தான் சந்தித்த பல்வேறு கவுன்சிலிங்கில் பல வகையான மனிதர்களை குறித்தும், அவர் கவுன்சிலிங்க் கொடுத்த விதம் குறித்தும் ‘மனங்களும் மனிதர்களும்’ தொடரின் வழியாக ஜெய் ஜென் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.
ஐம்பது வயது நபர் ஒருவர் என்னை பார்க்க வந்தார். பொதுவாக கவுன்சிலிங் என்று வருபவர்கள் நேரடியாக தனக்கிருக்கும் பிரச்சனையை சொல்லி ஆரம்பிப்பார்கள். ஆனால் இவரோ சும்மா பேசலாம் என்று வந்தேன் என்று சாதாரணமாகச் சொன்னார். பிறகு மெல்ல பேச்சு கொடுக்க கொடுக்க தன்னைப் பற்றி சொல்ல ஆரம்பிக்கிறார். அவர் வாழ்க்கையில் எதுவெல்லாம் முக்கியமானதோ அது அனைத்தும் தோல்வியாக இருந்திருக்கிறது. சிறு வயதில் பிடித்த படிப்பை படிக்க முடியவில்லை, திருமணமான பிறகு மனைவி விட்டுச் சென்று பல வருடம் கழித்து மீண்டும் வந்து வாழ்கிறார், அதில் சில சிக்கல்கள்.
24 வயதில் இருக்கும் மகனிடம் சீரான உறவுமுறை இல்லை. மகளோ எவ்வளவு சொல்லியும் கேக்காமல் காதல் திருமணம் செய்து கொண்டு அங்கு மீண்டும் சில பிரச்சனைகள், மேலும் நிதி ரீதியாகவும் நிறைய பிரச்சனைகள். இப்போது அவர் என் தேவையே குடும்பத்திற்கு தேவைப்படவில்லை. எனவே எல்லாரையும் அழைத்து சொல்லிவிட்டு கண் காணாத இடத்திற்கோ அல்லது காசிக்கு சென்றிடலாம் என்று இருக்கிறேன் என்று இயல்பாக ஆனால் விரக்தி கலந்து கூறினார்.
நான் எடுத்த முடிவு சரியா தவறா என்று உங்களிடம் கேட்க வரவில்லை. ஆனால் நான் எடுத்த முடிவிற்கு வேறு பக்கம் இருக்கும் என்று சும்மா பேச வந்திருக்கிறேன் என்று மிகவும் தெளிவாக இருந்தார். நானும் அவர் போக்கிலேயே, சரி காசிக்கு போகலாம் என்றால் டிக்கெட் எடுத்தாச்சா, அங்கு போய் என்னவெல்லாம் செய்யப் போகிறீர்கள் என்று பொதுவாக பேசிவிட்டு, கண் காணாத இடத்திற்கு என்று சொன்னீர்களே அப்படி என்றால் என்ன, யார் உங்களுக்கு காசி போய்வர ஐடியா கொடுத்தது என்று கேட்டேன். அவரை பொறுத்தவரை தன்னை சுற்றி இருக்கும் பிரச்சனைகளிடம் இருந்து வெளிவர வேண்டும் என்றும், தன்னை யாருமே மதிக்கவில்லை என்பதுதான் அவருக்கு இப்படி கண் காணாத இடத்திற்கு போக தோன்றி இருக்கிறது.
நான் அவரிடம் சற்று கடினமாக பேசப் போகிறேன் என்று தொடங்கி, நீங்கள் ஒரு ஈகோயிஸ்டிக் பெர்சன் தான் சார் என்றேன். இங்கு யாரும் உங்களை மதிப்பதில்லை, பொருட்படுத்துவதில்லை என்று காசிக்கு போகிறீர்கள். ஆனால் காசிக்கு சென்றால் அங்கு யாரையுமே உங்களுக்கு தெரியாது. சாப்பாடு என்று கேட்டால் யாரோ ஒருவர் உணவு கொடுப்பர். இது போலவே நகர வாழ்க்கையில் நீங்கள் வாழ நினைப்பது ஈகோயிஸ்டிக் தான் என்று அவரிடம் சொன்னேன். மேலும் நீங்கள் எல்லாரிடமும் தான் செய்வது சரி என்று ஒத்துக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்.
நான் என் மனைவிக்கு, மகனுக்கு, மகளுக்கு நல்லது தானே செய்தேன் என்று அனைவரும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்கள். நீங்கள் நல்லவராகவே இருக்கலாம். ஆனால் உலகம் அப்படி ஏற்றுக் கொள்ளாது, உங்களை வேறு மாதிரியாகத்தான் பார்க்கும். இதுவரை நீங்கள் பார்க்காத இடத்தில் இயல்பாக வாழ்ந்து விட முடியும் என்று எப்படி நினைக்கிறீர்கள். உங்கள் மனைவி, உங்கள் மகன், மகள் என்பவர்களிடமே உங்களால் சரியாக வாழ முடியவில்லை என்று சிந்தனை இருக்கிறது. ஆனால் மற்றவர்கள் கூறியதை வைத்தும், சினிமாவில் பார்த்ததை வைத்தும் காசிக்கு சென்றால் சிறப்பாக வாழ்ந்திட முடியும் என்று நினைப்பது போலியான பாசிடிவிட்டி தானே.
அவரும் சிரித்து, சரியாக பிடித்துவிட்டீர்கள் என்று ஒத்துக்கொண்டார். மேலும் இயற்கை இது தான். உங்கள் மனைவி, மகள், மகன் என்று உங்களுக்கு என்று தெரிந்தே அங்கீகரித்திருக்கிறது. அதை நீங்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றேன். என்னவோ புரிந்தும் புரியாதது போல இருந்தார். நான் இப்படி இருக்கிறேன். எல்லாரும் தன்னை போலவே இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள். அதுதான் உங்களை காசிக்கு செல்ல நகர்த்துகிறது. கண்டிப்பாக நீங்கள் காசிக்கு போனாலும், இருப்பவர்களிலே நல்ல சாமியார் நான்தான் வேறு யாரும் இல்லை என்று தான் சொல்வீர்கள் என்று சிரித்துக் கொண்டே சொன்னேன். அவரும் சிரித்துவிட்டு சரி என்று கிளம்பினார். இரண்டு வாரம் கழித்து பேசுகையில், அவர் என்னிடம் நான் காசிக்கு போகவில்லை என்று அன்றே உங்களுக்கு தெரிந்திருக்கும். இருந்தாலும் சொல்கிறேன் நான் போகவில்லை என்று இயல்பாக சொன்னார்.