அத்தியாயம் - 5
ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருந்த மாலாவை கண்கொட்டாமல் பார்த்தான் வாத்சல்யன். நேற்று நடந்தது கனவா... நனவா... என்று தன்னைக் கிள்ளிப் பார்த்துக்கொண்டான். ஒரே கட்டிலில் படுத்தாலும் ஒரு திண்டை நடுவில் தடுப்பாக வைப்பாள். கையோ, காலோ இந்தப் பக்கம் வரக்கூடாது என்று கட்டளையிடுவாள். ஆனால் அதற்கு மாறாக... நேற்று முதுகோடு ஒட்டியபடி படுத்ததும் அவன் மனசுக்குள் அலையடித்தது. ஆனாலும் அதை வெளிக்காட்டாமல் நகர்ந்துகொண்டான். நகர்ந்து நகர்ந்து ஒரு ஓரமாய் படுத்துக்கொண்ட வாத்சல்யனை தன் பக்கம் திருப்பினாள். "என்னடா.... திமிரா...” என்றதும் திகைத்துப் போனான்.
" என்ன... டா போட்டுப் பேசுறே..."
" அப்படித்தான் பேசுவேன். உன் தங்கை பேசினால் இனிக்குது. நான் பேசினால் கசக்குதா... நீ மட்டும் என்னை டி சொல்றே..."
"மாலா... நீ சரியாதான இருக்கே... ஏதேனும் ஆவி உன் உடம்பில் புகுந்துடுச்சா...?” வேண்டுமென்றே வம்பிழுத்தான்.
"ஆமாம்!” என்றவள் உருண்டு புரண்டு வாத்சல்யனின் அருகில் வந்து.. "ஐ லவ் யூ" என்றபோது, மாலாவின் முகம் வெட்கத்தில் சிவந்தது.
"பார்றா... திடீர்னு என்ன கரிசனம்... உன்னோட பூஜை புனஸ்காரம், பரிகாரம் என்றெல்லாம் சொல்லுவியே... அதெல்லாம் என்னாச்சு..."
"ம்ம்ம்... உன்னைக் கொல்லப் போறேன்" என்றவாறு வாத்சல்யனின் மேலே விழுந்து கழுத்தை இறுக்கினாள்.
"ஏய்ய்ய்.... நான் எங்கம்மாவுக்கு ஒரே பிள்ளை.. விட்ருடி."
"ச்சீ போடா!" என்ற மாலா நகர்ந்து படுத்துக்கொள்ள,
"ம்ம்ம்... அப்புறம்... உனக்கு என் மேல் எப்படி லவ் வந்துச்சுனு சொல்லு கேட்போம்” என்ற வாத்சல்யன், மனைவியைத் தன் பக்கம் இழுத்தான்.
"விடுடா. உனக்கெல்லாம் பாவமே பார்க்கக் கூடாது. 48 நாள் சமத்தா இருந்தியேன்னு நானே வந்து கட்டிப்பிடிச்சா, நகர்ந்து நகர்ந்து போறியே.." என்ற மனைவியின் முகத்தில் பொய்க் கோபமும், கண்களின் பளபளப்பில் காதலும் தெரிய... சத்தமாக நகைத்தான். இருவரின் தாபங்களும் போட்டிப் போட, பிரம்மச்சரியமும் மெல்ல மெல்ல விலகி, ஆழ்ந்து தூங்கியதும் நினைவிற்கு வந்தது.
‘பரிபூரணத்துவம் என்பார்களே அதுதானா.... இது...?!’ என்று வியந்து தனக்குத்தானே பேசிக்கொண்டே... மனைவியின் இதழ்களை வருடிக்கொடுத்தான். சட்டென விழித்துக் கொண்ட மாலா... கணவனின் கையைப் பிடித்தபடி, தன்னைப் போர்வைக்குள் மறைத்துக்கொண்டாள்.
"என்னாச்சு..". என்ற வாத்சல்யன், “நேற்று இந்த வெட்கத்தை நான் பார்க்கலையே...” என்று மனைவியைத் தன் பக்கம் திருப்ப முயன்றபோது, போர்வையால் தன்னை இழுத்துப் போர்த்திக்கொண்டு, "நீ ரொம்ப கெட்டவன் டா." முணுமுணுப்பாய் பேசிய மனைவியின் மோவாயை நிமிர்த்தினான்.
"நேற்று வரம் கொடுத்துவிட்டு, இன்று வசைச் சொல்லால் வாட்டுகிறாய் நியாயமா..."
"கொஞ்சாதே... விடிந்துவிட்டது" என்று போர்வையோடு எழுந்து சென்றதும், நேற்று நடந்த நிகழ்வுகளின் கிறக்கத்திலிருந்து மீளாதவனாய் படுத்தே கிடந்த வாத்சல்யன்
"டிபன் ரெடி! இன்று அத்தை வராங்க ஏர்போர்ட் போகணும்ல." என்ற மாலாவின் குரல் கேட்க, அவசரமாய் எழுந்தான். தயாராகி வருவதற்குள்... மாலாவும் புறப்படத் தயாராக இருந்தாள்.
" நீயுமா வருகிறாய்....ஆச்சரியமா இருக்கு."
"நமக்குக் கல்யாணமாகி ஒரு வாரத்தில் அத்தை கிளம்பிட்டாங்க. பார்த்து எவ்வளவு நாளாச்சு... என்னை எதிர்பார்ப்பாங்கல்ல..."
"ஓ... மாமியார் மெச்சிய மருமகளா நீ... அதை மறந்துட்டேன் பார்.” என்றவன், இட்லியைப் பார்த்து முகம் சுளித்தான். “தினமும் இட்லியைப் போட்டு கொல்றியேடி. சோம்பேறி” என்றதும்...
"இட்லிதான் உடம்புக்கு நல்லது! ஒழுங்கா சாப்பிடுங்க. இவ்வளவு நேரம் சோம்பேறியா படுத்திருந்தது நீங்கதான்."
"புருசனாச்சே... பிடிச்சதை செய்து கொடுப்போம் என்ற அக்கறை இருக்கா... எதற்கெடுத்தாலும் எதிர்வாதம் பண்றதே வழக்கமா போச்சு."
" தெரியுதுல்ல. அப்ப வாயை மூடிக்கிட்டு சாப்பிடனும்! "
"இரு... இரு.... நீ என் பெண்டாட்டியா இல்லையானு ஒரு தரம் செக் பண்ணிக்கிறேன்" என்ற வாத்சல்யன் மாலாவின் அருகே வந்து, “கால் இருக்கு. நீ பேயில்லை” என்றதும் வெகுண்டாள். விரைந்தோடி வந்து குப்புறப்படுத்து விசும்பினாள். பின்தொடர்ந்து வந்தவன்...
"கேலி, கிண்டலையெல்லாம் ஏன் பெரிசு படுத்துற மாலா... விளையாட்டுக்குக் கூடச் சொல்லக் கூடாதா...?” என்று கேட்டு சமாதானம் செய்ய முயன்று தோற்றுப் போய், தனியே காரை எடுத்துக்கொண்டு விரைந்தான்.
செக்கிங் முடிந்து வெளியே வந்த விசாலம், மகனைப் பார்த்துப் புன்னகைத்தாள். " மாலா வரலையா..." என்று கேட்க...
"ஆமாம்! நீ ரொம்ப செல்லம் கொடுத்ததில் உச்சாணிக் கொம்பில் உட்கார்ந்திருக்கா. தினம் இட்லியானு கேட்டேன். ஒழுங்கா சாப்பிடுனு மிரட்டுறா... எதற்கெடுத்தாலும் எதிர்த்து பேசுறா... ஒரே திண்டாட்டமா இருக்கும்மா."
"நான் உன் அம்மாடா. என்கிட்டேயே கதை அளக்கிறே பார்த்தியா... என் மருமகள் தேவதை டா. நீ ஏதாவது வம்பு பண்ணியிருப்ப. அவளுக்குக் கோபம் வந்திருக்கும். வரலைனு சொல்லியிருப்பா."
"என்னையே குறை சொல்லுவீங்களே..." என்றவன் சூட்கேஸ்களை டிக்கியில் வைத்து மூடினான். காரில் இருவருமே பேசிக்கொள்ளவில்லை. இருவர் மனிதிலும் மாலா நிறைந்திருந்தாள்.
வீடு வந்து சேர்ந்ததும் "மாலா..” என்றழைத்த விசாலத்தின் குரல் கேட்டு, ஓடி வந்து தோளில் முகம் புதைத்து விசும்பினாள். மிகுந்த கவலைக்குள்ளான வாத்சல்யன், "நான் வரேன் மா. இன்று இரண்டு ஆப்ரேஷன் இருக்கு... வர லேட்டாகும்" என்று சொல்லிவிட்டு புறப்பட்டுப் போனதும், மருமகளின் தோளைத் தட்டிக்கொடுத்தபடி, "இன்னும் ஏன்டி சண்டை போடுறே... அதான் உனக்கு சொந்தமாய்ட்டான்ல."
"எப்பவும் டீஸ் பண்ணிகிட்டே இருக்கான்!" என்றவள் நாக்கைக் கடித்துவிட்டு, “இருக்கார்” என்று திருத்தினாள்.
"வாயாடி...! புருசனை அவன் இவனு சொல்லலாமா... "
"க்க்க்கும்! என்னை மட்டும் டி சொல்லலாமா...?"
"மாலா... நீ இன்னும் சின்னப் பிள்ளையில்லை. 23 வயசாச்சு. உன் விருப்பப்படி படிச்சே. இரண்டு பேருக்கும் விருப்பம் இருந்ததால கட்டி வச்சேன். ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள்னு சொல்ற மாதிரி நடந்துகிட்டா எப்படி...? ஆசையும் மோகமும் குறையலாம். ஆனால் காதல் குறையக் கூடாது. அவனோடு சந்தோசமா இருக்கிறாயா...”
"ம்ம்ம்..."
" ம்ம் னா.... என்ன அர்த்தம்..."
முகத்தை மூடியபடி, விசாலத்தை அரைக்கண்ணால் பார்த்த மாலா, “எனக்கு வெட்கமா” இருக்கு என்று ஓட...
"ஏய்ய்... நில்லுடி" என்ற அதட்டிய விசாலம், இந்த மாசம் குளிச்சுட்டியா...என்று கேட்க...
"ஆச்சு! எல்லாம் விளக்கம் சொன்னால்தான் புரியுமா... நேத்துதான் ஒன்னு சேர்ந்தோம். குளிச்சியா... குளிச்சியானு கடுப்பேத்தாதீங்க." என்றதும் திகைத்துப் போனாள் விசாலம்.
"நல்ல நாள் தேடி குறித்துக் கொடுத்தால்... உன் இஷ்டத்திற்கு நடந்தால் என்ன அர்த்தம்...? அது அதுக்கு நேரம் காலம் இருக்குன்னு சொன்ன பெரியவங்க முட்டாளா...?" கோபித்துக்கொண்ட விசாலம், மதிய உணவை மறுத்துவிட்டு படுத்துக்கொள்ள... மாலா வாத்சல்யனுக்கு ஃபோன் செய்து, "உங்கம்மா சாப்பிடலை" என்று மொட்டையாகச் சொல்லி ஃபோனை துண்டித்தாள்.
இரவு 7 மணிக்கு ஆஸ்பிட்டலிலிருந்து சோர்வாக வீடு திரும்பிய வாத்சல்யன் வழக்கம்போல் குளித்துவிட்டு அம்மாவைத் தேடிப் போனான். "மதியம் சாப்பிடலையாமே ஏம்மா..."
"எனக்கென்ன மரியாதை இருக்கு...? பெத்த பிள்ளை என் பேச்சைக் கேட்கலையே..."
" அம்மாஆஆஆ... நேரா பேசு. சுத்தி வளைக்காதே..."
"உங்க இஷ்டத்திற்கு நடக்கனும்னா... நான் எதுக்கு இங்கே...? அவள் பண்ற நாட்டாமைக்கு நீ தாளம் போடுறியா...?
"நீதானே அவளை தேவதைனு சொன்னே... சரினு தாளம் போட்டேன்" என்றதும் "களுக்" என்று சிரித்த மாலா...
"அத்தை...! எழுந்து வாங்க.... சாப்பிடாமல் பட்டினி கிடந்தால் தூக்கம் வராது. நீங்க செய்த புண்ணியம்தான் நான் மருமகளாய் வந்திருக்கேன். உங்கள் பொய்க் கோபத்தைத் தூக்கிப் போடுங்க. நாளையிலிருந்து நீங்கதான் சமைக்கணும். விதவிதமாய் சமைக்க என்னால் முடியாது."
" என்னடி சொல்றே... நான் ஏன்டி சமைக்கணும்."
"உங்கப் பிள்ளையோட நாக்கை வளர்த்து வச்சுருக்கீங்கல்ல. வேற யாரு சமைப்பா.. நீங்கதான் சமைக்கனும். எனக்குத் தூக்கம் வருது நான் போறேன்."
" அம்மா... இவள புரிஞ்சுக்கவே முடியலை மா. போதாக் குறைவாக நீ வேற... வாம்மா... சாப்பிடலாம்.”
"அவளைக் கூப்பிடுறா... ஒரு வாய் சாப்பிடச் சொல்லு."
"பசிச்சா அவளே வருவாள்” என்ற வாத்சல்யன் அம்மாவின் தட்டில் இரண்டு சப்பாத்தியைப் போட்டு பன்னீர் கிரேவியை ஊற்றினான். ஒரு வாய் சுவைத்து விட்டு, "நல்லாதான் சமைக்கிறாள். ஆனால் சோம்பேறிக் கழுதை" என்ற அம்மாவைப் பார்த்துச் சிரித்தான்.
"நீங்க என்ன சொன்னாலும் சரி, காதில் வாங்கவே மாட்டாள். நான் ஏதாவது சொல்லிட்டா போதும். முறைச்சுக்கிட்டு நிற்பா. இல்லேனா... சண்டைக்குத் தயார் ஆகிடுவாள்."
"நீ பொறுமையா போடா. அவள் வயசுக்கு, இவ்வளவு துன்பம் அதிகம் வாத்சல்யா... அவள் இடத்தில் யார் இருந்தாலும் உடைஞ்சு போயிருப்பாங்க டா. என் தம்பி செய்த அயோக்கியத்தனம்தான்.! என்ன செய்ய... பாசத்தில் ரோசம் கெட்டு அவன் வீட்டு வாசலை மிதிச்சுட்டு வந்துட்டேன். அந்த ஜாலக்காரி, அக்கா அக்கானு... உருகி உருகிப் பேசினாள். நீ செய்த பாவம் உன்னை சும்மா விடாதுனு சொன்னதுக்கு, அவள் என்ன சொன்னாள் தெரியுமா...?
கற்பகத்துக்கு செருப்பாய் உழைச்சேன். கொஞ்சம் அணுசரிச்சு போயிருந்தால்.... வேலைக்காரியாவே இருந்திருப்பேன். அவள் பேசியப் பேச்சுக்கும் நன்றி கெட்டத்தனத்திற்கும்தான் போய் சேர்ந்தாள். நான் என்ன செய்றது. உங்கள் தம்பிக்கு அவளைப் பிடிக்காமல் போனதற்குக் காரணமே... அவள் பேசும் பேச்சுதான்” என்றாள்.
" அம்மா... ப்ளீஸ்... மாமாவைப் பத்தி பேசவே பேசாதே... உன் மருமகள் காளி அவதாரம் எடுத்துடுவா... வீடு தாங்காது தாயே” என்றபடி அறைக்குள் வந்தவன், உறங்காமல் உட்கார்ந்திருந்த மாலாவைப் பார்த்துத் திடுக்கிட்டான்.
(திக் திக் தொடரும்)
- இளமதி பத்மா.
இளமதி பத்மா எழுதும் தூக்கத்தைத் துரத்தும் திகில் தொடர்...! சூட்சும உலகம் #4