முதல் பெண் துப்பறிவாளர் மாலதி, தான் துப்பறிந்த சுவாரசியமான விசயங்களை நம்மோடு பகிர்ந்துகொண்டு வருகிறார். அந்த வகையில், மனைவியின் நடவடிக்கை குறித்து கணவர் கொடுத்த ஒரு வழக்கு குறித்து நம்மிடையே விவரிக்கிறார்.
திருமணமான பையன், தன் மனைவி அடிக்கடி அம்மா வீட்டுக்குப் போவதாகவும், அவளது நடவடிக்கை மீது சந்தேகமாக இருப்பதாகவும் கூறுகிறார். பல நேரம் அம்மா வீட்டுக்கு போவதாக செல்லும் மனைவி அம்மா வீட்டுக்குச் செல்லாமல் அவளது பாட்டி வீட்டுக்குச் செல்கிறாள். அதனால், அவளது நடவடிக்கை குறித்து விசாரித்துக் கூறும்படி சொன்னார்கள்.
அடுத்த முறை வீட்டை விட்டு கிளம்பும்போது எங்களிடம் சொல்லுங்கள் எனக் கூறி , நாங்கள் அந்த கேஸை எடுத்துக்கொண்டோம். அதன்படி, அந்த பெண்ணை ஃபாலோவ் செய்தோம். அந்த பெண் பாட்டி வீட்டுக்கு தான் செல்கிறாள். என்றாவது ஒரு முறை தன்னுடைய அம்மா வீட்டுக்கு சென்று கொஞ்ச நேரம் மட்டுமே இருக்கிறாள். உறவுக்காரர் வீட்டுக்கு செல்வது போல் தன்னுடைய அம்மா வீட்டுக்கு சென்று மீண்டும் தன்னுடைய பாட்டி வீட்டுக்கு வந்துவிடுகிறாள்.
பாட்டி வீட்டில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பதை போட்டோஸ் எடுக்க ஆரம்பித்தோம். அந்த பையனை வரவழைத்து அந்த போட்டோஸை காண்பித்து யார் இவர்கள் என்பதை சொல்ல சொன்னோம். அதனைப் பார்த்து இது பாட்டி, பெரியம்மா மகள், மாமா என ஒவ்வொரு உறவுகளையும் அவர் சொல்கிறார். அதில் ஒரு வித்தியாசமான ஒரு போட்டோவை எடுத்தோம். ஆனால், அதை அவரிடம் காண்பிக்கவில்லை. இதையடுத்து, மீண்டும் அந்த பெண்ணை ஃபாலோவ் செய்ய ஆரம்பித்தோம். மாமா என்ற உறவினர் மீது இந்த பெண் நெருக்கமாகப் பழகுகிறாள். அந்த மாமாவுக்கும், இந்த பெண்ணுக்கும் ஒரு 15,16 வயது வித்தியாசம் இருக்கும். அந்த மாமாவை ஃபாலோவ் செய்ததில் அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. மேலும், அவருக்கு வேறு ஒரு திருமணமான பெண்ணுடன் தொடர்பு இருக்கிறது. சொல் பேச்சு கேட்காத இந்த பையனுக்கு இந்த மாதிரி தொடர்பு இருப்பது ஊருக்கே தெரியும் என்கிறார்கள். அதனால் தான், யாரும் இவருக்கு பெண் கொடுக்கவில்லை. மாமாவுடன் பழகும் பெண் தனது பத்தாவது படிக்கும் காலத்திலே தனது பாட்டி வீட்டில் தான் இருக்கிறார். பெண்ணுக்கு தன்னுடைய இளமை பருவத்தில் தோன்றும் பாலின ஈர்ப்பை, அந்த பையன் பயன்படுத்தியிருக்கிறான். இதனால் தான் திருமணமானாலும், அடிக்கடி தனது பாட்டிக்கு வருகிறாள் என்பதை கண்டுபிடித்தோம்.
ஆதாரப்பூர்வமான புகைப்படங்களை எடுத்து, அந்த பையனை அழைத்து பொறுமையாக விஷயத்தைச் சொன்னோம். அந்த பெண்ணுடன் வாழ வேண்டுமென்றால், இந்த உறவை நிறுத்திவிட்டு அவளுடன் வாழப் பாருங்கள் என கவுன்சிலிங் கொடுத்தோம். அந்த பையனும், தன் மனைவியை மாற்றி அழைத்து வர முயற்சி செய்கிறேன் எனச் சொல்லி சென்றான். என்ன உறவாக இருந்தாலும் அது எல்லைக்குட்பட்டு இருக்க வேண்டும். மேலும், தாயின் கண்காணிப்பில் பெண் பிள்ளைகள் வளர்வது தான் எப்போதுமே சாலச்சிறந்தது.