மாயப் புறா - முந்தைய பகுதிகள்
தன் கையை உதறிவிட்டு வேகமாக மண்டபத்திற்குள் ஓடிய சங்கவியை கண்டு அசோக் செய்வதறியாது திகைத்தான். "என்னுடன் வீட்டை விட்டு வெளியே வந்து அனாதையாக அடுத்த வேளை உணவுக்கு கஷ்டப்படுவதை விட, சங்கவி தன் அப்பா அம்மாவுடன் செல்ல முடிவு செய்து விட்டாளோ.... அதனால் தான் அவர்களைத் தேடி ஓடுகிறாளோ" என அசோக் நினைத்துத் தவித்தான்.
"அவள் முடிவில் எந்த தவறும் இல்லை. தவறு செய்தவன் நான் தான், தண்டனை அனுபவிக்க வேண்டும். சங்கவியின் அப்பா அம்மாவிற்கு, தங்கள் மகள் திருமணம் பற்றி நிறைய கனவுகள் இருந்திருக்கும், அத்தனையையும் நான் என் அவசர முடிவால் அழித்து விட்டேன்" என வருந்தினான் அசோக்.
மனிதன் செல்லவே முடியாத மலை உச்சியிலும் மரத்தின் உச்சியிலும் தேனீக்கள் தேன் கூட்டைக் கட்டுகின்றன. கரையான்கள் தன் உமிழ்நீரையும் மண்ணையும் கலந்து புற்று கட்டுகின்றன. ஒட்டகங்கள் பல நாட்கள் நீரில்லாமல் வாழ்கின்றன. இயற்கையின் படைப்பில் சிறு எறும்பு முதல் பெரிய உயிரினம் வரை ஏதோ ஒரு அதிசயத்தை அதனுள் வைத்துள்ளது. மனிதனுக்கும் மிக வேகமாக சிந்திக்கக்கூடிய எண்ணங்கள் உள்ளன. ஒலியை விட வேகமாக சிந்தனை அலைகளும் எண்ண அலைகளும் உருவாகின்றன.
சங்கவி கையை உதறிச சென்ற அந்த ஒரு நொடியில் அசோக் மனதில் வினாடிக்குள் ஆயிரமாயிரம் எண்ண அலைகள் மோதின.
வேகமாக ஓடிச்சென்ற சங்கவி நேராக தங்கத்திடம் சென்றாள், "அத்தை நாங்க செய்தது தப்புதான் எங்களை மன்னிச்சிடுங்க" என்று கைகளைக் கூப்பி மன்னிப்பு கேட்டுக்கொண்டே தங்கத்தின் காலில் விழுந்தாள். தூர இருந்து இதைப் பார்த்துப் பதறி அடித்து ஓடி வந்தான் அசோக். "நான்தான் தப்பு பண்ணேன், நீ ஏன் மன்னிப்பு கேட்கிற" என்று பதறினான். தங்கமோ என்ன பேசுவது என்று புரியாமல்... அவள் மனமும் லேசாக இளகியது.
செல்வம் மாமாவோ பாசத்துடன் நெருங்கி வந்து "என்னமா இப்படிப் பண்ற? எழுந்திரும்மா" என்றார்.
"ஏம்மா தங்கம் சின்னஞ் சிறுசுங்க ஏதோ தெரியாம பண்ணிட்டாங்க, பெரியவங்க நாம தான் அனுசரிச்சுப் போகணும். அந்த புள்ளைங்கள வீட்டுக்குள்ள கூப்புட்டுக்கமா" என்று கூட்டத்தில் ஒரு பெரியவர் குரல் கொடுத்தார்.
"அதெப்படிங்க முடியும். வீட்டில இருக்கிற பெரியவர்களை மதிக்காமல் இவங்களே கல்யாணம் பண்ணிப்பாங்கலாம்....இவங்களை ஆரத்தி எடுத்து வீட்டுக்குள்ள சேர்த்துக்கணுமா? முடியாதுங்க" என்று எங்கே தனக்குக் கிடைத்த துருப்புச் சீட்டு கை நழுவிப் போய் விடுமோ என்று பொங்கி எழுந்தான் அசோக்கின் அண்ணன் மணி.
தன் மகள், தங்கத்தின் காலில் விழுந்து கிடப்பதைப் பார்த்த சங்கவியின் அப்பா பெருமாள் வேகமாக ஓடிவந்து அவளை தூக்கித் தோளில் சாய்த்துக்கொண்டு "நான் இருக்கேன் டா உனக்கு "என்று பொங்கி வரும் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு தழுதழுத்த குரலில் ஆறுதல் கூறினார்.
"மாமா நல்லா இருக்கு உங்க நடிப்பு. பொண்ணை முன்னாடி அனுப்பி என் தம்பி மனசைக் கலைச்சிட்டு, சொத்துக்காக இப்படி எல்லாம் நாடகம் ஆடறீங்களா?" என்று மாமா என்ற மரியாதை கூட இல்லாமல் பேசினான் மணி.
"யாருக்கு வேணும் உங்க சொத்து? கை கால் நல்லா இருக்கு. உங்க உறவுக்கு மரியாதை கொடுத்து தான் அமைதியா இருக்கேன் பா. அவர்களை வீட்டை விட்டு வெளியே போகச் சொல்ல நீ யாருப்பா? புள்ளையப் பெத்த அப்பா அம்மாவே ஏத்துக்கிட்டு எதுவும் பேசாம இருக்காங்க. அண்ணன் நீ இந்த அளவு துள்ளற " என்று குரலை உயர்த்தினார் பெருமாள்.
தன் அண்ணனை கோபமாகப் பேசியதும் அசோக்கிற்கு பாசம் பொங்கியது.
"மாமா இது எங்க அண்ணன் தம்பி பிரச்சனை. நாங்கள் பேசிக்கிறோம். நீங்க தலையிட வேண்டாம்" என்று முகத்தில் அறைந்தாற் போல் பேசினான் அசோக்.
" பரிவட்டம் கட்டி எண்ணூறு தலைக்கட்டை ஆண்டாலும், ஆம்பளை மானம் குடும்பத்தில் இருக்கும் பொம்பளைக கையிலதான் இருக்கு. உன் மானத்தை உன் பொண்ணு வாங்கிட்டா. அவளுக்காக நீ ஏன்டா தலை குனியறே"ன்னு பெருமாளை அதட்டினாள் பவுனு பாட்டி.
" அம்மா நீ சும்மா இருமா. என் பொண்ணு தப்பு பண்ணலை. இப்படியே விட்டா என் பொண்ணு வாழ்க்கைதான் வீணாப் போகும்" என்று பாசத்தில் துடித்தார் பெருமாள்.
ஊரெல்லாம் கடன் வாங்கி விதைநெல்லை விதைச்சானாம் வெள்ளைச்சாமி. ஊரணி நீர் வந்து அடிச்சுக்கிட்டுப் போச்சுன்னு கதை விட்டானாம் பொன்னுச்சாமிங்கற" கதையா என் பேத்தி தங்கம் டா. அவளப் பத்தி எனக்குத் தெரியும்" என்று பெருமையாகச் சொன்னாள் பவுனு பாட்டி.
"பெரிய மாமா எங்களை வீட்டை விட்டுப் போகச் சொல்லாதீங்க உங்க கண்ணுல படாம வீட்டிலேயே ஒரு மூலையில் இருக்கிறோம்" என்று கெஞ்சினாள் சங்கவி.
"சங்கவி நீ ஏன் கெஞ்சிகிட்டு இருக்க? நாம வெளியே போறதுதான் நல்லது" என்றான் அசோக் .
"மாமா உங்களை யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க. என்னைத்தான் எங்கிருந்தோ வந்தாள் நல்லா இருந்த குடும்பத்தைப் பிரிச்சு சின்னாபின்னமாக்கிட்டான்னு ஊர் உலகம் என்னைய தான் குறை சொல்லும்" என்று அவள் பக்கத்து நியாயத்தைச் சொன்னாள் சங்கவி.
"ஏம்பா மணி இந்த புள்ள சொல்வதும் நியாயமா தான் இருக்கு. உன் தம்பி தானே. மன்னித்து ஏத்துக்கப்பா" என்று ரங்கசாமி பெரியப்பா சொன்னார்.
மணியோ.... "பெரியப்பா, தம்பிங்கறதால அசோக்கை மட்டும் வீட்ல சேர்த்துக்கறேன். ஆனால் சங்கவியை என்னால வீட்டில் சேர்த்துக்க முடியாது. அவள் அவளோட அம்மா வீட்டுக்குப் போகட்டும்" என்று மனசாட்சி இல்லாமல் சொன்னான்.
மணிக்குத் தெரியும் அசோக் சங்கவியைப் பிரிய மாட்டான் என்பது. அதனால் தம்பி மேல பாசம் இருப்பது போல நடித்தான்.
" அண்ணா நான் செத்தாலும் என்னால் சங்கவியைப் பிரிய முடியாது" என்று திடமாகக் கூறினான்.
"அசோக் பிரிய முடியாதுன்னா வீட்டை விட்டு வெளியே போடா" என்று மீண்டும் அதே பல்லவியைப் பாடினான் மணி.
" தம்பி நீ சொல்றது அவ்வளவு சுலபம் இல்லை. இந்த சொத்துல உனக்கு எப்படி உரிமை இருக்கோ, அதே அளவு உரிமை உன் தம்பிக்கும் இருக்கு. இது உங்க அப்பா சுய சம்பாத்தியம் இல்லை. உனக்கு மட்டும் எழுதி வைப்பதற்கு, உங்க தாத்தா சொத்து. அவனுக்கும் உரிமை இருக்கு "என்று மணியின் எண்ணத்தில் ஆயிரம் வாலா பட்டாசைக் கொளுத்திப் போட்டார் ரங்கசாமி பெரியப்பா.
மணி என்ன செய்வது என்று புரியாமல் அவன் மாமனாரைப் பார்த்தான். அவர் கண்ணால் ஏதோ ஜாடை காட்டினார்.
" என் தம்பி வீட்டை விட்டுப் போனால் என் அம்மா ரொம்ப அழுவாங்க. பெத்த தாய் அழறதைப் பார்க்கறவன் மனுசனே இல்லை. என் அம்மாவுக்காக என் தம்பியை வீட்டில் சேர்த்துக் கொள்வேன்" என்று அம்மாவை குளிரவைப்பதுபோல் தன் கட்டுக்குள் வைத்துக் கொள்வதற்காக பேசினான் மணி.
" ஐயரே மேற்கொண்டு செய்ய வேண்டிய சடங்குகள் எல்லாம் என் தம்பிக்கு முறைப்படி செய்யுங்க.
" தம்பி நீ உன் மனைவியை கூட்டிக்கொண்டு மணவறையில் போய் உட்காருப்பா" என்று திடீரென்று பாச மழை பொழிந்தான் மணி.
"அக்கா அந்த பொண்ணு சங்கவியை அழைச்சிட்டுப் போய் மணவறையில் உட்கார வைக்கா" என்று அன்புடன் சொன்னான் மணி.
" நீ மருமகளா வீட்டுக்கு வா, நீயே வீட்டை விட்டு போற மாதிரி செய்கிறேன் பார்" என்று மனதிற்குள் கருவினான் மணி.
(சிறகுகள் படபடக்கும்)