
எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான ஆறாவயல் பெரியய்யா, தாராவியில் தான் வசித்த நாட்களின் நினைவுகள் குறித்தும், தாராவி தமிழர்களின் வாழ்க்கைமுறை குறித்தும் 'தாராவி கதைகள்' என்ற தொடர் வாயிலாக நம்மோடு பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், ஒருகாலத்தில் தாராவியில் பெரும்பான்மையாக வசித்த தமிழர்கள், இன்று அங்கிருந்து வெளியேறு ஏன் என்பது குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...
தாராவியின் மொத்த மக்கள் தொகையில் 80 விழுக்காடு இருந்த தமிழர்கள், இன்று 15 விழுக்காடுகூட இல்லை. ஏன் இந்த நிலை வந்தது? தாராவியின் தற்போதைய மக்கள் தொகையில் 80 விழுக்காடு முகமதியர்கள் உள்ளனர். 5 முதல் 10 விழுக்காடுவரை தெலுங்கர்கள் உள்ளனர். தாராவி மும்பையின் மத்தியில் உள்ளது. இருப்பினும், இங்கிருந்து தமிழர்கள் வெளியேறியது ஏன்? தாராவி பகுதியில் தற்போது வீடு கட்ட ஆரம்பித்துவிட்டனர். 180 மற்றும் 210 சதுரஅடி என இரு அளவுகளில் அந்தப் பகுதிகளில் வீடுகள் கட்டப்படுகின்றன. வீட்டின் நான்கு பக்கச் சுவர்களும் நான் மேலே கூறிய அளவிற்குள் அடங்கும். அதாவது 10க்கு 8 என்ற அளவுள்ள வீடு. தற்போது இதனுடைய விலை 35 லட்சம். 210 சதுரஅடி அளவுள்ள வீடு என்றால் 55 லட்சம். இவ்வளவு விலை கொடுத்து ஏன் இந்தப் பகுதியில் வசிக்க வேண்டும் என நம் ஆட்கள் நினைக்க ஆரம்பித்துவிட்டார்கள். அதனால், கோவண்டி, நவி மும்பை போன்ற பகுதிகளை நோக்கி நகர ஆரம்பித்துவிட்டனர். ஏற்கெனவே பெரும்பாலான தமிழர்கள் வெளியேறிவிட்டார்கள். சொற்ப அளவில் வசித்துவரும் தமிழர்களும் தங்களுடைய குடிசைகளை விற்று, அதற்கான பணத்தைப் பெற்றுக்கொண்டு தாராவியில் இருந்து வெளியேறும் முயற்சியில்தான் இருக்கிறார்கள்.
ஒருகாலத்தில் தினசரி 200 குடும்பங்கள் பிழைப்புத் தேடி தமிழகத்திலிருந்து தாராவி நோக்கி வருவார்கள். இன்று அந்த நிலை மாறிவிட்டது. பணிமாற்றம் மற்றும் தொழில்ரீதியாக செல்பவர்களைத் தவிர்த்து, கடந்த 5 ஆண்டுகளில் பிழைப்புத் தேடி யாரும் அங்கு செல்வதேயில்லை. அங்கிருந்த டாக்சி ஓட்டுநர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், தையல் கலைஞர்கள் என பெரும்பாலானோர் தமிழர்களாகத்தான் இருந்தார்கள். இன்று அந்த வேலைகளை பீகார், ஒடிசா ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள். ஒருகாலத்தில் தாராவி என்றால் அதுவும் தமிழ்நாடுதான். எனக்கு பெற்றத்தாய் ஆறாவயல் என்றால், வளர்ப்புத்தாய் தாராவி என நானே பல இடங்களில் கூறியிருக்கிறேன். தோல் தொழிற்சாலை, மர வேலை, வாடகை வண்டி ஓட்டியவர்களுக்கெல்லாம் இன்று வயதாகிவிட்டது. அவர்களது பிள்ளைகள் வேறுவேறு வேலைக்குச் சென்றுவிட்டதால் இனி எதற்கு நெருக்கடியான இந்த இடத்திற்குள் இருக்க வேண்டும் என்று நினைத்து பெரும்பாலான குடும்பங்கள் வெளியேறிவிட்டன.

நான் தாராவிக்குச் சென்ற காலத்தில், தாராவியைச் சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகளிலும் கட்டடங்கள் இருக்கும். ஆனால், தாராவிக்குள் ஒரு கட்டடம்கூட இருக்காது. குடிசைகளிலான வீடுகள் மட்டும்தான் அங்கு நிறைந்திருக்கும். ஒவ்வொரு குடிசையும் 15 அடி உயரத்திற்கு அமைத்திருப்பார்கள். குடிசைக்குள் ஒரு பரண் அமைத்து அதில் பொருட்களை அடுக்கிவைப்பார்கள். பொங்கல் வீடு என்று அங்கு பழக்கம் உள்ளது. வேலைதேடி வரும் பேச்சிலர்கள் அந்த வீடுகளில்தான் தங்குவார்கள். 100 சதுர அடி இடங்கொண்ட வீட்டில் ஒரு பாய் விரிக்கும் அளவிலான இடத்தை ஒதுக்கிக்கொடுப்பார்கள். படுப்பதற்கு அவர்களே ஒரு பாயும் கொடுத்துவிடுவார்கள். அப்படி அந்த அறையில் நிறைய பேர் பாய் விரித்து தங்கியிருப்பார்கள். சமைப்பதென்றால் வெளியே சென்று சமைத்துக்கொள்ள வேண்டும். மாநகராட்சி பொதுக்கழிப்பிடங்கள் ஆங்காங்கே கட்டிவிடப்பட்டிருக்கும். காலைக்கடன் கழிப்பதற்கு அதைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். பொங்கல் வீடுகள் மட்டும் இரு அடுக்கு உடைய குடிசை வீடுகளாக இருக்கும். மாத வாடகை, தினசரி வாடகை என ஒவ்வொரு விதமாக அதற்கான வாடகையை வசூலித்துக்கொள்வார்கள். தாராவியின் ஓரத்தில் 10 மாடி கட்டடம் ஒன்று இருக்கும். அதில் ஏறிப் பார்த்தால் வரிசையாக குடிசைகளும் அதற்கிடையே கோடு கிழித்ததுபோல பாதைகளும் தெரியும்.
தாராவி பகுதியில் நடந்த கவுன்சிலர் தேர்தலிலேயே மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்றவர் எஸ்.கே. ராமசாமிதான். அவரை எஸ்.கே.ஆர் என்றுதான் அழைப்பார்கள். தாராவி தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து நம்மவர் ஒருவர் வர வேண்டும் என முடிவெடுத்து, அவரை பெருவாரியாக வெற்றிபெறவைத்தனர். ஆனால், எம்.பி., எம்.எல்.ஏ தேர்தல்களில் தமிழர்கள் யாரும் வென்றுவிடக்கூடாது என்பதில் அங்கிருந்தவர்கள் கவனமாக இருந்தனர். தாராவி பகுதிக்குள் வந்து தாக்கரே கூட்டம் போடும்போதெல்லாம் தெற்கு, வடக்குமாகத் திரும்பிப் பார்ப்பார். அந்த அளவிற்கு தமிழர்கள் அங்கே திரண்டிருப்பார்கள்.
‘நாயகன்’ படத்தில் கமலின் தோற்றம் வரதராஜ முதலியார் மாதிரியே அச்சுஅசலாக இருக்கும். அவரை வரதா பாய் என்றுதான் அழைப்பார்கள். அவருக்கும் தாராவிக்கும் சம்மந்தமில்லை. தாராவியில் இருந்து சிறிது தூரம் தள்ளி கோலிவாடா என்ற பகுதி இருக்கும். அங்குதான் அவர் தடை செய்யப்பட்ட தொழில்களைச் செய்துவந்தார். இலங்கை பிரச்சினையை முன்வைத்து தமிழர்களுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் ஆதரவாக ஓர் ஊர்வலத்திற்கு அவர் ஏற்பாடு செய்தார். தாராவியில் இருந்து ஆசாத் மைதானத்திற்கு தமிழர்களை ஏற்றிக்கொண்டு செல்வதற்காக ஒரு ரயிலையே முன்பதிவு செய்தார். அந்த மைதானத்திற்கு அருகில்தான் இலங்கை தூதரகம் இருந்தது. அதுபோக, ஆட்களை ஏற்றிச் செல்ல லாரிகளும் ஏற்பாடு செய்யப்பட்டன. போலீசாரும் அதற்கான அனுமதி வழங்கிவிட்டனர். தாராவியில் இருந்த படித்தவர்கள் மத்தியில் வரதா பாய் மீது சில விமர்சனங்கள் இருந்தன. அதனால், நம்மை வழிநடத்தக்கூடிய தலைவன் எப்படி இருக்க வேண்டும்... எப்படிப்பட்ட ஆட்களின் பின்னால் நாம் செல்ல வேண்டும் என்ற குழப்பம் என்னை மாதிரி ஆட்களுக்கு இருந்தது. கடைசியில், தமிழர்களுக்காக நடக்கும் ஊர்வலம்தானே... யார் வழிநடத்தினால் என்ன என நினைத்து நாங்களும் கலந்துகொள்ளலாம் என முடிவெடுத்தோம். மாலைதான் ஊர்வலம் நடக்க இருந்தது. அன்று காலையில் யார் வேலைக்குச் சென்றாலும் அவர்களைத் தடுத்து நிறுத்தி, வரதா பாய் ஆட்கள் அடிக்க ஆரம்பித்தனர். இது மாதிரியான ரவுடிகள்கிட்ட மாட்டிக்கொண்டோமே என அங்கிருந்த மக்கள் பலமுறை நினைத்திருக்கிறார்கள். திடீரென அன்று மாலை லாரிகளில் ஊர்வலம் செல்ல கொடுக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்துவிடுகின்றனர். சரி... நடந்து போகலாம் என முடிவெடுத்து அனைவரும் அணிவகுத்துச் செல்ல ஆரம்பித்தனர். அந்த ஊர்வலத்தில் 40 ஆயிரம் பேர்வரை கலந்துகொண்டனர். ஊர்வலம் செல்லச் செல்ல வழியெங்கும் இருந்த கடைகளை அடித்து நொறுக்க ஆரம்பித்துவிட்டனர். மாடுங்கா ஸ்டேஷனை அடித்து நொறுக்கிவிட்டனர். அதாவது, இலங்கையில் அடிபடும் தமிழர்களுக்காக மஹாராஷ்ட்ராவில் நாம் வாழும் பகுதியை இவ்வாறு நாசம் செய்துகொண்டு சென்றோம்.