தான் சந்தித்த பல்வேறு கவுன்சிலிங் பற்றியும், பல வகையான மனிதர்களுக்கு அவர் கொடுத்த கவுன்சிலிங் குறித்தும் ‘மனங்களும் மனிதர்களும்’ தொடரின் வழியாக ஜெய் ஜென் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். அந்த வகையில், மனைவியின் கண்ணோட்டத்தை கண்டுக்கொள்ளாத கணவருக்கு கொடுத்த கவுன்சிலிங் பற்றி விளக்குகிறார்.
அநாதை இல்லத்தில் வளர்ந்த ஒரு பெண், நன்றாக படித்து வேலைக்குச் சென்று வருகிறார். அவரை சுற்றி நண்பர்கள், கூட வேலை பார்ப்பவர்கள் என வழக்கமான உறவுகள் இருந்தாலும், அவருக்கு அம்மா அப்பா இல்லை. தனியாக இருந்துவிடலாமா? திருமணம் செய்ய வேண்டுமா? என்ற பல கேள்விகள் அவருக்குள் வருகிறது. அவருடைய நண்பர்கள், அவரை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்திய பின்பு அவருக்கு திருமணம் நடைபெறுகிறது.
திருமணம் நடந்து முடிந்த பின்பு, அனைத்து வீடுகளிலும் வருகிற மாதிரி இவருடைய வீட்டிலும் அதே மாதிரியான பிரச்சனைகள் வருகிறது. ஆனால், இந்த பெண்ணுடைய கண்ணோட்டத்தை பேசுவதற்கு ஆள் இல்லை என்ற உளவியல் சிக்கல் இவருக்கு வருகிறது. ஒவ்வொரு முறையும் கணவன் மனைவிக்கும் சண்டை வருகிற போதெல்லாம், கணவர் சார்ந்து பேச்சுகளை மற்றவர்கள் பேசி சமாதானப்படுத்துகின்றனர். ஆனால், இந்த பெண் சார்ந்து பேசுவதற்கு ஆள்கள் இல்லை. இந்த நேரத்தில் தான் என்னிடம் கவுன்சிலிங்கிற்காக வந்தார். திருமணத்திற்கு முன்பு, தான் ஒரு அநாதை இல்லை என எப்போதும் எண்ணியதே இல்லை. ஆனால், திருமணம் முடிந்த பின்பு பிரச்சனை வருகிற போதெல்லாம், தான் ஒரு அநாதை என்ற எண்ணம் வருகிறது என்று அந்த பெண் சொன்ன வார்த்தை இன்னமும் வலிக்கிறது. தான் ஒரு அநாதை என்று திரும்ப திரும்ப நினைத்து தாழ்வுமனப்பான்மையால் தனக்குள்ளே கேள்விகள் கேட்டு மனதளவில் மிகவும் உடைந்து போயிருந்தார்.
திருமணத்திற்கு முன்பும், பின்பும் எடுத்த அவருடைய போட்டாவை காண்பித்தார். முன்பு, இருந்ததை காட்டிலும் இப்போது மிகவும் ஒல்லியாக இருந்தார். தன்னுடைய பார்வையை எடுத்துச் சொல்ல ஆள் இல்லை என நினைத்து நினைத்து தூக்கமில்லாமல், சாப்பிடாமல் வருத்தமடைந்து இப்படி ஆகியிருக்கிறார். அதன் பின், அந்த பெண்ணுடைய கணவரை வரவழைத்து பேச ஆரம்பித்த போது, தங்களுக்குள் பிரச்சனை இருப்பது உண்மை தான் என எல்லாவற்றையும் சொல்லி எதார்த்தமாக பேசினார். அப்போது, திருமணத்தின் போதும், அதற்கடுத்து இப்போது எடுத்திருந்த மனைவியினுடைய போட்டோவையும் காண்பித்து என்ன தோன்றுகிறது எனக் கேட்டேன். அவர் பேச முடியாமல் ரொம்ப நேரம் அமைதியாக இருந்தார். நன்றாக இருந்தவர் ஏன் இப்படி ஆனார் என்று கேட்டேன். எதுவும் சொல்லாமல் இருந்தார்.
அதே போல், திருமணத்திற்கு முன்பு ஒல்லியாக இருந்த அவரின் போட்டோவையும், திருமணத்திற்கு பின்பு நன்றாக இருந்த போட்டோவையும் காண்பித்து என்ன தோன்றுகிறது எனக் கேட்டேன். எதுவும் பேசாமல் கண்ணீர் விட்டார். திருமணம் நடந்த சில நாட்களில் மனைவிக்கு ஆதரவாக அவருடைய நண்பர்கள் பேசியிருக்கிறார்கள். ஆனால், அந்த நண்பர்களிடம் கணவர் கோபப்பட்டு பேசியதால் அவர்கள் இதில் இருந்து விலகிவிட்டார்கள். என்ன தப்பு நடந்தது எனக் கேட்டார். ஒவ்வொரு முறையும் உங்களுடைய பிரச்சனைகளை உங்களுடைய குடும்பம் மனைவிக்கு சொல்கின்றனர். ஆனால், மனைவியினுடைய பார்வையை இதுவரை யார் சொல்லிருக்கிறார் எனக் கேட்டேன். அப்படி சொல்ல முடியாமல் தனக்குள் கேள்விகளை கேட்டு கேட்டு இப்படி ஆகியிருக்கிறார் என்று எடுத்துச் சொன்னேன். ரொம்ப நேரம் அமைதியாக இருந்த பின்பு, கணவர் மனைவியிடம் மன்னிப்பு கேட்கிறார். ஆனால், மனைவி எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார். தான் பேசப்படுவது கேட்கப்படுவதில்லை, தனக்காக யாரும் பேசவில்லை என்ற மனநிலைக்கு வந்த அந்த பெண், இனி பேசினால் என்ன? பேசாவிட்டால் என்ன? என்ற மனநிலையில் இருக்கிறார்.
இதையடுத்து, கணவரை, தன்னை மனைவி என நினைத்துக்கொண்டு பேசுங்கள் என்றேன். நான் தான், அந்த மனைவியின் அப்பா. இப்போது, மனைவியின் பார்வையில் பிரச்சனைகளை என்னிடம் சொல்லுங்கள் என்றேன். அந்த இடத்திற்கு வருவதற்கே அவருக்கு 15 நிமிடங்கள் ஆகிறது. அவர் ஒவ்வொன்றையும் சொல்ல சொல்ல இதெல்லாம் ஒரு பிரச்சனையா என்று ஒவ்வொன்றையும் தவிர்த்துக்கொண்டே இருக்கிறேன். ஒவ்வொரு முறையும் தவிர்த்த பின்னால், மனைவியினுடைய பிரச்சனைகள் ஒவ்வொன்றையும் சொல்லி அழுகிறார். இந்த பெண்ணும் குனிந்து அழுக ஆரம்பிக்கிறார். அந்த கவுன்சிலிங் அதோடு முடிந்த பிறகு அவர்கள் இருவரும் போய்விட்டார்கள். அதன் பிறகு, ஆறு கழித்து கணவர் வந்தார். இருவரும் நன்றாக வாழ்வதாகவும். மனைவியினுடைய பார்வையையும் தான் கேட்பதாகவும் என்னிடம் சொன்னார். அதன் பின்னர், இந்த பெண் ஒரு முறை என்னை பார்க்க வந்தார். திருமண வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டிருப்பதாக நன்றி எல்லாம் தெரிவித்தார். தனக்கு அப்பா அம்மா இல்லை, அப்பா இருந்தால் தனக்கு ஆதரவாக பேசியிருப்பார் என்று பலமுறை நினைத்ததுண்டு. அதை நீங்கள் என்னுடைய அப்பா என்று சொல்லி என் பிரச்சனைகளை பேசியதற்காக தான் அன்று அழுதேன் என்றார்.