மரணப் படுக்கையிலிருந்த பெண்ணுக்கு கொடுக்கப்பட்ட கவுன்சிலிங் பற்றி ’மனங்களும் மனிதர்களும்’ தொடரின் வழியாக நம்மோடு ஜெய் ஜென் பகிர்ந்து கொள்கிறார்.
சாகுற நாள் தெரிந்துவிட்டால், வாழ்கிற நாள் நரகமாகிவிடும் என்பது அனைவரும் அறிந்ததே. அப்படியான சாகுற நாள் தெரிந்து மரணப் படுக்கையிலிருந்த பெண்ணுக்கு கவுன்சிலிங் தர வேண்டும் என்று அந்த பெண்ணின் நண்பர்கள் அழைத்தனர். சாகப் போகிறவர்களுக்கு என்ன கவுன்சிலிங் கொடுத்து விட முடியும் என்ற கேள்வியோடு தான் அந்த பெண்ணை அணுகினேன்.
கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருந்தவர். அவருடைய பழைய போட்டோவையும் இப்போது இருப்பதையும் பார்த்தால் முற்றிலுமாக வேறுபட்டு இருந்தார். ஐடி துறையில் பெரிய பொறுப்பில் இருந்ததால் சரியாக தூங்காமல், உணவில் கவனம் செலுத்தாமல் கண்ட நேரத்திற்கு தூங்கி கண்டதை தின்று கேன்சர் வந்ததாகச் சொன்னார்.
கீமோதெரபி சிகிச்சையால் முடியெல்லாம் கொட்டிய நிலையில், பல் அனைத்தும் விழுந்து, உடல் எடை குறைந்து, தோல் எல்லாம் சுருங்கி சதையில்லாமல் வெறும் கூடாக இருந்தார், பார்ப்பதற்கு பரிதாபமாக இருந்தாலும் கேன்சரால் பாதிக்கப்பட்ட எல்லாரின் நிலையும் இதுதான் என்பதையும் உணர்ந்துகொள்ள வேண்டியதாய் இருந்தது.
படுத்தே இருந்தவரிடம் மேலும் கொஞ்சம் பேச்சுக் கொடுத்தபோது நம்மிடம் சில விசயங்களைச் சொன்னார். தனக்கு பிடித்த சில விசயங்களை செய்யாமல் தள்ளிப்போட்டுக் கொண்டே போனதை நினைத்து மட்டும் நினைத்து வருத்தப்படுவதாகவும், பிடித்த விசயங்களை செய்ய எப்போதும் தள்ளிப்போடவே கூடாது என்றார்.
மேலும், மரணம் தள்ளிப்போவதால் தான் நாம் கோவத்தோடு இருக்கிறோம், மரணிக்கப் போகிற நாள் தெரிந்துவிட்டால் யாரோடும் கோவமே படாமல் எல்லோரையும் மன்னிக்க கற்றுக்கொள்வோம். நானும் பலரை தொடர்பு கொண்டு மன்னிப்பு எல்லாம் கேட்டேன் என்றார்.
கணவர் மற்றும் குழந்தைகளிடம் பிரிந்து இருக்கிறவருக்கு குழந்தைகளுக்கு செய்ய வேண்டிய பலவற்றை தொடங்காமலேயே இருந்துவிட்டேன் என்று வருந்தினார். கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் அவரோடு பேசிக்கொண்டிருந்தேன். பேச்சின் முடிவில் இப்போதைக்கு மனசு கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறது என்றார். பல சமயம் கவுன்சிலிங் என்பது நாம் பேசுவது மட்டுமல்ல, கேட்பதும் கூடத்தான்.
அடுத்த இரண்டு மாதத்தில் அவர் இறந்துவிட்டதாக தகவல் வந்தது. ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்திவிட்டு அவர் சொன்னதை நினைவு கூர்ந்தேன். விரும்பியதை உடனே செய்ய வேண்டும், கோவத்தை குறைத்து, மன்னிக்க பழக வேண்டும். எதையும் தள்ளிப்போடக்கூடாது, குழந்தைகளுக்கு செய்ய நினைத்ததை உடனே ஆரம்பிக்க வேண்டும் என்றார். கவுன்சிலிங் கொடுக்கப் போன நான் கற்றுக்கொண்டு வந்தேன்.