ஜானி டெப் என்ற நிஜப்பெயர் வேண்டுமானால் கொஞ்சம் பரிட்சயம் இல்லாத பெயராக இருக்கலாம். ஆனால் 'கேப்டன் ஜாக் ஸ்பேரோ' என்ற இம்மனிதனின் நிழல்பெயர் சொன்னால் தெரியாதவர்களின் எண்ணிக்கை குறைவு. 2003ம் ஆண்டு வெளியான 'பைரேட்ஸ் ஆப் தி கரேபியன்' எனும் ஒற்றை திரைப்படம் இம்மனிதனை உலகின் மூலை முடுக்கெங்கும் கொண்டு சேர்த்தது. ஜானி டெப்பின் கடந்த காலத்துயரம், வாழ்வின் வலிகள், தோல்விகள், அன்பிற்காக அவர் ஏங்கிய ஏக்கம் என அத்தனைக்கும் இறுதி அத்தியாயம் எழுதிய படமாகவும் அவருக்கு அது அமைந்தது. இன்று நாம் பார்க்கும் ஜானி டெப்பின் தொடர் வெற்றிகள், அங்கீகாரம், கைத்தட்டல்கள், விருதுகள் இவையெல்லாம் அவர் வாழ்வின் இரண்டாம் அத்தியாயம் என்றால், குடிகாரத்தந்தை, விவாகரத்து வாங்கிய அம்மா, பள்ளிப்படிப்பை பாதியில் கைவிடவேண்டிய சூழ்நிலை, போதைக்கு அடிமையானது, இசைக்கலைஞனாக வேண்டும் என்ற கனவு கைகூடாமை, நடிகராக நடித்த படங்களில் பெரிய அங்கீகாரம் இல்லாமை, மனைவி விட்டுச் செல்லுதல் என்பவை தான் அவரது வாழ்வின் முதல் அத்தியாயம்.
சாதாரண நடுத்தரக் குடும்பத்தில் நான்காவது குழந்தையாக பிறந்தவர் ஜானி டெப். தந்தைக்கு நிரந்தர வேலை இல்லாத காரணத்தால் அவர் குடும்பம் அடிக்கடி இடமாற்றம் அடைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவர் தந்தை குடிப்பழக்கம் உள்ளவர் என்பதால் தினமும் குடித்துவிட்டு ஜானி டெப்பையும் அவரது தாயாரையும் தாக்குவதையே வாடிக்கையாக கொண்டிருந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் அவர் தாயார் விவாகரத்து வாங்கி விட ஜானி டெப்பின் வாழ்க்கையின் இருண்ட பக்கம் தொடங்கியது. பெற்றோர் விவாகரத்து இவரை மன அழுத்தத்தின் உச்சத்திற்கு கொண்டுசெல்கிறது. அதற்கு தீர்வாக போதையை தேடிச் செல்ல அவரது வாழ்க்கையும் திசைமாற தொடங்கியது. எவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும் இசை மீதான தன் காதலை கைவிடவில்லை. தாய் பரிசளித்த கிட்டாரும், கையுமாகவே எப்போதும் இருக்கிறார். பள்ளித் தலைமையாசிரியர் இவரின் இசைத்திறமையைக் கண்டு வியந்து தொடர்ந்து முயற்சிக்க சொல்கிறார். தலைமையாசிரியரின் பாராட்டு அவர் மனசுக்குள் பட்டாம்பூச்சியை பறக்க விட, பள்ளிப்படிப்பை கைவிட்டு விட்டு பல இசைக்குழுக்களில் சேர்ந்து வாசிக்க தொடங்குகிறார். அதிலும் போதிய வருமானம் இல்லாமல் தெருக்களில் பேனா விற்பனை, கேஸ் நிரப்புவது, டிஷர்ட் அச்சடிப்பது என பகுதிநேர வேலையாக கிடைக்கிற வேலைகள் அத்தனையும் செய்கிறார். அந்த நேரத்தில் இசைக்குழுவில் ஒரு பெண்ணுடன் காதல் ஏற்படுகிறது. அந்த பெண் ஜானி டெப்பிற்குள் ஒளிந்துள்ள நடிகனை கண்டுபிடித்து அவருக்கு அடியாளம் காட்டி, நடிகராக இருக்கும் தன் நண்பர் ஒருவருக்கு அறிமுகப்படுத்தியும் வைக்கிறார். பின் நடிப்பதற்கு வாய்ப்பு தேடுகிறார். நடிகனாக நடித்த படங்களும் பெரிய அளவில் அங்கீகாரத்தை கொடுக்காமல் இருந்தபோது 'டிஸ்னி' நிறுவனத்தில் இருந்து ஒரு அழைப்பு வருகிறது.
'பைரேட்ஸ் ஆப் தி கரேபியன்' திரைப்படத்தில் 'ஜாக் ஸ்பேரோ' கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு அழைப்பு அது. படம் வெளியாவதற்கு முன்பு வரை அது ஒரு சிறிய கதாபாத்திரம்தான். "உங்கள் ஒவ்வொரு மூச்சையும் அனுபவித்து வாழுங்கள்" என்பது ஜானி டெப்பின் புகழ் பெற்ற வாசகம். அதன்படி சிறிய பாத்திரமாக இருந்தாலும் சரியென்று பழங்காலக் கடற்கொள்ளையர்கள் பற்றி நிறைய படித்து கதைக்கேற்ப தன்னை தயார்ப்படுத்தினார். படம் வெளியானது.. மற்ற முக்கிய கதாபாத்திரங்களை விட ஜானி டெப்பின் கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டு இன்று உலக அளவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகராக உச்சாணிக்கொம்பில் கொண்டு போய் அவரை நிறுத்தியது.
"தோல்வியடைந்தாலோ அல்லது விரக்தியடைந்தாலோ 'இது ஒரு மோசமான நாள் மட்டும்தான்... மோசமான வாழ்க்கை அல்ல' என்று நினைத்துக்கொள்ளுங்கள். தொடர் உழைப்பு வெற்றியை உங்கள் கைகளுக்கு அருகே கொண்டு வரும். நாம் அனைவரும், ஒன்று, கடந்த காலத்தை நினைத்து வருந்துகிறோம், இல்லையென்றால் எதிர்காலத்தை நினைத்து பயப்படுகிறோம். இந்த இரண்டிற்கும் இடையில் நிகழ்காலம் வீணாகிக் கொண்டு இருக்கிறது. வெற்றியோ, பணமோ உங்களை மாற்றாது, உண்மையிலேயே நீங்கள் யார் என்பதை அது வெளிக்காட்டும்" என்கிறார் நம் நேசத்துக்குரிய 'ஜாக் ஸ்பேரோ' ஜானி. மனதில் வைத்துக்கொள்வோம். இனி நமக்கு ஒரு தோல்வி நேர்ந்தால், அது ஒரு நாள்தான், அதுவே நம் வாழ்க்கை அல்ல. அடுத்த நாள் வெற்றி வரும்.