Skip to main content

சாம்பவி சங்கர் எழுதும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் தொடர்! ‘மாயப் புறா’ #06

Published on 04/02/2022 | Edited on 14/02/2022

 

maayapura part 6

 

மாயப் புறா - முந்தைய பகுதிகள்

 

பந்தியில் சாப்பாடு பரிமாறிக்கொண்டிருந்த சங்கவி, அசோக்கின் சொல்லால் திகைத்துப் போனாள்.

 

அவன் தன்னை அவமானப்படுத்திவிட்டதாக  தவறாய் உணர்ந்தாள். அவனது நோக்கம் அவளுக்குப் புரியவில்லை. அவள் மீதான அன்பே இப்படி அம்பாய் அவனிடமிருந்து வெளிவந்தது என்பதை அவளால் அப்போது உணர்ந்துகொள்ள முடியவில்லை. 

 

'மீனும் கூட தூண்டிலில் மாட்டாது' வாயை  திறக்காமல் இருந்தால். சங்கவியின் மீதுள்ள அன்பால்,  கோபப்பட்டு அசோக் என்ற மீன் தூண்டில், வலை , இரண்டிலும் மாட்டிக்கொண்டது. அசோக் கோபமாகச் சொன்னதும்  முகம் வாடிப் போய் உள்ளே ஓடினாள் சங்கவி. இதுபோன்ற சூழ்நிலையில்  நன்றாக  பேசுபவர்களை சமாதானப்படுத்தவே,  வார்த்தைகளில் எள்ளு இடித்து எண்ணெய் எடுக்க வேண்டியிருக்கும். 

 

அசோக்  சங்கவியிடம் முகம் பார்த்து இதுவரை ஒரு வார்த்தை கூட பேசியதில்லை. எப்படி சமாதானப்படுத்துவது என்று குழம்பிக்கொண்டிருந்தான்.

 

இதற்கிடையில் புவனா என்ற நாகப்பாம்பு, இதை பார்த்துவிட்டு கோபமாக "புஸ்..,புஸ்..என்று மூச்சுவிட்டுக் கொண்டிருக்கிறது. இந்த பாம்புக்கு எப்படி மகுடி வாசிக்கணும்னு அசோக்குக்கு தெரியும். மதியம் எல்லாரும் சாப்பிட்டு முடித்ததும் அலமேலுவும், சங்கவியும் சாப்பிடவில்லை என்பதை அவன் கவனித்தான்.

"அத்தை ..வாங்கத்த  சாப்பிடலாம். சங்கவியையும் கூப்பிட்டுக்கிட்டு வாங்க" என்று சொன்னான்.

"அவளுக்கு தலை வலிக்குதாம். சாப்பிட வரலைன்னு  சொன்னாப்பா" என்று வருத்தத்துடன் அலமேலு சொன்னாள்.

 

தான் அதட்டியதால்தான் அவள் சாப்பிட வரவில்லை என்பதைப் புரிந்த கொண்ட அசோக், "அத்தை, சாப்பிடாம இருந்து சங்கவி மயக்கம் போட்டா விசேஷ வீட்ல நல்லாவா இருக்கும். விசேஷ வீட்டுக்காரங்களுக்குத் தானே கஷ்டம். வந்து சாப்பிட சொல்லுங்க" என்று சங்கவி மீது அக்கறை இல்லாதது போல அக்கறைப்பட்டான் அசோக்.

 

இதை கேட்டுக்கொண்டிருந்த சங்கவியும் வேண்டா வெறுப்பாக வேறு வழியின்றிச் சாப்பிட வந்து தயங்கி நின்றாள். 

 

அசோக்கும் சாப்பிடவில்லை என்பதை சங்கவி அறிவாள்.  அதனால் தயங்கினாள். அதைப் புரிந்து கொண்ட அசோக், " புவனா  வா,  வந்து எனக்கு சாப்பாடு போடு" என்று புவனாவின் கோபத்தைக் குறைப்பதற்காக பேசினான். 

"மாமா  என்னால முடியல., வேலைக்காரங்க இருக்காங்க. அவங்களைக் கூப்பிட்டுச் சாப்பாடு போடச்சொல்லுங்க"  என்று சொல்லிவிட்டு அந்த இடத்தைவிட்டு நகர்ந்தாள் புவனா.

"அப்பாடா,   புவனாவை இங்கிருந்து  அனுப்பியாச்சு" என்று வலையிலிருந்து தப்பிய மீனாய் மனம்  நிம்மதியானான்.

ஒரு பெண் ஒரு ஆணை மதிக்கவில்லையென்றால் பார்த்துக்கொண்டிருக்கும் பெண்ணுக்கு அந்த ஆணின் மீது இரக்கம் வரும். அப்படித்தான் சங்கவியும் அசோக் மீது இரக்கப்பட்டு  "நீங்க சாப்பிடுங்க நான் பரிமாறுகிறேன்" என்றாள். 

’வயக்காட்டுல போக்குக்காட்டுன நண்டு, குழம்புச் சட்டியில மிதக்கற கதையா’ சங்கவி சொன்னதும்  "டக்குன்னு" சாப்பிட உட்கார்ந்தான்.

 

அதன்பிறகு சங்கவியும், பண்ணையாட்களுடன் அமர்ந்து மகிழ்வாக சிரித்துப் பேசி சாப்பிட்டாள்.

 

மீண்டும் சமையல் பாத்திரங்களைக் கழுவி சுத்தப்படுத்தினார்கள் சங்கவியும் அலமேலுவும்.

 

சங்கவி இங்கிருந்தால் வேலை செய்து கொண்டேயிருப்பாள். அவளுக்கு ஒரு மணி நேரமாவது ஓய்வு கொடுக்க வேண்டும் என்று நினைத்தான் அசோக்.

 

புவனாவுக்கு கொக்கி போட்டான், "புவனா  செல்லியம்மன் கோயிலுக்கு போய்ட்டு வரலாமா" என்று குரலில் அன்புடன் கேட்டான்.  

 

பெண்களின் மிகப்பெரிய பலவீனம் ஆண்கள் வெளியில் அழைத்தால் மறுக்காமல்  வருவதுதான். காரணம்  அந்த காலத்தில் எந்த பொழுதுபோக்கும் இல்லை. கூட்டுக் குடும்பம் என்பதால் தனிமையும் இல்லை. புவனாவும்  அசோக் மாமாவுடன் வெளியில்  தனியாக வெளியில் செல்லப்போகிறோம் என்ற ஆசையில் துள்ளிக் குதித்து  ஓடிச்சென்று அம்மாவிடமும், அத்தையிடமும், அவளே அனுமதி வாங்கிக்கொண்டு செல்லியம்மனிடம் போட்டி போட்டுக்கொண்டு அலங்காரம் செய்து கிளம்பினாள்.

"மாமா , நான் ரெடி. போகலாமா" என்று கேட்டுக் கொண்டே, புல்லட் அருகில் வந்தாள். அவள் மனம் முதல் முறையாக மாமாவுடன்  புல்லட்டில் போகப்போகிறோம் என்ற நினைவில், சிறகு இல்லாமல்  அவள் மேகங்களுடன் ஊர்வலம் வந்தாள்.

 

டயரில் சுத்தமாகக்  காற்றில்லை. இதைப் பார்த்ததும்  புவனாவின் முகம்  காற்றுபோன டயர் டியூப் போலானது.  

"மாமா, கோயிலுக்கு போகமுடியாதா?" என்று கேட்டாள். 

"போகலாம் இரு. வேற  ஏற்பாடு பண்றேன்” எனக்  கூறிவிட்டு, வில்லு வண்டியைக் கட்டி வந்தான். 

 

அதைப் பார்த்ததும்  விளையாடிக்கொண்டிருந்த  அக்கா மகனும், மகளும், நாங்களும் வரோம் என வண்டி அருகே ஓடி வந்தனர்.

 

இதைத் தான் அசோக் எதிர்பார்த்தான்."சரி வாங்கடா செல்லங்களா" என அழைத்துக் கொண்டான். குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த  சங்கவி  பாவமே என நின்றிருந்தாள். அவளைப் பார்த்துக்கொண்டே குழந்தைகள்  " மாமா சங்கவி அக்காவையும்  கோவிலுக்கு அழைச்சிட்டு போகலாம்" என கெஞ்சினார்கள்

"சங்கவி அக்கா வரமாட்டாங்க  டா" என்று புவனாவுக்கு  ஆதரவாக பேசினான்.

 

அக்கா பசங்க  கதிரும், நந்தினியும் உடனே ஓடிச்சென்று   சங்கவியின் கைகளைப் பிடித்துக்கொண்டு " நீங்களும் வாங்க அக்கா" என்று கெஞ்சினார்கள்.  

 

சங்கவி என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தாள்.  புவனாவின்  கண்களோ  கோபத்தில்   மிளகாய்ப் பழமானது. இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த  செல்வம், அங்கு வந்தார்.

"ஏம்மா புவனா, நம்ம வீட்டிற்கு விருந்தாளியா வந்திருக்கற. சங்கவியைக் கோவில்  குளத்துக்கு நீதானேம்மா  அழைச்சிட்டுப்  போகணும்” என்று  என்னவோ ஜனாதிபதி பொறுப்பு கொடுப்பது போலப்  பேசினார்.

 

புவனாவும் மனசு மாறி  "சங்கவி, கோயிலுக்கு நீயும் வா" என்று அழைத்தாள்.

 

மாமாவே சொன்னபிறகு மறுத்துப் பேச வழியில்லாமல் சங்கவி  வண்டியில் ஏறிக்கொண்டாள். வில்லு வண்டியை ஓட்டியது அசோக்.  முத்து படத்துல  ரஜினி குதிரை வண்டியை, இவனைப் பார்த்து தான் ஓட்டியிருப்பாரோ? என்று வியக்கும் அளவுக்கு, ஸ்டைலாக ஓட்டினான்.

 

வண்டிமாடுகள் ஜல் ஜல் என்று தாள லயம் தப்பாமல் வேகமெடுத்தன. சங்கவியின் மனவேகத்திற்கு ஈடு கொடுப்பது போல்.

 

கோயிலில் நடக்கப் போகும் விபரீதம் அறியாமலேயே,  குதூகுலமாக அவர்கள் சென்றனர்.

 

(சிறகுகள் படபடக்கும்)