தான் கையாண்ட வித்தியாசமான கவுன்சிலிங் குறித்து “மனங்களும் மனிதர்களும்” என்னும் தொடரின் வழியாக ஜெய் ஜென் விவரிக்கிறார். அந்த வகையில் மொத்த குடும்பத்துக்கே நடத்தப்பட்ட வித்தியாசமான கவுன்சிலிங் குறித்த அனுபவத்தினை நம்மோடு பகிர்கிறார்.
ஒரு குடும்பத்தில் ஒருவருக்கோ அல்லது இருவருக்கோ மட்டும் கவுன்சிலிங் கொடுக்கும்போது, குடும்பத்தில் மற்றவர்கள் தங்களுடைய தவறுகளைத் தொடர்ந்து செய்து வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே ஒட்டுமொத்த குடும்பத்துக்கும் கவுன்சிலிங் கொடுத்த சம்பவங்கள் நடைபெற்றிருக்கின்றன. அவர்களுக்கு மொபைல் பயன்படுத்தக்கூடாது என்பதுதான் முதல் கட்டளையாக விதிக்கப்படும். உணர்வுகளால் பிணைக்கப்பட்டவை தான் குடும்பங்கள். எனவே பல நேரங்களில் அவர்கள் ஒன்றாக உணர்வுகளை வெளிப்படுத்துவார்கள்.
நல்ல விஷயங்களைக் குடும்பமாக உட்கார்ந்து பேசும்போது அந்தக் குடும்பம் இன்னும் அழகாகும். எவ்வளவு படித்திருந்தாலும் ஒரு பெண்ணை மருமகளாக மட்டுமே பார்க்கும் எண்ணம் இங்கு இருக்கிறது. ஒரு குடும்பம் சரியானால் அனைத்துமே சரியாகும். தாத்தா, பாட்டி, மூன்று மகன்கள், மூன்று மருமகள்கள், மகள், மருமகன், சம்பந்திகள், குழந்தைகள் என்று ஒரு பெரிய குடும்பமே கவுன்சிலிங்குக்கு வந்தது. இவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து நம்மிடம் அழைத்து வந்தது தாத்தா தான்.
குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சனை இருந்தது. இன்று பல வீடுகளில் உள்ள பிரச்சனையே மனதில் இருப்பதை வெளிப்படையாகப் பேச முடியவில்லை என்பதுதான். கவுன்சிலிங்கின்போது ஒருவரோடு இன்னொருவர் மனம் விட்டுப் பேச முடிகிறது. உதாரணத்துக்கு, தாத்தா அதிகம் குறட்டை விடுவதால் தான் அவரோடு இரவில் சேர்ந்து உறங்குவதில்லை என்று பேரன் தெரிவித்தவுடன், அதைக் குறைப்பதற்கான வேலைகளைத் தொடங்கினார் தாத்தா. குடும்பத்தில் நிகழும் சின்னச் சின்ன மாற்றங்கள் கவிதை போல் ஆகின.
வேலையை விட்டு வீட்டுக்கு வரும் தந்தை எப்போதும் செல்போனையே பார்த்துக்கொண்டிருப்பதால் தன்னால் அவரோடு நேரம் செலவிட முடியவில்லை என்று குழந்தை சொன்னவுடன் அந்தத் தந்தையிடம் மாற்றம் தெரிந்தது. பெரியவர்கள் சொல்வது தான் சரி, சின்னவர்களுக்கு எதுவும் தெரியாது என்கிற நம்முடைய மனநிலை தான் வீடுகளில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசுவதைத் தடுக்கிறது. ஈகோ மற்றும் நேரமின்மையும் இதற்கு ஒரு காரணம். குடும்ப உறுப்பினர்களுக்குள் எப்போதும் ஒரு சமநிலை இருக்க வேண்டும். அனைவருக்குமான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.