Skip to main content

அதீத செலவு செய்யும் மனைவி; மனமுடைந்த கணவன் எடுத்த முடிவு - ‘ஜெய் ஜென்’ பகிரும் மனங்களும் மனிதர்களும்: 51

Published on 02/09/2024 | Edited on 02/09/2024
 jay zen manangal vs manithargal 51

தான் சந்தித்த பல்வேறு கவுன்சிலிங் பற்றியும், பல வகையான மனிதர்களுக்கு அவர் கொடுத்த கவுன்சிலிங் குறித்தும் ‘மனங்களும் மனிதர்களும்’ தொடரின் வழியாக ஜெய் ஜென் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். அந்த வகையில், தேவையில்லாமல் அளவுக்கு அதிகமாக செலவு செய்யும் பெண்ணுக்கு கொடுத்த கவுன்சிலிங் பற்றி விளக்குகிறார்.

ஒரு கணவர், தன் மனைவியை டைவர்ஸ் செய்ய விரும்புவதாக சொன்னார். அப்பர் மிடில் கிளாஸ் வகுப்பைச் சேர்ந்தாலும், மனைவி அளவுக்கு அதிகமாக செலவு செய்துள்ளார். அதாவது, சாதாரண டீ குடிக்க வேண்டுமென்றாலும், லீ மெரிடியன் மாதிரியான 5 ஸ்டார் ஹோட்டலுக்கு சென்று தான் டீ குடிப்பார். தன்னை விட, மனைவி கொஞ்சம் பணக்காரர்கள். மனைவியை அவர்கள் வீட்டிலும் மிகவும் செல்லமாக வளர்த்துள்ளார்கள். கணவன் நன்றாக சம்பாரித்து, திருமணமான பிறகு மனைவியிடம் செலவுக்கான டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு ஆகிய கார்டுகளை கொடுத்துள்ளார். அந்த கார்டுகளை வைத்து, மனைவி எங்கு சென்றாலும் அளவு அதிகமான பொருள்களை வாங்கிவிடுவார். அதற்கான தொகையை கணவன் செலுத்திவிட்டு மனைவியை திட்டுவார். இரண்டு மாதங்கள் கழித்து, மீண்டும் அவசியமில்லாத செலவுகளை செய்வதுமாய் மனைவி இருந்திருக்கிறார். அந்த பொருட்களையும் பயன்படுத்தாமல் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு பெருமைப்பட்டு கொள்கிறார். இதை மனைவியினுடைய பேரண்ட்ஸும் அவருடைய சிறுவயதிலேயே என்கரேஜ் செய்து வந்திருக்கிறார்கள். இதற்கு மேல், தாக்குபிடிக்க முடியாமல் போனதால் மனைவியை டைவர்ஸ் செய்ய விரும்புவதாக சொன்னார். இதில் தன் மீது ஏதாவது தவறு இருக்கிறதா? என்பதை கேட்டு தெரிந்துகொள்ள தான் வந்ததாகவும் சொன்னார். 

பிள்ளைகளை கஷ்டம் தெரியாமல் வளர்ப்பது தான் பெற்றோர்களிடம் இருக்கும் பெரிய பிரச்சனை. அதீத கஷ்டத்தை சொல்லியும் வளர்க்கக் கூடாது. கஷ்டம் தெரியாமலும் வளர்க்கக் கூடாது. அந்த பெண்ணை வரவழைத்து கணவன் சொன்ன பிரச்சனைகளை எடுத்து பேச ஆரம்பித்தேன். செலவு செய்வதில் தனக்கு எந்தவித பிரச்சனை இல்லையென்றும், நல்ல பொருட்களை வாங்குவதற்கு ஆசைப்பட்டு தான் வாங்குவதாகவும் சொன்னார். மனைவி அதிக அளவில் செலவு செய்து வாங்கிய அனைத்து பொருட்களும் எந்தவித பயன்பாடும் இல்லாமல் வீட்டில் இருப்பதாக கணவர் மனைவியிடம் சொன்னார். நமக்கு பயனளிக்கக்கூடிய குறைந்த செலவில் பொருட்களை வாங்கலாம் என கணவர் சொல்ல, நல்ல பிராடக்ட்டை தானே வாங்க முடியும் என மனைவி சொல்ல இப்படியே இருவருக்கும் வாக்குவாதம் போய் கொண்டிருக்கிறது. 

அந்த பெண்ணிடம் பேசினால், தனது தவறை அவர் உணர்ந்துகொள்ளவே இல்லை. ஒரு கேள்வி கேட்க வேண்டும் என்று அவரிடம் சொன்னேன். ஒரு கற்பனை கதாபாத்திரத்தை எடுத்துக்கொள்வோம். அந்த கதாபாத்திரம் வைத்திருக்கிற, சட்டை, ஷூ, என எந்த பொருள்களும் அவருடைய உழைப்பில் இருந்து வந்தது இல்லை. இந்த கதாபாத்திரத்தை எப்படி அழைப்பீர்கள் எனக் கேட்டேன். அமைதியாகவும், பிறகு யோசிப்பதுமாய் இருந்தும் அவரிடம் எந்த பதிலும் வரவில்லை. கொஞ்ச நேரம் யோசித்த பிறகு, அந்த கதாபாத்திரத்தை எதற்கும் பிரயோஜனம் இல்லாதவர் தான் சொல்ல முடியும் என சொன்னார். அப்படி என்றால், நீங்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கு உங்களுடைய ரோல் என்ன எனக் கேட்டேன். அவரின் மனைவியாக இருப்பதால், வீட்டில் உள்ள அனைத்து பொருட்களையும் பயன்படுத்துவதற்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், அதையும் மீறி அளவுக்கு அதிகமாக செலவு செய்யும் போது பிரச்சனை ஏற்படுகிறது என்றேன். இந்த கேள்வியை கேட்டதும், கொஞ்ச நேரம் அந்த பெண் அமைதியாக இருந்து அப்படியென்றால், என்னை எதற்கும் பிரயோஜனம் இல்லாதவள் என்கிறீர்களா? எனக் கேட்டார். அந்த கதாபாத்திரத்திற்கு எதற்கும் பிரயோஜனம் இல்லாதவர் என நீங்கள் தான் பெயர் வைத்தீர்கள். இதற்கும் நீங்கள் தான் பதில் சொல்ல வேண்டும். என்னை கேட்காதீர்கள் என்றேன். ரொம்ப நேரம் அமைதியாகவே இருந்தார். 

இந்த கவுன்சிலிங் அதோடு முடிந்து இரண்டு, மூன்று மாதங்கள் கழித்து அந்த பெண் வந்தார். கடந்த இரண்டு மாதங்களாக கிரெடிட் கார்டில் எந்த பொருளும் வாங்காமல் அந்த பேலன்ஸை அப்படியே வைத்திருப்பதாக சொன்னார். அதற்கு நான், இது பெருமையா? எனக் கேட்டேன். நமக்கு கொடுத்த லிமிட்டை, நாம் பயன்படுத்தாமல் இருப்பதா பெருமை? அந்த லிமிட் மாதிரியான விஷயத்தை நாம் எப்போது உருவாக்கப் போகிறோம்?. நன்றாக படித்திருந்த போதும், வரவு வருவதற்கான செயலை செய்யவில்லை ஏன் நீங்கள் யோசிக்கவே இல்லை. செலவு செய்யவில்லை என்பது பெருமை இல்லை. வரவு உருவாக்கியிருக்கிறேன் என்பது தான் பெருமை. அப்படி சொன்னது போது அந்த பெண் யோசித்துவிட்டு சென்றார். அதிலிருந்து சில மாதங்கள் கழித்து வேலைக்கு சென்றுவிட்டதாகவும், ஃபர்ஸ்ட் பேங் பேலன் வந்துவிட்டதாகவும் மெசேஜில் அனுப்பினார்.