Skip to main content

தங்கையை எதிரியாய் பாவித்த அண்ணன்; ஒப்பிட்டுப் பேசியது குற்றமா? - ஆஷா பாக்யராஜ் பகிரும் குழந்தை வளர்ப்பு ஆலோசனை :22

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
parenting-counselor-asha-bhagyaraj-advice-22

ஒருவரோடு மற்றவர்களை ஒப்பிட்டுப் பேசுவதால் மிகவும் மனம் பாதித்த குழந்தைக்கு அளித்த கவுன்சிலிங் பற்றி,  குழந்தை வளர்ப்பு ஆலோசனை சிறப்பு நிபுணர் ஆஷா பாக்யராஜ் நம்மிடையே பகிர்ந்து கொள்கிறார். 

நாம் அடிக்கடி பார்த்து பழகிய, கூட பிறந்தவர்களோடு கம்பேர் செய்யும்போது ஏற்படும் பிரச்சனை தான் இதுவும். வந்திருந்த பெற்றோர் தனது டீன் ஏஜ் நெருங்கும் மகன் அவனது தங்கச்சியிடம் அவ்வளவு வெறுப்பாக இருக்கிறான் என்றும், அவர்களிடமும் ஒழுங்காகவும் பேசுவதில்லை என்றும், தங்கை கூட உட்கார்ந்து சாப்பிடுவது கூட இல்லை. நான் இருக்கும்போது அவளை பற்றி பேசவே கூடாது என்கிறான். நாங்கள் இதை எப்படி ஹேண்டில் செய்வது என்று கேட்டார்கள். நான் முதலில் அண்ணன், தங்கை இருவரிடமும் பேச வேண்டும் என்று முடிவெடுத்தேன். அந்த தங்கை இரண்டு வயது அண்ணனை விட இளையவள். ஆனால் அவள் அவ்வளவு பாசமாக இருக்கிறாள். எடுத்தவுடன், என் மேலே தான் எல்லா தவறும். நான் நன்றாக படிப்பேன். அண்ணாவிற்கு அவங்களுடைய படிப்பு பொறுத்தவரை அப்படி இல்ல. வீட்டிற்கு வருபவர்கள் முன்னாடி நான் தான் அதிகமாக கவனிக்கும் படி இருக்கிறேன் என்று புரிதலோடு பேசுகிறாள்.

எனக்கு அண்ணாவை ரொம்ப பிடிக்கும் என்று பாசமாக இருக்கிறாள். ஆனால் எதிரில் அவள் பேச பேச, அவளது அண்ணா அவ்வளவு குறைகள் அடுக்குகிறான். சிறு வயதிலிருந்து அவ்வளவு புகார்கள். தங்கச்சி நல்லா படிக்கிறாள், நீ படிக்கவில்லை, தங்கச்சி நல்லா காய்கறி சாப்பிடுகிறாள். நீ இல்லை அப்படி என்று அவ்வளவு கம்பேர் செய்கிறார்கள். அதனால் தான் நான் தனியாக போய்விட்டேன். இனிமேல் நான் ஹாஸ்டல் போய் விடுகிறேன். இல்லையென்றால் அவள் போய்க்கொள்ளட்டும். நான் தெளிவாக இருக்கிறேன். எனக்கு எதற்கு கவுன்சிலிங் என்றே புரியவில்லை என்றான். இதுமட்டுமல்லாது அவனை பெற்றோர்கள் அடித்தும் இருக்கிறார்கள். பொதுவாக எல்லார் வீட்டிலும், இரண்டாவது குழந்தை இருந்தால் முதல் குழந்தையையே பொறுத்துக் கொள்ளுமாறும், விட்டுக் கொடுத்து போகுமாறும் சொல்கிறோம். முதல் குழந்தை வந்தவுடன் அதற்கு முதல் வாரிசு என்று அரவணைத்தல் என்பது பெரும்பாலும் இரண்டாவது குழந்தை பிறந்தவுடன் போய் விடுகிறது.   

இந்த விஷயத்தில் பெற்றோரின் தவறுதான் அதிகம் இருக்கிறது. அந்த சிறுமி சொல்கிறாள், என்னால் தான் வீட்டில் சண்டை நடக்கிறதென்று நிறைய நாள் அழுது இருக்கிறேன். ஆனால் நான் யாரிடமும் சொன்னதில்லை. அம்மா அண்ணா சண்டை போடும்போது நான் கேட்டிருக்கிறேன். அண்ணா ஒருநாள் சொல்லிருக்காங்க, கடைசியா உன் மடியில் எப்போது படுத்திருந்தேன் என்று. நான் என்ன செய்ய முடியும் ஆண்ட்டி என்று கேட்கிறாள். அண்ணாவிற்கு எப்படி இப்போது கவுன்சிலிங் தேவைப்படுதோ, இன்னும் சற்று காலத்தில் அந்த தங்கைக்கும் கவுன்சிலிங் தேவைப்படும். அந்த அளவு குற்ற உணர்ச்சி இருந்தது அவளிடம். இந்த கவுன்சிலிங்கில் அடுத்ததாக நான்கு பேரையும் உட்கார வைத்து பேச வைத்தேன். அந்த பையனிடம் உனக்கு என்னவெல்லாம் கோவமோ, என்னவெல்லாம் சொல்லணுமோ சொல்லலாம் என்று சொல்லிவிட்டு, அவன் முடிக்கும் வரை குறுக்கே எதுவும் பேசக்கூடாது என்று பெற்றோரிடம் சொல்லிவிட்டு அவனை பேசச் சொன்னேன். அந்த சிறுவன் ஒரு மூன்று மணி நேரம் பேசினான். முதலில் அவ்வளவு புகார்கள் அவன் தங்கை மீது. தான் ஏதாவது பெற்றோர்க்கு செய்ய வந்தால் கூட அவள் முந்திக்கொண்டு செய்து விடுகிறாள். 

என்னை அவள் அம்மா அப்பாவிடம் நெருங்க விடுவதே இல்லை. என்னால் இவ்வளவு தான் படிக்க முடியும். இதற்கு மேல் அந்த செஷனை நான் தொடரவில்லை. அடுத்த செஷனில் தங்கை இல்லாமல், அம்மா, அப்பா என்று அந்த சிறுவனுடன் பேச வைத்தேன். பெற்றோர் பற்றி இவ்வளவு விஷயங்கள் சொல்லியிருப்பதை காட்டி, இதற்கெல்லாம் அவனையே ஒவ்வொன்றாக என்ன தீர்வு என்று சொல்லுமாறு கேட்டேன். முதலில் தங்கையை முன்னிலைப்படுத்தாதீர்கள். ஏதாவது ஒரு பொருள் வாங்கினால் கூட அவளை கேட்பதற்கு என்னிடம் கேளுங்கள். என்னிடம் ஒரு கருத்து கூட கேட்பதில்லை பின்னே நான் எதற்கு இந்த வீட்டில் இருக்க வேண்டும் என்றான். பெற்றோர் மறுத்தபோதும் கூட, அந்த சிறுவன் எப்போதோ மூன்று நான்கு வருடம் முன்பு நடந்த விஷயங்களை நினைவுகூர்ந்து சொல்கிறான். அடுத்ததாக தங்கையை மீண்டும் அழைத்து அவளை பேசச் சொன்னேன். அவள் அண்ணனுக்காக ஏங்கி பேசியதை  அப்படியே பதிவு செய்து அவளது அண்ணணிடம் போட்டுக் காட்டினேன். அவன் அதை ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலும் அமைதியாக இருந்தான். முயற்சி செய்வதாக சொன்னான்.

அந்த சிறுவனிடம் பெற்றோர்களுடன் இருக்கும் விஷயம் இருக்கட்டும். நீங்கள் இருவரும் தினசரி பதினைந்து நிமிடம் நேரம் ஒதுக்கி உங்களுக்குள் இருக்கும் விஷயங்களை மனம் விட்டு பேசுங்கள். அந்த சிறுமியும் அவ்வளவு பொறுமையாக எந்த வித தடங்கலும் இன்றி கேட்டுக்கொண்டாள். பெற்றோர்கள் குழந்தைகளை ஓரளவு வளர்ந்த பின் நெருக்கத்தை, பிரியத்தை அவ்வளவாக காட்டாமல் தள்ளிப் போய்விடுகிறார்கள். அந்த நெருக்கம் காலங்கள் போக போக குறைந்து இருக்கலாமே தவிர, இல்லாமல் இருக்கக்கூடாது. என்ன வயது ஆனாலும் அவ்வப்போது அணைப்பது, லவ் யூ சொல்வது, நேரம் ஒதுக்குவது என்பது இருக்க வேண்டும். அவர்கள் ஏதாவது பேச வந்து, அது சிறிய விஷயமாக இருந்தாலும் கூட கண்டிப்பாக எடுத்ததும் அதனை தவறான கோணத்தில் கையாளாமல், முழுமையாக அவர்கள் சொல்வதைக் கேட்க வேண்டும். குறிப்பாக அண்ணன், தங்கை இருவரும் சண்டை போட்டுக் கொள்ளும்போது, அவர்கள் அடித்து கொள்ளாதவரை நீங்கள் குறுக்கே போய் நீ சரி நீ தப்பு என்று போகாதீர்கள் என்று தான் நான் சொல்வேன். கண்டிப்பாக கம்பேர் செய்யவே கூடாது.