மாற்றுத்திறனாளி ஒருவரின் கதை குறித்து “மனங்களும் மனிதர்களும்” என்னும் தொடரின் வழியே ஜெய் ஜென் விவரிக்கிறார்.
'அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது...' என்று சொல்வதன் மூலம் நோய் இல்லாமல் பிறந்தவர்கள் சிறந்தவர்கள் போலவும், மாற்றுத்திறனாளிகளாய் பிறந்தவர்கள் நம்முடைய பரிதாபத்துக்கு உள்ளானவர்கள் போலவும் ஒரு தோற்றம் ஏற்பட்டு விட்டது. ஒரு விபத்தினால் காலில் அடிபட்டு மாற்றுத்திறனாளியான ஒருவர் நம்மிடம் வந்தார். வீல்சேர் அவருடைய அன்றாட வாழ்க்கைக்கு உதவியது. ஒரு அலுவலகத்தில் அவர் வேலை பார்த்து வந்தார். அவருக்கு நிறைய மன அழுத்தம் இருந்தது.
மற்றவர்கள் போல் தானும் வாழ வேண்டும் என்று அவர் விரும்பினார். ஆனால் இந்த சமுதாயம் அவருக்கு கால் இல்லை என்பதை மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டிக்கொண்டே இருந்தது. அவர் மறக்க நினைத்த விஷயத்தை சமுதாயம் அவருக்கு நினைவூட்டிக் கொண்டே இருந்தது. அவருக்கு சம்பளத்தை உயர்த்தினால் கூட கால் இல்லாததால் பரிதாபத்தில் செய்தது போல் பேசினர். இயல்பாக அவருக்குக் கிடைக்க வேண்டிய விஷயங்களை பரிதாபத்தால் கிடைப்பது போல் அனைவரும் சேர்ந்து உருவாக்கினர்.
இதை எதிர்கொள்வது எப்படி என்று என்னிடம் அவர் கேட்டார். அவருக்கு சில கதைகளின் மூலம் வாழ்க்கையின் எதார்த்தத்தை நான் உணர்த்தினேன். நகைச்சுவை பொதிந்த அந்தக் கதைகளைக் கேட்ட அவர் விழுந்து விழுந்து சிரித்தார். எதையும் எதிர்கொள்ளும் தன்னம்பிக்கை அவருக்கு வந்தது. எதனாலும் தன்னுடைய மதிப்பு குறையப்போவதில்லை என்பதை அவர் உணர்ந்தார். மற்றவர்கள் தன்னை எவ்வாறு நடத்தினாலும், தன்னுடைய பெஸ்ட்டைத் தான் உலகுக்கு வழங்க வேண்டும் என்கிற முடிவுக்கு அவர் வந்தார்.
தன்னுடைய பணியில் அடுத்த நிலைக்கு அவர் முன்னேறினார். தனக்குக் கீழே பணியாளர்கள் வரும் நிலைக்கு அவர் சென்றார். பணத்தின் மதிப்பு எப்போதும் குறையாது என்பதை உணர்த்தும் கதையும், கல்லை அடிக்கும் ஒவ்வொரு அடியும் சிலையாக மாற்றுவதற்குத் தான் என்பதை உணர்த்தும் கதையும் அவருடைய வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தின. மாற்றுத்திறனாளிகள் அனைவரும் இதுபோன்ற தன்னம்பிக்கையோடு, வாழ்வில் அனைத்து சவால்களையும் சந்தித்து வெற்றிநடை போட வேண்டும் என்பதே நம்முடைய விருப்பம்.