ஒரு இலக்கை நோக்கித் தீவிரமாகப் போகும் போது, அதுல ஒரு வெறித்தனம் இருக்கும். காற்று புயலாக மாறுவது போல. மனமும் அப்படிதான்.
தியாவின் மரணத்திற்கான காரணத்தை அறியக் கிளம்பிய கவியும், அதே தீவிரத்தில் புயலெனச் செயல்படத் தொடங்கினாள்.
பள்ளியிலிருந்து வீட்டிற்குப் போனதும், ஷாலுவிற்கு போன் போட்டாள். காத்திருந்தது போல் எதிர்முனைக்கு வந்த ஷாலு "கவி...,என்னாச்சுடி? ஏதாவது தகவல் கிடைச்சுதா.?” என ஆர்வத்தில் அவள் குரல் ஸ்பீடு எடுத்தது.
"எங்கடி . உருப்படியா ஒரு தகவலும் இல்லை. ஆனால் நாம எதிர்பார்க்காத திசையில் இருந்து பந்து வருதுடி. கேட்ச் பிடிக்கறதா? மிஸ் கேட்ச் பண்றதா?ன்னு தெரியலை” என்று குழப்பமாகச் சொன்னாள்.
"நீ சொல்றது புரியலை. நானே உன் வீட்டிற்கு வரேன்”னு சொன்னவள், அதே வேகத்தில் கிளம்பி கவியின் வீட்டிற்கு வந்து நின்றாள்.
அவசரமாக ஷாலுவை தன் அறைக்கு அழைத்து வந்து கதவைத் தாழிட்ட கவி, காலையில் இருந்து நடந்ததை எல்லாம் ஒன்று விடாமல் திரை இல்லாமலே படம் ஓட்டினாள்.
"கவி, அந்த வாட்ச்மேன் கிட்ட ஏதோ சிக்கல் இருக்குடி. உங்க அப்பாக் கிட்ட சொல்லி வாட்ச் மேனை மிரட்டச் சொல்லலாமா..?" என்று, போகாத ஊருக்கு வழி சொன்னாள் ஷாலு.
"அறிவு வழியுதுடி. கீழ விழுவதற்குள் பாத்திரத்தில் பிடிச்சுக்கோ. என்னன்னு மிரட்டுவாரு. நம்மகிட்ட எந்த ஆதாரமும் இல்லைடி.” என்று கவலையுடன் சொன்னாள்.
திடீரென்று ஏதோ யோசனை வந்தவளாக கவி ,"ஷாலு, தியா வீட்டிலிருந்து சில நோட்டுகளை எடுத்துகிட்டு வந்தேன். அங்கே பொதுவா தேடினப்ப, எதுவும் கிடைக்கலை. அவளுடைய நோட்டுப் புத்தகங்கள்தான் இருந்துச்சு. எனக்கென்னவோ அது வித்தியாசமாகப் பட்டுச்சு. அதாவது அவசரமா புத்தக அடுக்கில் அரைகுறையா திணிச்ச மாதிரி, வரிசை தப்பியிருந்துச்சு. அதில் ரெண்டு நோட்டை எடுத்துட்டு வந்தேன். இதில் ஏதாவது தெரியுதா பாரேன்" என்று சொன்னவள்...
அதன் அட்டையிலேயே அழகிய கையெழுத்தில் அவள் தன் பெயரை எழுதிவைத்திருந்ததைப் பார்த்தபோது, அவளுக்குக் கண்ணீர் திரையிட்டது. அந்த எழுத்தை மெதுவாக வருடிப்பார்த்தாள். தியாவின் ஸ்பரிசத்தை உணர்ந்து ஒரு கணம் நெகிழ்ந்தாள். பின்னர், மனதை சரிசெய்துகொண்டு... துப்பறியும் சங்கர்லால் ரேஞ்ச்சுக்கு அந்த தமிழ் நோட்டைப் புரட்டிப் புரட்டி அவளே ஆராய்ச்சி செய்தாள். அந்த தமிழ் குறிப்பேட்டின் முதல் பக்கத்தில் கெமிஸ்ட்ரி என்று எழுதி, அதன் மேல் பலமுறை அடிக்கப்பட்டிருந்தது.படுக்கை வாட்டில் பலமுறை.
’தமிழ் குறிப்பேட்டில் எதற்கு கெமிஸ்ட்ரி என்று எழுதி, அதை அடிக்கவேண்டும்?’
கவி, அதைக் கூர்ந்து பார்த்துவிட்டு “ஷாலு இதைக் கவனி. ஒரு வார்த்தையை தியா திரும்பத் திரும்ப அழுத்தமா பேனாவால் அடிச்சி வச்சிருக்கா. அவ எப்பவுமே ஒவ்வொரு எழுத்தாதான் அடிப்பாள். இப்படி மொத்தமாகக் கிறுக்கமாட்டாள். இதில் அவ உணர்த்த நினக்கிற ஏதோ ஒரு குறிப்பு இருக்கு” என்றாள். சிக்கலின் ஏதோ ஒரு முனை நூலைப் பிடித்துவிட்டதைப் போல்.
அதை வாங்கிக் கூர்மையாகப் பார்த்தாள் ஷாலு. ”ஆமாடி.” என்ற வார்த்தை அவளிடமிருந்து வந்தது.
அடுத்து, தியாவின் கெமிஸ்ட்ரி நோட்டை எடுத்தாள் கவி. பின்னர் அதன் முதல் பக்கத்தில் இருந்த கெமிஸ்ட்ரியும், அவள் பேனாவிடம் படாதபாடுபட்டிருந்தது. அந்தப் பக்கத்தின் மூலையில் சின்னதாகத் தமிழிலேயே ’சாத்தான்கள்’ என்று எழுதியிருந்தாள் தியா. அதைப் படித்துத் திடுக்கிட்டாள் கவி. அவள் பார்வை படிந்த, தியாவின் கையெழுத்தைப் பார்த்த ஷாலுவும்...
"ஆமாம் கவி. என்னவோ சாத்தான்கள்ன்னு எழுதி வச்சிருக்கா... சாத்தான்கள்ன்னா?"
"ஷாலு, சாத்தான்கள்ன்னா டெவில் அல்லது டேஞ்சரஸ் ஆட்கள்ன்னு அர்த்தம். அதை உணர்ந்து உண்மையா எழுதினாளா? இல்லை, சும்மா, எதையாவது பேய்ப்படத்தைப் பார்த்த நேரத்தில் இப்படி எழுதினாளான்னு தெரியலை. இருக்கட்டும். அதுவும் நமக்கு ஒரு டவுட் பாயிண்டுதான். ஷாலு, உனக்கு நினைவிருக்கா? நாம 8 ஆவது படிக்கும் போது, நம்ம கூட படிச்ச பாரதியின் நோட்டை எடுத்து, தியா அவள் பெயரை இது மாதிரி கிறுக்கி அடிச்சி வச்சி, மிஸ் கிட்ட அடி வாங்கினாளே. கேட்டதற்கு என் கூட சண்டை போட்டாள். பாரதியை எனக்குப் பிடிக்கலை. அதான்.. என்றாளே” என்று நினைவுக் குதிரையைத் தட்டி விட்டாள். அது தனது ஹார்ஸ் பவரைப் பல மடங்காக்கிக் கொண்டு பின்னோக்கி ஓடி மீண்டது.
"கவி.. நீ சொல்றதை வைத்துப் பார்த்தால், அவளுக்கு கெமிஸ்ட்ரி பாடம் பிடிக்கலைன்னு தோணுது. தமிழ் நோட்டிலும் கெமிஸ்ட்ரி நோட்டிலும், அந்த சப்ஜெக்ட் நிறைய அடி வாங்கியிருக்கு"
"இப்ப எனக்கு குழப்பமே, அவளுக்குப் பிடிக்காமல் போனது கெமிஸ்ட்ரி பாடமா ? இல்லை பாடம் நடத்தும் ஆசிரியரா ? அவளுக்கு எதை பிடிக்கலைன்னு தெரியலையே?” என்று கவி சொல்ல, ஷாலு நிமிர்ந்து உட்கார்ந்தாள். இருவரும் மனதிற்குள் ‘இங்கி, பிங்கி , பாங்கி’ போட்டுக் கொண்டிருந்தார்கள்.
நேரம் ஆகவே ஷாலு கிளம்பினாள்.
"ஷாலு, நான் கூட நாளைக்கு ஈவ்னிங் பிளைட்ல டெல்லி கிளம்பறேன்டி. இங்க ரொம்ப நாள் ஸ்டே பண்ணினா, எங்க வீட்டில் சந்தேகம் வரும். எதுவாயிருந்தாலும் போனில் பேசறேன்"
கவியின் கைகளைப் பிடித்துக்கொண்ட ஷாலு "கவி, கவனமா இருடி, ஏதாவது சிக்கல்ல மாட்டிக்காதடி.." என்று தழுதழுக்க,
“ரொம்ப சினிமா பார்க்கிறேன்னு நினைக்கிறேன். டோண்ட் ஒர்ரி. நான் பார்த்துக்கறேன். நீ கவனமா இரு" என்று ஷாலுவுக்கு தைரியம் சொல்லி அனுப்பியவள், இரவு முழுவதும் தூங்கவேயில்லை. ஏதேதோ கணக்குகள்.... குழப்பங்கள்... அன்றைய இரவு அவஸ்தைப் பட்டது.
அதிகமாக வேலை செய்வதென்னவோ மனசுதான். ஆனால் உடம்பு வெட்டி முறித்தது போல ஓய்வெடுக்கும். மனமோ உறக்கத்தைத் தின்று தீர்த்துவிட்டு, உடம்புக்கு சோர்வைப் பரிசளிக்கும்.
இரவெல்லாம் சிந்தனையில் இருந்துவிட்டு காலையில் லேட்டாகத்தான் எழுந்தாள் கவி. அவசரமாகச் சாப்பிட்டுவிட்டு, ஈவ்னிங் டெல்லிக்குச் செல்வதற்கான ஆயத்தங்களையும் செய்தாள். பின்னர், கொஞ்ச நேரம் கழித்து, சும்மா பொழுதுபோக்காக பர்ச்சேஸ் போய்வரலாம் என்று மனதிற்குள் நிகழ்ச்சி நிரல் எழுதிக்கொண்டாள்.
அப்பாக்காரரான எஸ்.கே.எஸ் அதிசயமாக காலை 11 மணிவரை வெளியில் செல்லாமல் வீட்டிலேயே இருந்தார்.
"டாடி, ஈவ்னிங் என்னை ஏர்போர்ட்டில் ட்ராப் பண்றீங்களா?” எனக் கொஞ்சினாள் கவி.
"ஒகே.டா செல்லம். அதைவிட எனக்கு வேற வேலை என்ன இருக்கு?” என்று சிரித்தவர்... “ நீ நார்மலா இருக்கியா கவி? தியாவையே நினைச்சிகிட்டு உன் நிம்மதியை ஸ்பாயில் பண்ணிக்காத. தியா பாவம்தான். ஆனா நாம கவலைப்படுவதால் அவள் திரும்பி வரப்போவதில்லை. என்ன செய்றது. சரிம்மா, நீ படிப்பில் கவனம் செலுத்து. என்ன வேணும்னாலும் அப்பாவுக்கு போன் பண்ணு.” என்று தட்டிக்கொடுத்தார்.
இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே எஸ் கே.எஸ்.ஸுக்கு ஒரு கால் வந்தது. போனை எடுத்தவரின் முகம் கணத்தில் மாறியது.
"என்னது? ஸ்பாட் அவுட்டா.? போலீஸுக்கு சொல்ல வேண்டாம். வேண்டாத குடைச்சல். ஹார்ட் அட்டாக்குன்னு அவங்க வீட்டுக்குத் தகவல் சொல்லிடுங்க. நான் இன்னும் அரை மணி நேரத்தில் அங்கிருப்பேன்" என்று சொல்லிவிட்டு போனை கட் பண்ணினார்.
”ஸ்பாட் அவுட்டா” என்று வாய்விட்டு அப்பா, சொன்னதைக் கேட்டு, அதிர்ச்சியானாள் கவி. யாருக்கு என்ன ஆச்சு? யார் இறந்தது? என்று அவளுக்குள் ஆயிரம் கேள்விகள், அந்த கண நேரத்தில் முளைத்தது.
"என்னாச்சு டாடி?" என்று பதற்றமாகக் கேட்டாள்.
"நம்ம ஸ்கூல் வாட்ச்மேன் இறந்துட்டானாம்"
"என்னது வாட்ச்மேன் இறந்துட்டாரா?” என மின்சாரத்தைத் தொட்டது போல் ஆனாள் கவி.
ஆனாலும் அதிர்ச்சியை அவள் காட்டிக்கொள்ளவில்லை. பள்ளியில், தான் வாட்ச் மேனைப் பார்த்தபோது அவர் பேசிய வார்த்தைகளும், பிறகு அவரைச் சந்தித்த அந்த டூவிலர் இளைஞர்களும் நினைவுக்கு வந்து போனார்கள்.
மனதில் ஏதோ ஒன்று நெருடியது.
’வாட்ச் மேனுக்கு ஹார்ட் அட்டாக் என்பது உண்மைதானா?’
( திக் திக் தொடரும்)
சாம்பவி சங்கர் எழுதும் விறுவிறு க்ரைம் திரில்லர் தொடர்... மரண முகூர்த்தம் #6