Skip to main content

தன் இயல்பை இழந்த டாக்டர்; மனைவி கேட்ட அந்த கேள்வி - ‘ஜெய் ஜென்’ பகிரும் மனங்களும் மனிதர்களும்: 38

Published on 01/08/2024 | Edited on 01/08/2024
jay zen manangal vs manithargal 38

தான் சந்தித்த பல்வேறு கவுன்சிலிங் பற்றியும், பல வகையான மனிதர்களுக்கு அவர் கொடுத்த கவுன்சிலிங் குறித்தும் ‘மனங்களும் மனிதர்களும்’ தொடரின் வழியாக ஜெய் ஜென் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். அந்த வகையில், அதீத அளவில் தொழில் ஈடுபட்டதால் குடும்பத்தை இழக்கும் தருவாயில் புகழ்பெற்ற டாக்டர் ஒருவருக்கு கொடுத்த கவுன்சிலிங் பற்றி விளக்குகிறார். 

ஒரு புகழ் பெற்ற டாக்டர் கவுன்சிலிங் வந்திருந்தார். தொழில் படி பார்க்கும் பொழுது நல்ல திருப்திகரமான ஒரு பணியை செய்து கொண்டிருக்கிறார். ஒரு குறை இல்லாமல் மனைவி பிள்ளைகள் என்று எல்லாருமே டாக்டர்கள் ரொம்ப செட்டில்ட் குடும்பம். இந்த சூழ்நிலையில் தான் இவருடைய வெறுமையான இயல்பை கவனிக்கிறார். இவரால் தன் பேரக்குழந்தைகளிடம் விளையாடவோ, பேசவோ முடியவில்லை. ஒரு இயல்பான தாத்தா போல தூக்கி கொஞ்சுவது , கூட விளையாடுவது என்பது இல்லாமல் தன்னால் அந்த பேர குழந்தைகளிடம் இயல்பாக இருக்க முடியவில்லை என்று தோன்றுகிறது. குழந்தையை பார்த்தாலே நல்ல ஆரோக்கியமாக இருக்கிறார்களா, சுத்தமாக இருக்கிறார்களா, உடல் சரியில்லையா என்றுதான் பார்க்க தோன்றுகிறது என்றார்.

தன்னுடைய சம்மந்தி அதாவது மருமகளின் அப்பாவோடு பேரக்குழந்தை நன்றாக இயல்பாக ஒட்டி விளையாடுகிறதை பார்க்கும் பொழுது தானும் ஒரு தாத்தா தானே இப்படி ஏன் இருக்க முடியவில்லை என்பதை அப்போதுதான் உணர்கிறார். வரும் நோயாளியின் வலியை உணர்வது தாண்டி சீக்கிரம் இவரை முடித்துவிட்டு அடுத்த ஆளை பார்க்க வேண்டும் என்பது போன்ற விஷயத்தில் தான் இவரது கவனம் போகிறது என்று அவரே உணர்ந்து சொன்னார். அதேபோல மகனிடம் இயல்பாக பேசுவது இல்லாமல் பேஷண்ட் எத்தனை பேர் வந்தார்கள், இந்த மாதம் எவ்வளவு ஆச்சு, பில் கட்டியாச்சா என்பது போன்ற பேச்சுவார்த்தை மட்டுமே நடக்கிறது. மகனிடம் ஒரு நாளும் இதை தவிர்த்து வேறு எதுவுமே நான் பேசியதில்லை என்கிறார். மருமகள் என்பவர் எனக்கு சாப்பாடு கொடுப்பவர் அவ்வளவுதான். இப்பொழுது மகனும் மருமகளும் தனியாக வேறொரு ஊருக்கு போகிறோம் என்று வருகிறார்கள். அப்பொழுதுதான் அவருக்கு இந்த முதல் அதிர்ச்சி ஏற்படுகிறது. அப்போதும் என்ன குறை என்று பொருளாதார ரீதியாகவே கேட்டு இருக்கிறார். ஆனால் அவர்கள் இங்கு பேசுவதற்கு இங்கே என்ன இருக்கு என்ற நோக்கதுடன் தான் முடிவெடுத்து இருக்கிறார்கள்.

என்னுடைய மனைவியிடம் சுத்தமாக எந்தவித பேச்சுவார்த்தையும் இல்லை. மனைவியும் அவரிடம் ஒருமுறை, நமக்குள் இருந்த தாம்பத்ய உறவு எப்போது முடிந்தது என்று உங்களுக்கு நியாபகம் இருக்கிறதா? என்று கேள்வி கேட்டியிருக்கிறார். இந்த சூழ்நிலையில் தான் இப்போது நான் என்ன சரி செய்ய வேண்டும் என்று கேட்டு வந்திருந்தார். நான் அவரிடம் டாக்டராக புதிதாக வேறு என்ன விஷயங்கள் இதுவரை கற்றுக் கொண்டீர்கள் என்று கேட்டேன். அதற்கெல்லாம் நேரம் கிடைக்கவில்லை ஒரே பிசியாக போய்விட்டது என்றார். முதற்கட்டமாக  உங்களிடமிருந்து கற்றுக் கொள்ளுதல் என்பது போய்விட்டது என்றேன். கற்றுக்கொள்ள நிறுத்திய பிறகு தொழில் முன்னேறி பேஷண்ட், நம்பர்ஸ் என்று போனதில் அவர் ஒரு மிஷின் போல ஆகி விட்டார் என்று புரிய வைத்தேன். இரண்டாவது கேள்வியாக காந்தியின் புகழ் பெற்ற வாசகம் ‘எதற்காக எதை இழக்கிறோம்’ என்று இருக்கிறது. நீங்கள் எதற்காக எதை இழந்தீர்கள் என்று கேட்டேன். அதை கேட்டவுடன் பதில் இல்லாமல் அமர்ந்திருந்தார். எல்லோருக்கும் அவரவர்க்கு ஒரு எல்லை இருக்கிறது. அது போல உங்களுக்கு என்ன எல்லை இருக்கிறது என்று கேட்டேன். அவருடைய உலகம் என்னவென்றால் பெட்ரூம், வாஷ்ரூம், டாக்டர் ரூம், ஓபி, ஆப்ரேஷன் செய்வது, லஞ்ச் பிரேக்ஃபாஸ்ட் டின்னர் சாப்பிடும் அறை, வெளியே கூப்பிட்டார்கள் என்றால் கார், டிரைவர், இதுதான் என்றார். அவருடைய உலகமே அதை தாண்டி எதுவுமே இல்லை. குடும்பத்தில் தான் இருக்கிறோம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாரே தவிர அவர் குடும்பத்தோடு ஒன்றியே இல்லை. வீட்டுக்குள் தான் இருக்கிறீர்கள் ஆனால், உங்களுக்கான எல்லை என்ன என்றால் தெரியவில்லை. நீங்கள் குறிப்பிட்ட  அந்த எல்லைக்குள் மனைவியோ மகனோ மருமகளோ பேரக்குழந்தையோ வரவில்லை. அப்புறம் எப்படி பேரக்குழந்தையிடம் போய் உங்களால் இயல்பாக பேச முடியும் என்றேன். 

இப்படி ஒவ்வொரு விஷயமாக அவர் செய்ய வேண்டிய மாற்றம் குறித்து பேசி புரிய வைக்க ஒரு ஆறு, ஏழு செஷன்கள் நடத்தப்பட்டது. இதற்கு பிறகு அவருடைய குடும்பத்தில் இயல்பு கொஞ்சம் மாறி இருந்தது. இவருடைய மாற்றத்தை பார்த்து மகனும் மருமகளும் வீடு மாறுவதை கொஞ்சம் தள்ளி வைத்தார்கள். முன்பு அவர் தன்னால் முடிந்த பணியை பார்த்துவிட்டு மிச்சத்தை பையனிடம் கொடுத்து வந்தவர், இப்போது பார்த்த வரைக்கும் போதும் என்று தானாகவே நிறுத்திக் கொள்கிறார். வேலை நிறுத்திவிட்டு வீட்டிற்கு வந்து முதலில் பேரக்குழந்தையிடம் தாத்தா என்கிற உறவை தொடங்கினார். கொஞ்ச நாட்கள் கழித்து அவரும் பேரக் குழந்தையும் தரையில் தவழ்ந்து ஒன்றாக விளையாடுவது போல புகைப்படத்தை எனக்கு அனுப்பினார்.