குரல்வளையை நெறித்தப் பின் குரலைக் கேட்க ஆசைப்படும் திறனிழந்த காதுகளை உடைய நிலைமைதான் சந்தனாவின் நிலையும். அவள் என்ன அந்தரங்கம் பிரமீளாவா தன் உடலைவிற்று குடும்பத்தைக் காப்பாற்ற, ஆனால் அதைப் போலத்தானே தன் நிலையும் அந்தரத்தில் தொங்குகிறது. கடிகாரம் பதினொன்று பத்து என்று நேரம் காட்டியது ஏதோ ஒரு வீட்டினுள் இருந்து தொலைக்காட்சி தொடர் இந்நேரத்திலும் இணைந்து வழங்குபவர்கள் என்று வாங்கிய காசுக்கு விளம்பரத்தாரரின் பெயரைக் கூறியதை ஜன்னல் வழியாக காற்று துப்பிச் சென்றது. நாயர் கடையில் ஒன்பது மணிக்கு வாங்கிவைத்திருந்த பரோட்டா காய்ந்து போய் சீந்துவாரில்லாமல் கிடக்கு ஒரு துணுக்கைப் பிய்த்துக் கொள்கிறேன் என்று சில சித்தெரும்புகள் பார்சல் கயிற்றிடம் தாலிப்பிச்சைக் கேட்டுக் கொண்டு இருக்கு, என் கைபேசி ஒருமுறை ஒளிர்ந்து ரவியின் குறுஞ்செய்தியை அந்த விநாடியே இருளுக்குள் மறைத்து கொண்டது.
ரவி யார்? என்ற கேள்வி உங்கள் மனதிற்குள் எழுந்திருக்கும், அதைவிட முக்கியமாய் என்னைப் பற்றி நான் பிரமீளாதான் என்னடா அந்தகாலப் பெயராக இருக்கிறதே என்று நினைக்கிறீர்களா நானும் அப்படித்தான் உணர்ந்தேன். இந்த பெயரில் விவரம் தெரிந்து அழைத்த போது பிரமீளாவா பிரமீடா என்று முன்புறம் உயர்ந்த குட்டி சிகரத்தை கண்டு வியந்தவர்கள்தான் அதிகம். அந்த வியப்பு எனக்கு சொல்லவொண்ணா திமிரைக் கொடுத்தது கடந்த நாட்களில், குக்கிராமக் குடிசையில் முடங்கிப் போக வேண்டிய பிரமிளா, வயக்காட்டின் வரப்பில் களையறுத்துக் கொண்டு, கோடாலிக் கொண்டை முடிச்சில் ஒற்றைத் துளி மல்லிகையைச் சொருகிக்கொண்டு காற்றில் ஆடும் மாராப்பைப் பற்றி அடிக்கொருதரம் கவலைக் கொள்ளவேண்டிய பிரமிளா, கடந்த மாதம் வரையிலும் ஐஐடியின் டீம் ஹெச்சாராக இருந்த பிரமிளா, காலர் வைத்த நெக் ஜாக்கெட்டில் முன்பகுதியில் அரையளவு தெரியும் படி கவர்ச்சியாக உடையணிந்து கிறங்கவைத்த பிரமீளா இன்றோ அல்லது நாளையோ மீளாத் துயில் கொள்ளப் போகிறாள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
மீண்டும் கைபேசியின் கத்தல் என் கவனத்தை சிதறடித்தது. உயிர்ப்பித்தேன் என்ன முடிவு பண்ணியிருக்கே ?! ரவி கிட்டத்தட்ட இந்தக் கேள்வியை சில நூறு முறையேனும் கேட்டு இருப்பான் இந்த ஐந்து வருடங்களில்! நலிந்து போன விவசாயியாய் தண்ணீரின்றி நாவறண்டு பாளம் விட்டிருந்த நிலத்தைப் பார்த்து தன் தொண்டைக்குழிக்குள் எழுந்த அழுகையை பூச்சிக்கொல்லி மருந்தைக் கொண்டு விழுங்கிய தந்தை அறிந்திருக்க மாட்டார் போன மாதம் வரை பகட்டாய் வாழ்ந்த பிரமீளாவை அவரின் ஆன்மா மானசீகமாய் என்னை பார்த்ததைப் போல தோன்றியது எந்த வெளிச்சமும் படாமல் ஏதாவது ஒரு இருளுக்குள் உடல் முழுவதையும் போர்த்திக்கொள்ள துடிக்கிறேன் நான். வாசலில் ஹாரன் சப்தம் நரம்பு முழுவதும் சுண்டிவிட்டாற் போல ஒரு நினைப்பு ஒருவேளை ரவியாக இருக்குமோ?! ஒரு எட்டு எடுத்து வைத்ததும் கையில்லாமல் அணிந்திருந்த உடையை சுவற்றுக் கண்ணாடிக் காட்ட அவசரமாய் ஒரு துப்பட்டாவை குளிர்சுரம் கண்ட நோயாளியைப் போல போர்த்திக்கொண்டேன். அக்கா அம்மா ஒரு கரண்டி சக்கரை கேட்டாங்க பக்கத்து வீட்டுப் பொடியன். பாறாங்கல்லாய் அழுத்திய பாரம் இறங்க சக்கரையை இரவல் கொடுக்கும் போதே இதே போல் இந்த உடலையும் பகட்டிற்காய் இரவல் கொடுத்த நிமிடங்கள் நான் எத்தனை தவிர்த்தும் வந்து போயின.
குற்றவுணர்வு என்று ஒன்று இல்லையென்றால் மனிதன் மரத்துப் போய் விடுவான். நானும் அப்படித்தான் முதன் முதலில் கிராமத்து வாசனையோடு வந்திறங்கிய போது இப்படி தனி வீடு எடுத்திருக்கவில்லை ஒரு ஹாஸ்டலில் தான் சாயம் போன பண்ணையார் மகளின் உடையோடு படிய வாரிய தலையோடு வட்ட பொட்டும் கண்ணாடி வளையலுமாய் வந்திறங்கிய என்னை யாரு இந்த காட்டான் என்று பார்த்தாள் சைத்தாலி. அவள் தான் என்னை என் வாழ்வை புரட்டிப் போட்ட சைத்தான். அவளின் ரத்தக் கோடுகள் வழிந்த வாயோரம் ருசித்த அதே கலவையை எனக்கும் புகட்டினாள். நான் மறுத்திருக்கலாம் ஆனால் புகைவண்டியை விட்டு இறங்கியபிறகு ஏதோ நடைபாதை கழிவைக் காண்பதைப் போல தான் என்னை கண்டதும் முகம் சுழித்தார்கள் மற்றவர்கள். அந்த சுழிப்பு சைத்தாலியின் வளமைக்கு அந்த வாழ்வின் அடித்தளத்திற்கு என்னை கூட்டிச் சென்றிருக்கலாம் என்று நினைக்கிறேன். இடுப்பில் தாவணியின் விலகலில் கொஞ்சிய கூந்தல் தோளோடு சுருங்கியது எண்ணெய் பசையின்றி மிளிர்ந்தது. அகண்ட கண்கள் மையிட்டு இன்னும் விரிந்தன, வலைவிரிக்கக் கற்றுக் கொண்டன. தாவணியின் சுடிதாரும் விலகி ஜீன்சும் டாப்சும் சில நேரம் கையில்லா குட்டைப் பாவடைகள். நெற்றிப் பொட்டு என ஒன்று இருப்பதையே மறந்தேன். கிட்டதட்ட நாகரிகம் என்ற பெயருக்கு கைம்பெண் என்ற மற்றொரு பெயரும் இருக்கும் போலும். கண்ட இடத்திலே நகை போட நீ யென்ன நகை அடுக்கிவைக்கிற அலமாரியா என்று கேட்ட சைத்தாலி தொப்புளின் சுருக்கத்தில் ஒரு வளையத்தைப் பதித்து விட்டாள்.
புடவையாக இருந்தாலும் தழைய தழைய இறக்கி அபாயகரமான வளைவுகளோடு வலம் வர வைத்தாள். இன்றைய ரவி கூட அவளின் தேர்வுதான். ஆபிஸ் லீவுன்னா ரூம்லேயே ஏண்டி அடைஞ்சி கிடக்கணும் வா வெளியே போகலாம் என் பாய் பிரண்டு டிக்கெட் எடுத்து வைச்சிருக்கான். உன் பாய்பிரண்ட் கூட நான் வந்து .... நீங்க ரொமன்ஸ் பண்றதைப் பார்த்து வயிறு எறியவா? என்னை விடவும் நிறத்திலும் உடலமைப்பிலும் சற்று மட்டமான சைத்தாலிக்கே நான்கைந்து ஆண்நண்பர்கள் என்னதான் உடை, உருவம் என்று மாற்றிவிட்டாலும் இந்த ஒருவிஷயத்தில் மட்டும் இன்னும் நான் மசியவில்லை. அதுக்கு ஒரு ஐடியா இருக்கு என் பாய்பிரண்டோட பிரண்ட் ஒருத்தன் வர்றான் அவன் கூட நீ ? ஏய் சைத்தாலி அப்பப்போ சைத்தான் மாதிரி பேசாதே? யாருன்னே தெரியாதவன் கூட போய்....எப்படி
அதுதான்டி கிக்கு? வற்புறுத்தலின் இளக்கம் கொண்டது மனம் கூடவே வெளியே சொல்ல முடியாத ஒரு ஆசையின் அரிப்பும்தான். முக்கால் கிணறு தாண்டியபிறகு முழுவதாய் குதிப்பதில் என்ன வந்துவிடப்போகிறது என்ற எண்ணம். அன்றைய தினத்தின் மாலை எனக்கு தியேட்டரின் இருள் கூச்சத்தை விடச் சொல்லிக்கொடுத்தது. ரவியின் ஆண்மையின் அருகாமையின் வெப்பத்தை தகிக்கச் சொல்லிக்கொடுத்தது. வாயோடு வாய் வைத்து சுவைத்த ஐஸ்கீரிமின் சூடு பிடித்திருந்தது. எல்லாவற்றையும் விட வெறும் இருபதாயிரம் ரூபாய் சம்பளத்தில் வீட்டுக்கும் அனுப்பி, பகட்டாய் உடுத்தி, மற்ற செலவுகளையும் எப்படி கட்டுப்படுத்த வேண்டும் என்ற டிரிக்கையும் கற்றுக்கொள்ள வைத்தது. ரவி என் கைப்பையில் இருபது ஐநூறு ரூபாய்களை வைக்கும் போது எனக்கு மட்டுமல்ல சைத்தாலிக்கே ஆச்சரியம்தான்!
ஐ லக்யூ பேபி என்று பிதற்றி காற்றில் ஒரு முத்தத்தைப் பறக்கவிட்டு சென்றவனின் வார இறுதி மாலை முழுக்க என்னுடன்தான் கழிந்தது. நான்கு வருடங்களில் இரண்டு மூன்று முறை வயிற்றைச் சுத்தம் செய்த போது கூட அந்த அருகாமைக்கு மனம் ஏங்கத்தான் செய்தது. உயரக் கட்டிய சீட்டுக்கட்டு மாளிகை நூலறந்த பட்டமாய் சிதறியதைப் போல அவன் நீட்டிய கிளிப்பிங்க்ஸில் நான் குழந்தையாய் கொஞ்சிய நிமிடங்கள் சிறைபிடிக்கப்பட்டு இருந்தது. வேண்டாம் வேண்டாம் என்று கொஞ்சித் தீர்த்த நிமிடங்களை எல்லாம் கைபேசியின் கோப்பகளில் குவித்து வைக்கப்பட்டு, இறுகியிருந்த உடல் இளகியது எதற்கு? என்ற கேள்வியைக் கேட்கும் போதே நாக்கு மேலே ஒட்டிக் கொண்டது. எல்லாம் அதுக்குத்தான் கண்ணடித்தான் சைத்தாலியிடம் சொல்லும் போதே அவள் அழகாக தோளைக் குலுக்கிவிட்டாள். இதுக்குத்தான் பிரமிள் நான் தனியா வீடு எல்லாம் எடுக்கவேண்டாம் பாதுகாப்பு இல்லைன்னு சொன்னேன் இப்போ பாரு அவன் எல்லாத்தையும் முடிச்சிட்டு ... நானே பயந்து போயிருக்கேன் சைத்தாளி நீ வேற.... இப்போயென்ன அவனும் அவன் நண்பர்களும்தானே பேசாம... அதற்கு மேல் அவள் பேசிய வார்த்தைகளை கேட்க முடியவில்லை, ரவியுடன் மட்டும்தான் என்... நான் ஒண்ணும் ஒரு பீப் வார்த்தை அங்கே விழுந்தது
இது உன் பிரச்சனை நான் கூடத்தான் பாய் பிரண்டு வைச்சிருக்கேன் இப்படியா மாட்டிக்கிறேன். ரவி கூட அத்தனை இழையும் போதே இப்படி ஏதாவது ஆகுன்னு நினைச்சேன் இதிலெல்லாம் என்னை இழுக்காதே அப்பறம் நாளைக்கே நான் வீட்டை காலி பண்ணிக்கிறேன். நாளைக்கேவா? ஆமாம் என்ன கொஞ்சம் செலவாகும் பரவாயில்லை தன் இதழ்களை மேலும் மினுமினுக்க செய்துவிட்டு போயேவிட்டாள். மீண்டும் மீண்டும் ரவியிடம் இருந்து குறுஞ்செய்திகள் அவை நீ குற்றம் செய்தவள் என்று என் தவறுக்கு கட்டியம் வாசிப்பதைப் போல இருந்தது. யோசனைகள் புழுவாய் குடைந்தது என்ன செய்யலாம் ரவியிடம் சரியென்று சொல்ல மனம் கூசியது. கடவுளே நான் ஒண்ணும் அத்தனை மோசமானவளில்லையே?! நினைக்கும் போதே வயிற்றைக் குமட்டியது. குடலே வெளியே வந்துவிடும் அளவிற்கு வாந்தி. தலைசுற்றிய நிமிடமே கடவுளே தேதி தள்ளிப்போயிருக்கிறது என்று உணர்ந்தேன். இதைச் சொன்னால் ரவி கொஞ்சம் இளகுவானா? அத்தனை குறுஞ்செய்திக்கும் ஒரே பதிலாய் நாள் தள்ளிப்போயிருக்கு ரவி என்றேன்.
நாளைய விருந்தில் அது தானா போயிடும் என்னும் போதே அடிவயிற்றில் கத்தியினைச் சொருகியதைப் போல ஒரு உணர்ச்சி, ச்சீ அவனின் அணைப்பு, முத்தம், ஆலிங்கனம் எல்லாம் இந்த அடிவயிற்றுக் கீழ்சதைக்குத்தான் என்று புரிந்தபோது இந்த சதைப் பிண்டத்தின் மேல் முதன் முறையா வெறுப்படைந்தேன் நான். தாவணி விலகுது கண்டவனும் பார்க்கறான் துணியை ஒழுங்கா போடு என்ற அன்னையின் குரல், புது இடம் புது மனுஷங்கடி கண்ணுக்குள்ளே பொத்தி வளர்த்த உன்னை கொடூர பறவைங்க இருக்கிற காட்டுக்கு அனுப்பறேன் பார்த்து சூதானமா நடந்துக்கோடி என்று அறிவுரை சொல்லிய அம்மா சைத்தாலியைப் போல் கல்லைக் கரைக்கிற சைத்தான் இருக்கும் என்று சொல்லவில்லை, அவளே அறிந்திருக்க மாட்டாளோ என்னவோ....
காலையிலோ நடுநிசியிலோ அரைபோதையில் கலவையான உணர்வுகளோடு வரும் சைத்தாலி என்னை நரம்புகளை துண்டித்த நிலையில் கண்டால் என்னவாக போகிறாளோ? ரவியையும் வரச்சொல்ல வேண்டும். இதோ காமத்தின் தேடல் பரிசாக அவன் அளித்த கைச்சங்கிலி முழுவதும் ரத்தம் கோலம் போடப்பட்டு இருப்பதைக் கண்டால் அப்போதும் காமுறுவாயா என்று கேட்க வேண்டும். செத்து மடிந்த உடல் காத்திருக்கிறது வெட்கமின்றி உன் நண்பர்களுடன் வந்து கூடிவிட்டு போ என்று அழைக்கவேண்டும் அவனை அதே குறுஞ்செய்தியின் மூலம் இனியும் நேரம் கடத்த போவதில்லை நிமிடங்களை வீணடிக்கப்போவதில்லை, இதோ காற்றில் நான் கலக்கப்போகிறேன் இனிமேல் என் படங்களும், காணொளிகளும் அதே காற்றில் என்னை வந்து சந்திக்கட்டும் ரவி.....மனித டிராகுலாக்களின் ரத்தப்பற்கள் என் உடலை சுவைக்கத் தொடங்கி விட்டது. இந்த பிரமிளா பைத்தியமாகவில்லை என்ற நினைப்பை மட்டும் அந்தரங்கமாய் சுமந்து கொண்டு வருகிறேன்...இல்லையில்லை போகிறேன்.
அடுத்த பகுதி - "அந்த நிமிடம் வரையிலும் ஆண் என்ற அகம்பாவம் கொழுந்து விட்டு எரிந்த தீயைப்போல.." - லதா சரவணன் எழுதும் இப்படியும் இவர்கள் #22