துப்பறியும் பணி என்றால் அதில் ஆண்கள் மட்டும்தான் ஈடுபட முடியும் என்கிற நிலையை மாற்றி, தற்போது அனைத்து துறைகளிலும் பெண்கள் சாதிப்பது போல் துப்பறியும் துறையிலும் தங்களால் சாதிக்க முடியும் என்று நிரூபித்து வருகின்றனர். அப்படிப்பட்ட சாதனையாளரான துப்பறிவாளர் யாஸ்மின், தான் சந்தித்த பல்வேறு சிக்கல்கள் குறித்தும் துப்பறிந்த வழக்குகள் குறித்தும் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.
துப்பறியும் பணி மட்டுமல்ல பல்வேறு பணிகளையும் ஆண்கள் மட்டும் தான் செய்ய வேண்டும் என்கிற நிலை ஒரு காலத்தில் இருந்தது. இப்போது அவற்றை பெண்கள் முறியடித்து வருகிறோம். நாம் செய்யும் வேலையில் நமக்கு திருப்தி கிடைக்க வேண்டும். அந்த வகையில் துப்பறியும் பணியில் விரும்பித்தான் நான் சேர்ந்தேன். முதலில் சிறிய கேஸ்களுக்கு ட்ரெய்னிங் கொடுப்பார்கள். திருமணம் குறித்த ஒரு கேஸ் தான் எனக்கு முதலில் வந்தது.
அதற்காக பேப்பர் போடும் பெண் போல் நான்கு நாட்கள் நடித்தேன். அந்தப் பகுதியில் சுற்றி இருப்பவர்களிடம் சகஜமாகப் பேசும்போது நமக்கு பல தகவல்கள் கிடைக்கும். போலீஸ் என்றால் நேரடியாக அடையாளத்துடன் செல்வார்கள். நாங்கள் அடையாளத்தை மறைத்துக் கொண்டு செல்வோம். அவ்வளவுதான் வித்தியாசம். இதற்கென்று தனியாகக் கல்வி அறிவு தேவையில்லை. படிக்காத பலரும் நம்மிடம் வேலை செய்துள்ளனர். என் குடும்பத்தில் இந்தப் பணி பற்றி சொன்னபோது குழந்தைகள் ஆர்வமாக இருந்தனர். கணவர் வேண்டாம் என்றார்.
மற்றவர்களுக்கு என்னால் பாதிப்பு வராது என்று உறுதியளித்துவிட்டு இந்தப் பணியில் சேர்ந்தேன். அதன் பிறகு கணவரின் ஆதரவும் கிடைத்தது. அறிவியலின் உதவி எங்களுக்கு அவசியம். ஆனால் நாமும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். திருமணம் கடந்த உறவு குறித்து வரும் கேஸ்கள் மிகவும் சென்சிடிவ்வானவை. மனதளவிலான பாதிப்புகள் இதில் மிக அதிகம். கணவனோ, மனைவியோ வைத்திருக்கும் திருமணத்தை மீறிய வகையிலான உறவுகள் உறுதியானால் இன்னொருவர் பாதிப்படையாத வகையில் அவரை முதலில் மனதளவில் தயார்படுத்துவோம். அதன்பிறகே உண்மையைக் கூறுவோம்.
திரைத்துறையினர் குறித்த வழக்குகளும் எங்களிடம் வந்திருக்கின்றன. அனைத்து வழக்குகளுமே சுவாரசியமானவை தான். இந்த வேலையில் எங்களுக்குப் பல்வேறு சவால்கள் இருக்கின்றன. எப்போது ஆரம்பிப்போம் எப்போது முடிப்போம் என்பதும் தெரியாது. சரியான நேரத்தில் சாப்பிட முடியாது. யாரை நாம் பின்தொடர்கிறோமோ அதைப் பொறுத்து சவால்கள் மாறும். பல நேரங்களில் உறவுகளைத் தவறாகப் புரிந்துகொண்டு புகார் கொடுப்பவர்களும் இருக்கிறார்கள்.
இந்த வேலையில் செலவுகள் அதிகம். ஒரு குழுவாக இணைந்து தான் நாங்கள் பணியாற்றுகிறோம். என்னிடம் வேலை செய்பவர்களுக்கு நான் சம்பளம் கொடுக்க வேண்டும். ஒருவரைப் பின்தொடர்ந்து உண்மைகளை அறிவதற்கு குறைந்தது 10 முதல் 15 நாட்கள் ஆகும். சில வழக்குகள் முடிய மாதக் கணக்கு வருடக் கணக்கு கூட ஆகும். சில க்ரைம் வழக்குகளையும் நாங்கள் கையாண்டிருக்கிறோம். அரசாங்கத்திலிருந்து எங்களுக்கு பிரதிநிதிகளை வழங்கினால் இன்னும் உதவியாக இருக்கும்.