களை எடுத்து சொன்னேன். எப்போதெல்லாம் கோபம்  தன்னை மீறி வருகிறதோ அப்போதெல்லாம் இருவரும் பேசி கொள்ளாதீர்கள். இருவரும் தெரியப்படுத்தி கொண்டு பின்னர் பேசுங்கள் என்று சொல்லி கொடுத்தேன். கண்டிப்பாக குழந்தைகள் புரிந்து கொள்வார்கள் என்றேன். அதன் பிறகு நடந்த செஷன்கள் எல்லாவற்றிலும், பொதுவாக பள்ளி, நண்பர்கள், எதிர்கால கனவு பற்றி எனப் பொதுவான விஷயங்களை பேசவும் குழந்தையை இயல்பான நிலைக்கு மாற்ற முடிந்தது.